யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 505வது குறுக்கு வீதியை மூடுவதற்கு மாநகர சபை எடுத்த முயற்சி அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்காலிகமாக கைவிடப்பட்டது. வீதியை மூட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடற்கரைக்கு செல்வதற்கான குறுக்கு வீதி யாழ். மாநகர சபையினரால் 2015இல் திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. எனினும் 2019 இல் இந்த வீதியை மூடும் உத்தரவுக் கடிதம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.
யாழ்.கடற்கரையை அண்டிய குறுக்கு வீதிகளில் பெரும்பாலாவை யுத்தகாலத்தின் பின்னரும் மூடப்பட்டே இருந்தன. இது கரையோரமாக முகாமிட்டிருக்கும் கடற்படையினரின் பாதுகாப்பிற்காகவேயாகும்.
பொது மக்கள் நடமாட்டம் இருக்குமானால், அந்தப் பகுதியில் கடற்படையினர் முகாம் அமைப்பது சிரமமாக இருக்கும் என்ற நோக்கிலேயே கடற்படையினர் பொது மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காகவும், அந்தப் பகுதி கடலினால் தமது முகாமிற்கு வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாகவே யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டத்தை இல்லாமல் செய்தனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள மாங்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதும், அதை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் அரச திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காகவே இந்தக் காடழிப்பு மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அதுவும் மாவட்ட எல்லைக் கிராமங்களில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அவதானிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், இந்தக் காடழிப்பிற்கு அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தை அண்மித்த பகுதியில் நடந்த சுற்றி வளைப்பொன்றில், அவர் கைது செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு 26 வருடங்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து சில காலம் இயங்கிய மகேந்திரன், இயக்கத்தை விட்டு, விலகி தனிப்பட்ட வாழ்வில் இருந்தபோதே கைதாகியுள்ளார்.
இவருக்கு எதிராக அப்போது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்துடன் 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இராணுவத்தினருடன் இணைந்து துரோகமிழைத்த ஆள்காட்டி ஒருவரே மகேந்திரனை காட்டிக் கொடுத்திருப்பதாக அழுதுலர்ந்து சிவந்த கண்களுடன் அவரது மருமகள் மெரீனா அந்த ஊடகத்தில் குறிப்பிடுகிறார்.
இப்போது ஆட்காட்டிகள் எல்லோரும் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளைக் காட்டிக் கொடுத்த டக்ளஸ் தேவானந்தாக்களும் பாராளுமன்றத்தில் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்க்கை குறித்து அழுது கண்ணீர் வடிக்கிறார்கள்.
உண்மையில் இதுவொரு விசித்திர காலம். ஆட்காட்டிகள் ஏன் தலையை ஆட்டினார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவிகள் அன்றைக்கு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். சுகயீனமான அம்மாவுக்கு மாத்திரைகள் வாங்கச் சென்ற மகனை, இராணுவத்தினர் குண்டு வைத்திருந்தான் என கைது செய்தனர். மட்டக்களப்பில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், வீடு திரும்பவில்லை.
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று அம்மாவுக்கு தகவல் கிடைத்தது. திருமணம் செய்த எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென பிள்ளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். எத்தனையோ தாய்மாரின் இருதயங்கள் நொருங்கி உடைந்து போயின. எத்தனை மனைவிமாரின் நெஞ்சங்கள் வெடித்துப்போயின. எத்தனை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் உருகிவிட்டன. எமது தெருக்களில் எத்தனை நாட்கள், தாய்மார்கள் போராட்டம் நடாத்தியிருக்கிறார்கள். வீதிகளில் விழுந்து புரண்டழுது தமது பிள்ளைகளை விடுதலை செய்யக் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அத்துலிய இரத்தின தேரர் கண்டியில் போராட்டம் நடத்திய போதே சிங்கள தேசம் மாத்திரமல்ல, சிங்கள அரசே ஆடியது. இரத்தின தேரரின் கோரிக்கை சிங்களத்தின் கோரிக்கையானது. ஆனால் எமது தாய்மார்களும் குழந்தைகளும் பெண்களும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கச் சொல்லி எத்தனை போராட்டங்களை செய்துவிட்டனர். ஆனந்த சுதாகரனின் மனைவி, அவரை தேடித் தேடியே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.
