கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்கள்

அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை அமைக்க தேவையான அடிப்படையாக வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தப்படுவதை வடபகுதி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மக்களின் பாரம்பரிய பயிர் நிலங்களாக இருந்த கோட்டைகேணி, குஞ்சிக்கால்வேலி, தீமுந்தல், வெள்ளைகல்லடி ஆகிய பிரதேசங்களை உள்ளிடக்கி, பாதுகாக்கப்பட்ட வானப்பகுதியாக அறிவித்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் தமது காணிகளுக்கு சென்று பயிர் செய்கையில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பயிர்செய்கைக்காக பயன்படுத்திய பழைய கிணறுகளும் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

தமிழ் மக்களின் காணிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கம், தமிழ் மக்களின் பயிர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் கடும் வெறுப்பில் இருந்து வருவதாகவும் ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.