நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் – தீபச்செல்வன்

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தை அண்மித்த பகுதியில் நடந்த சுற்றி வளைப்பொன்றில், அவர் கைது செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு 26 வருடங்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து சில காலம் இயங்கிய மகேந்திரன், இயக்கத்தை விட்டு, விலகி தனிப்பட்ட வாழ்வில் இருந்தபோதே கைதாகியுள்ளார்.

இவருக்கு எதிராக அப்போது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்துடன் 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இராணுவத்தினருடன் இணைந்து துரோகமிழைத்த ஆள்காட்டி ஒருவரே மகேந்திரனை காட்டிக் கொடுத்திருப்பதாக அழுதுலர்ந்து சிவந்த கண்களுடன் அவரது மருமகள் மெரீனா அந்த ஊடகத்தில் குறிப்பிடுகிறார்.tt 2 நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் - தீபச்செல்வன்

இப்போது ஆட்காட்டிகள் எல்லோரும் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளைக் காட்டிக் கொடுத்த டக்ளஸ் தேவானந்தாக்களும் பாராளுமன்றத்தில் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்க்கை குறித்து அழுது கண்ணீர் வடிக்கிறார்கள்.

உண்மையில் இதுவொரு விசித்திர காலம். ஆட்காட்டிகள் ஏன் தலையை ஆட்டினார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவிகள் அன்றைக்கு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள்.  சுகயீனமான அம்மாவுக்கு மாத்திரைகள் வாங்கச் சென்ற மகனை, இராணுவத்தினர் குண்டு வைத்திருந்தான் என கைது செய்தனர். மட்டக்களப்பில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று அம்மாவுக்கு தகவல் கிடைத்தது. திருமணம் செய்த எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென பிள்ளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். எத்தனையோ தாய்மாரின் இருதயங்கள் நொருங்கி உடைந்து போயின. எத்தனை மனைவிமாரின் நெஞ்சங்கள் வெடித்துப்போயின. எத்தனை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் உருகிவிட்டன. எமது தெருக்களில் எத்தனை நாட்கள், தாய்மார்கள் போராட்டம் நடாத்தியிருக்கிறார்கள். வீதிகளில் விழுந்து புரண்டழுது தமது பிள்ளைகளை விடுதலை செய்யக் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அத்துலிய இரத்தின தேரர் கண்டியில் போராட்டம் நடத்திய போதே சிங்கள தேசம் மாத்திரமல்ல, சிங்கள அரசே ஆடியது. இரத்தின தேரரின் கோரிக்கை சிங்களத்தின் கோரிக்கையானது. ஆனால் எமது தாய்மார்களும் குழந்தைகளும் பெண்களும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கச் சொல்லி எத்தனை போராட்டங்களை செய்துவிட்டனர். ஆனந்த சுதாகரனின் மனைவி, அவரை தேடித் தேடியே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.Sangeetha 8936 நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் - தீபச்செல்வன்

கதைகளிலும் காவியங்களிலும் கேட்டதுபோலொரு மரணம். சிங்களமும் அசையவில்லை. நாமும் அசையவில்லை. அவரது பிஞ்சுக் குழந்தைகள் சிறைச்சாலை வண்டியில் ஏறிய கொடூரக் காட்சியை பார்த்து உலகத் தமிழர்களே கண்ணீர் விட்டனர். சிங்கள தேசத்திற்கு இரக்கம் வரவே இல்லை. தமது தந்தையை விடுவிக்குமாறு தாயை இழந்த குழந்தைகள் கோரிக்கை விடுத்தனர். 2018 சித்திரை வருடப் பிறப்பில் தந்தை வீட்டுக்கு வருவார் என்று சொல்லி அனுப்பட்டார்கள் அந்தக் குழந்தைகள்.

இன்றைக்கு ஒரு வருடமும் கடந்து விட்டது. இன்னும் மைத்திரியின் நெஞ்சம் இரங்கவில்லை. இன்னும் ரணிலின் இருதயத்தில் ஈரம் வரவில்லை. இதுவே ஓர் சிங்களக் குழந்தை எனில், சிங்கள அரசு தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதுபோல் துடித்திருக்கும். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஈழத் தமிழ் மக்கள் என்ற பாராமுகம் ஒருபுறம். மற்றைய புறத்தில் அவர்களை புலி என்று கூறி அரசியல் செய்கிற கொடுமையும் நடக்கிறது.  மைத்திரி புலிகளை விடுவிக்கப் பார்க்கிறார் என்று மகிந்த ராஜபக்ச பிரசாரம் செய்கிறார். மறுபறுத்தில் தமிழ் அரசியல் கைதிகளை – பயங்கரவாதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன சொல்லி அரசியல் நடத்துகிறார்.