கதைகளிலும் காவியங்களிலும் கேட்டதுபோலொரு மரணம். சிங்களமும் அசையவில்லை. நாமும் அசையவில்லை. அவரது பிஞ்சுக் குழந்தைகள் சிறைச்சாலை வண்டியில் ஏறிய கொடூரக் காட்சியை பார்த்து உலகத் தமிழர்களே கண்ணீர் விட்டனர். சிங்கள தேசத்திற்கு இரக்கம் வரவே இல்லை. தமது தந்தையை விடுவிக்குமாறு தாயை இழந்த குழந்தைகள் கோரிக்கை விடுத்தனர். 2018 சித்திரை வருடப் பிறப்பில் தந்தை வீட்டுக்கு வருவார் என்று சொல்லி அனுப்பட்டார்கள் அந்தக் குழந்தைகள்.
இன்றைக்கு ஒரு வருடமும் கடந்து விட்டது. இன்னும் மைத்திரியின் நெஞ்சம் இரங்கவில்லை. இன்னும் ரணிலின் இருதயத்தில் ஈரம் வரவில்லை. இதுவே ஓர் சிங்களக் குழந்தை எனில், சிங்கள அரசு தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதுபோல் துடித்திருக்கும். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஈழத் தமிழ் மக்கள் என்ற பாராமுகம் ஒருபுறம். மற்றைய புறத்தில் அவர்களை புலி என்று கூறி அரசியல் செய்கிற கொடுமையும் நடக்கிறது. மைத்திரி புலிகளை விடுவிக்கப் பார்க்கிறார் என்று மகிந்த ராஜபக்ச பிரசாரம் செய்கிறார். மறுபறுத்தில் தமிழ் அரசியல் கைதிகளை – பயங்கரவாதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன சொல்லி அரசியல் நடத்துகிறார்.
மகிந்த என்ற கொடுங்கோலனின் அரசாட்சி மிகவும் கொடுமையானது என்றும் சர்வாதிகாரமானது என்றும் இந்த உலகமே அறியும். எனினும் தனது அரசியலுக்காகவும் சர்வதேச அரசியலை சமாளிக்கவும் 12ஆயிரம் விடுதலைப் புலிகளை விடுவித்த மகிந்தவைக் காட்டிலும் மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசாங்கம் கொடுமையானது என்பதை புரிந்துகொள்ளுகின்ற இடம் இதுதான். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறுப்பற்ற விதத்திலும் பேரினவாத அரசியலுக்கு தீனி போடுகிற விதத்திலும் பேசி, அப்பாவிகளை தண்டிக்கும் இந்த அரசு எத்தகைய கொடுமையான அரசாக இருக்க வேண்டும்?
கருணா அம்மானும், கேபியும் வெளியில் உள்ள நிலையில், அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் ஏன் சிறையிருக்க வேண்டும்? விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் கொடுத்தவர்களும் அப்பாவிகளும் ஏன் அநியாயமாக தண்டிக்கப்பட வேண்டும். போரில் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு என்று அரசு அறிவித்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்று கூறி தடுப்பில் வைத்திருந்து விடுவித்ததுபோல அவர்களையும் விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படியில்லாமல் இவர்களை மாத்திரம், ஏன் வஞ்சிக்க வேண்டும்? இதனால் எத்தனை மக்கள், எத்தனை குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன?
