முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு – அரச அதிகாரிகள் உடந்தை

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள மாங்குளம், பனிச்சங்குளம் ஆகிய  பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதும், அதை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன்   அரச திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காகவே இந்தக் காடழிப்பு மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அதுவும் மாவட்ட எல்லைக் கிராமங்களில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அவதானிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், இந்தக் காடழிப்பிற்கு அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.