மகிந்த என்ற கொடுங்கோலனின் அரசாட்சி மிகவும் கொடுமையானது என்றும் சர்வாதிகாரமானது என்றும் இந்த உலகமே அறியும். எனினும் தனது அரசியலுக்காகவும் சர்வதேச அரசியலை சமாளிக்கவும் 12ஆயிரம் விடுதலைப் புலிகளை விடுவித்த மகிந்தவைக் காட்டிலும் மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசாங்கம் கொடுமையானது என்பதை புரிந்துகொள்ளுகின்ற இடம் இதுதான். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறுப்பற்ற விதத்திலும் பேரினவாத அரசியலுக்கு தீனி போடுகிற விதத்திலும் பேசி, அப்பாவிகளை தண்டிக்கும் இந்த அரசு எத்தகைய கொடுமையான அரசாக இருக்க வேண்டும்?

கருணா அம்மானும், கேபியும் வெளியில் உள்ள நிலையில், அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் ஏன் சிறையிருக்க வேண்டும்? விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் கொடுத்தவர்களும் அப்பாவிகளும் ஏன் அநியாயமாக தண்டிக்கப்பட வேண்டும். போரில் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு என்று அரசு அறிவித்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்று கூறி தடுப்பில் வைத்திருந்து விடுவித்ததுபோல அவர்களையும் விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படியில்லாமல் இவர்களை மாத்திரம், ஏன் வஞ்சிக்க வேண்டும்? இதனால் எத்தனை மக்கள், எத்தனை குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன? karuna and mahinda நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் - தீபச்செல்வன்

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழும்பு மகசீன் சிறைச்சாலை சென்றுள்ளார். அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 95 சிறைக்கைதிகள் உள்ளனர். அவர்களில்  இரண்டு பேர் ஆயுள் கைதிகள். தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், தம்மை போராட்டங்களை கைவிடுமாறு கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பின்னர் அங்கு வருவதில்லை என்றும் தம்மை கவனிப்பதில்லை என்றும் தமது விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.ranil sampanthan நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் - தீபச்செல்வன்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், பாரிய உண்ணாவிரதப் போராட்டங்கள் சிறைகளில் முன்னெடுக்கப் பட்டது. அப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், கால அவகாசத்தை வழங்கி கைதிகளின்போராட்டத்தை முடிவுபடுத்தி வைத்தார். எனினும் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடி ஒன்று தீர்த்து வைக்கப்பட்டதே தவிர, தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலையும் கிடைக்கவில்லை. நீதியும் கிடைக்கவில்லை. வழமை போன்று கள்ள மௌனத்தால் தமிழ் அரசியல் கைதிகளையும் தமிழ் மக்களையும் மைத்திரி ஏமாற்றியுள்ளார். இங்கும் சாதுரியமற்ற செயற்பாடுகள் அவர்களை தொடர்ந்து சிறையிலடைத்தது.

இன்று இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் தமிழ் தலைமைகள், அரசியல் கைதிகளின் விடுதலையையும் ஒரு முக்கிய நிபந்தனையாக முன்வைத்து அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவின் காலத்தைப் போலவே பாராளுமன்றத்தில் நின்று அரசியல் கைதிகளின் விபரத்தைக் கூறி, அரசை இறைஞ்சுகின்ற படலம் இன்னும் எதுவரையில் தொடரப் போகின்றது? அதற்கு ஏன் அரசிற்கு ஆதரவளிக்க வேண்டும்? ஒன்றில் அரசுக்கு ஆதரவு கொடுத்து, இவற்றை சாதிக்க வேண்டும். அல்லது அரசை எதிர்த்து சர்வதேச அரங்கில் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மனித உரிமை பின்னணி குறித்து எடுத்துரைக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் பெரும் மனித உரிமை மீறலானது என்று மங்கள சமர வீர இதே அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஐ.நாவில் கூறினார்.

அதே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்று தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதியான சர்வதேச விசாரணையற்ற நிலையில், பயங்கரவாத சட்டங்களும் மனித உரிமை மீறல்களும் அரசில் கைதிகளின் விடுதலை மறுப்பும் தொடர்கின்ற சூழலில் இலங்கை அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பது தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைவாசத்தை நாமே பரிசளிப்பதேயாகும். அரசால் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாமும் கைவிட்டிருக்கிறோம் என்பதை தான் இந்த விசித்திரகாலம்
உணர்த்துகிறது