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழும்பு மகசீன் சிறைச்சாலை சென்றுள்ளார். அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 95 சிறைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பேர் ஆயுள் கைதிகள். தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், தம்மை போராட்டங்களை கைவிடுமாறு கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பின்னர் அங்கு வருவதில்லை என்றும் தம்மை கவனிப்பதில்லை என்றும் தமது விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், பாரிய உண்ணாவிரதப் போராட்டங்கள் சிறைகளில் முன்னெடுக்கப் பட்டது. அப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், கால அவகாசத்தை வழங்கி கைதிகளின்போராட்டத்தை முடிவுபடுத்தி வைத்தார். எனினும் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடி ஒன்று தீர்த்து வைக்கப்பட்டதே தவிர, தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலையும் கிடைக்கவில்லை. நீதியும் கிடைக்கவில்லை. வழமை போன்று கள்ள மௌனத்தால் தமிழ் அரசியல் கைதிகளையும் தமிழ் மக்களையும் மைத்திரி ஏமாற்றியுள்ளார். இங்கும் சாதுரியமற்ற செயற்பாடுகள் அவர்களை தொடர்ந்து சிறையிலடைத்தது.
இன்று இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் தமிழ் தலைமைகள், அரசியல் கைதிகளின் விடுதலையையும் ஒரு முக்கிய நிபந்தனையாக முன்வைத்து அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவின் காலத்தைப் போலவே பாராளுமன்றத்தில் நின்று அரசியல் கைதிகளின் விபரத்தைக் கூறி, அரசை இறைஞ்சுகின்ற படலம் இன்னும் எதுவரையில் தொடரப் போகின்றது? அதற்கு ஏன் அரசிற்கு ஆதரவளிக்க வேண்டும்? ஒன்றில் அரசுக்கு ஆதரவு கொடுத்து, இவற்றை சாதிக்க வேண்டும். அல்லது அரசை எதிர்த்து சர்வதேச அரங்கில் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மனித உரிமை பின்னணி குறித்து எடுத்துரைக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் பெரும் மனித உரிமை மீறலானது என்று மங்கள சமர வீர இதே அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஐ.நாவில் கூறினார்.
அதே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்று தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதியான சர்வதேச விசாரணையற்ற நிலையில், பயங்கரவாத சட்டங்களும் மனித உரிமை மீறல்களும் அரசில் கைதிகளின் விடுதலை மறுப்பும் தொடர்கின்ற சூழலில் இலங்கை அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைவாசத்தை நாமே பரிசளிப்பதேயாகும். அரசால் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாமும் கைவிட்டிருக்கிறோம் என்பதை தான் இந்த விசித்திரகாலம்
உணர்த்துகிறது
எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் (27) 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம் (26.06.19 ) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள் .
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில் ,
இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிருக்கின்றது . கடந்த 40 ஆவது அமர்விலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை நாங்கள் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் உணரவேண்டும் .
அந்தவகையில் எதிர்வரும் 30 .06 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தவுள்ளோம் . அன்றையதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் கவனயீர்ப்பில் எமக்காக குரல்கொடுக்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஆதரவுக்காக வேண்டிநிற்கின்றோம் .அனைவரும் வருகைதந்து போராட்டத்தில் பங்குபற்றி எமக்கான நீதியை பெற்றுத்தருவத்துக்கு குரல்கொடுக்குமாறு வேண்டுகின்றோம் .
நாங்கள் இன்று பத்து ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி வருகின்றோம். எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகழும் உண்ணாவிரம் இருக்கவும் இல்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவும் இல்லை எங்களைப்பற்றி எடுத்து கதைப்பதற்கு கூட நாதியற்றவர்களாக நாம் இருக்கின்றோம்.
இந்நிலையில், அண்மையில் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலக உயர்வுக்காக யாராரோ போராடி இருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கள் அரசியல் பிரமுகர்கள் அந்த பிரச்சனையினை கையில் எடுத்து பேசினார்கள்.பிரதமருடன் பேசி அவர் சொன்ன தீர்வை பெற்றுக்கொண்டு கல்முனைக்கு ஓடினார்கள் அதேபோன்று ஏன் 10 ஆண்டுகளாக நீதியை கோரியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தினையும் மேற்கொண்டுவரும் எமக்காகவும் எமது போராட்டத்துக்காகவும் இதே பிரதமருடனும் அரசுடனும் பேசி போராட்டத்திற்கான நீதியினை அரசிடம் இருந்து ஒரு சின்ன பதிலாவது பெற்றுக்கொண்டு எம்மிடம் எமது பிரதிநிதிகள் வரவில்லை ?? எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்கள்,படையினரிடம் ஒப்படைத்துள்ளோம்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்ட வித்தல் எங்கள் உறவுகள் காணப்படுகின்றார்கள்.
