கைது செய்யப்படுவோர் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர் – சறோஜினி சிவச்சந்தரன்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சறோஜினி சிவச்சந்திரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது, நல்லாட்சியை ஏற்படுத்துவோம், மனித உரிமைகளை  மதித்து நடப்போம் என குறிப்பிட்டனர். ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் சரியாக இயங்கவில்லை. நல்லிணக்கம் ஏற்படவில்லை. அத்துடன் பொலிஸ் நிலையங்களும், சிறைச்சாலைகளிலும் அதிகளவான சித்திரவதைகள் நடைபெறுகின்றன என்றார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ர.கனகராஜ் பேசும் போது, சட்டத்திற்கு முரணான கைதுகள் நடைபெறுகின்றன. சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக பொலிசாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றார்.

அதேபோல பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் பகிடிவதைகளும் சித்திரவதைகளாகவே அமைகின்றன. மாணவர்கள் இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வில் ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவி சூரியகுமாரி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது சித்திரவதைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.