இவை அனைத்தும் எங்கள் அரசியல் தலைமைகளுக்கு தெரியும் அவர்கள் ஒரு சின்ன ஆறுதல் கூட எங்களுக்கு கூறவில்லை ஆனால் அவர்கள் சொல்கின்றார்கள் அதற்காகத்தான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கொண்டுவந்துள்ளோம் என்று சொல்கின்றார்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் வந்த அந்த அலுவலகம் எம்மை ஏமாற்றுவதற்க்காகவும் உலகை ஏமாற்றுவதற்க்காகவும் கொண்டுவரப்பட்டது அதற்குள் எங்களை கொண்டுசென்று திணிக்ககூடாது.
உண்மையாக எங்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் எம்மையும் கவனியுங்கள் எங்கள் வலியுடனும்,வேதனையுடனும் இதனை தெரியப்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ நல்லதல்ல. உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களிடைய பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை நாங்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்முனைப் பிரச்சினைப் பொறுத்தவரையில் இந்த அரசின் காலத்தில் அதாவது இப்போது வந்த பிரச்சினை அல்ல. இது மிக நிண்ட காலமாக குறிப்பாக பிரேமதாச காலம் தொட்டு இருந்த வருகின்ற பிரச்சினை தான்.
ஆயினும் இதை எதிர்த்து நிற்கக் கூடிய முஸ்லிம் சமூகத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் நேரடியாக வரப்போவதில்லை. அவ்வாறானன பாதிப்புக்கள் அவர்களுக்கு எதுவுமே கிடையாது.
இருந்தாலும் அந்தப் பகுதிகளிலே ஒரு தமிழ்ப் பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டு செயல்ப்படுவதன் மூலம் அங்கு தங்களுடைய இருப்பை பரவலாக்கி கொள்வதற்கு அல்லது ஆக்கிரமித்துக் கொள்வதற்கு தடைகள் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் அவர்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தான் நான் கருதுகின்றேன்.
உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. உதாரணத்திற்கு பார்த்தீர்களானால் கிழக்கில் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம்.
கிழக்கு மாகாண சபையில் எங்களிடம் 11 அங்கத்தவர்கள் இருந்த நிலையில் அவர்களிடம் 7 அங்கத்தவர்கள் இருந்த போதிலும் கூட நாங்கள் அந்த நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணத்தையே விட்டுக் கொடுத்தோம். ஆனால் இந்த ஒரு சிறிய பிரதேச செயலகப் பகுதியை அதாவது கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகப் பகுதியை விடுவிதற்கு அல்லது உருவாக்குவதற்கு அவர்கள் எவ்வளவோ தடைகளை ஏற்படுத்துகின்றார்கள்.
இதுவொரு நல்ல விசயம் அல்ல. அவர்கள் தரக் கூடிய தடைகள் என்பது இன்றைக்கு பாரதூரமான நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. இன்று பௌத்த துறவிகள் ஞானசார தேரர் போன்றவர்கள் இன்று அதிலே தலை வைத்து இதை ஒரு பூதாகாரமான பிரச்சினையாக ஆக்குவதற்கான அடித்தளங்கள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது உண்மையில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. ஆகவே இதைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைத்து எவ்வளவு விரைவாக இதனைத் தீர்க்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஆகவே, கல்முனை விவகாரம் மட்டுமல்லாது பல விடயங்கள் தொடர்பிலும் இந்த அரசினாலும் கடந்த அரசாங்கங்களினாலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் என்னுடைய அறிவிற்கு அந்த வாக்குறுதிகளை முழுமையாக இவர்கள் நிறைவேற்றியதாக காணவில்லை. ஆனாலும் கல்முனை விடயத்தில் தற்போது வாக்குறுதி வழங்கப்பட்டள்ளது. அதே நேரம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் எவ்வளவு தூரம் இதனை இழுத்தடிக்க முடியோ அவ்வளவு தூரம் அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. ஆகவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் இது நடைபெறுமா இல்லையா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும். அவ்வாறு நடைபெறாது விட்டால் ஒரு மிகப் பெரிய தேவையற்ற பிரச்சினை உருவாகுவதற்கு துணையாக நிற்கப்போகின்றார்கள் என்று தான் நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.
நான்கு கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) அறிவித்தார்.
தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியையும் குறித்து அனுப்பியிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நால்வருக்கே மரண தண்டனை நிறைவேற்றப் படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுபற்றிக் கைதிகளுக்கோ அவர்களின் உறவினர்களுக்கோ இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்தால், மேன்முறையீடு செய்யக்கூடும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி –ரெக்லாவிற்கு அண்மையில் உள்ள கிராமம் முற்றாக சேதமுற்றது. இந்தக் கிராமத்தை மீளமைப்புச் செய்வதற்கு 50,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை அன்பளிப்பாக வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இரண்டு அரசாங்கங்களின் நல்லுறவை மேலும் விஸ்தரிப்பதற்காகவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு தொடங்கி 60 வருட பூர்த்தியை முன்னிட்டும் இந்த நன்கொடை வழங்கப்படுவதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் எவ்வளவோ கிராமங்கள் வசதிகள் அற்றதாக இருக்கும் போது, கியூபாவில் உள்ள கிராமத்திற்கு இந்த உதவியை அன்பளிப்பாக வழங்க சிறிலங்கா அரசு முன்வந்திருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சறோஜினி சிவச்சந்திரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது, நல்லாட்சியை ஏற்படுத்துவோம், மனித உரிமைகளை மதித்து நடப்போம் என குறிப்பிட்டனர். ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் சரியாக இயங்கவில்லை. நல்லிணக்கம் ஏற்படவில்லை. அத்துடன் பொலிஸ் நிலையங்களும், சிறைச்சாலைகளிலும் அதிகளவான சித்திரவதைகள் நடைபெறுகின்றன என்றார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ர.கனகராஜ் பேசும் போது, சட்டத்திற்கு முரணான கைதுகள் நடைபெறுகின்றன. சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக பொலிசாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றார்.
அதேபோல பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் பகிடிவதைகளும் சித்திரவதைகளாகவே அமைகின்றன. மாணவர்கள் இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்வில் ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவி சூரியகுமாரி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது சித்திரவதைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்திய உளவு அமைப்பான றோ அமைப்பிற்கு சுமந்தகுமார் கோயல் என்பவரையும் IB அமைப்பிற்கு அரவிந்த்குமார் என்பவரையும் தலைவராக அமைச்சரவையின் நியமனக்குழு, நியமித்துள்ளது.
தற்போது றோ அமைப்பின் தலைவராக உள்ள அனில்குமார் தஸ்தானா மற்றும் IB அமைப்பின் இயக்குநராக உள்ள ராஜீவ் ஜெயின் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதாவது ஜுன் 29 அன்று ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அமைச்சரவையின் தலைவராக இருக்கும் மோடி, இந்திய உளவுத்துறையில் ஒன்றான றோ அமைப்பிற்கும், IB புலனாய்வு அமைப்பிற்கும் புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சமந்த் கோயல் 1984ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரி ஆவார். கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சேஜிக்கல் ஸ்ரைக் ஆகியவற்றைத் திட்டமிட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்தவர்களில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் குமார் 1984ஆம் ஆண்டு அசாம், மேகாலயா பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரி ஆவார். பீகார் பிரிவு உளவுத்துறை தலைவராக இருந்தவர். நக்ஸல் விவகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கவனித்துள்ளார். பயங்கரவாதிகளை அடக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பை மேற்கு பகுதி கடலோர காவல்படை கூடுதல் DGP யாக இருந்தவர்.