Home Blog Page 2387

யாழ்ப்பாணத்தில் கொரோனா அறிகுறியுடன் இருவர் அனுமதி.

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் கொரோனா முகாம்கள்! தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சதி?

கொரோனா தொற்று தாக்கம் குறித்து அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்களை அரசாங்கம் அமைப்பதானது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற சதி நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கொரோனா தொற்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

கொரோனா தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அரசியல் நோக்கம் கொண்டதாக அரசின் முடிவுகள் அமையக் கூடாது.

உண்மையில் வடக்கிலோ அல்லது முழு நாட்டிலோ பாதிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது அவசியமானது தான்.

ஆனால் அந்த நடவடிக்கைகள் சரியான முறையில் கலந்து பேசி ஆராய்ந்து எடுக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் இன்றைக்கு அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகள் என்பது மிகவும் முரண்பட்ட முடிவுகளாகவே இருக்கின்றது. இவ்வாறாக முரண்பட்ட முடிவுகளை ஏன் எடுக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்தாலி அல்லது தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தி மேலதிக சோதனைகளுக்காக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

அவ்வாறு அங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால் சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. ஏனெனில் சீனாவில் தற்பொது கொரோனா தாக்கம் குறைவடைந்து வருவதாக அதற்கு காரணமும் கூறுகின்றது.

உண்மையில் இந்த கொரோனா தொற்று தாக்கம் சீனாவில் தான் உருவாகியது. அங்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போதும் வைத்தியசாலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனனர்.

ஆக மொத்தத்தில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை இல்லை. ஆனால் இத்தாலியோ தென்கொரியாவோ அல்லது வேறு நாடுகளிலோ இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை என அரசின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் என்பது மிகவும் முரண்பட்ட நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது.

ஆகவே அரசின் இத்தகைய முரண்பட்ட முடிவுகள் என்பது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆகையினால் இவை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்டடு இருக்கிற நிலையில் அங்கு கொண்டு செல்வதென்பது ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையா என்று சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது.

இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடாத்துகின்றனர். ஆகவே மிக நீண்ட தூரம் கொண்டு சென்று பரிசோதிப்தை விடுத்து விமான நிலையத்திற்கு அண்மித்ததாக உள்ள பிரதேசங்களிற்கு கொண்டு சென்று பரிசோதிப்பதே பொருத்தமாகும்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அரசின் மேல் பெறுப்பை தான் ஏற்படுத்தும் என்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அருட்தந்தை வி.பி.மங்களநேசன்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அதற்காகவே நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையினை கோருகிறோம் என நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் அருட்தந்தை வி.பி.மங்களநேசன் அடிகளார் கூறியிருக்கின்றாா்.

மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

கடந் த 3 வருடங்களாக 8 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றாா்கள். ஆனால் எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை.

மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் மண்ணுக்குள் தோண்டி எடுக்கவேண்டும் எனவும், வெளிநாட்டில் உள்ளாா்கள் எனவும், இறந்துவிட் டாா்கள் எனவும் அரசாங்கம் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறாா்கள்.

எவாிடம் ஒப்படைத்தோம், எந்த இடத்தில் ஒப்படைத்தோம், எப்போது ஒப்படைத்தோம் என கூறுவதற்கு சாட்சிகள் உள்ள நிலையில் நீதி கோாி தொடா்ந்தும் போராட்டம் நடாத்துவோம்.

ஆனால் உள்ளக விசாரணை ஊடாக எமக்கு தீா்வு வழங்கப்ப டாது. அதில் நாம் மிக தெளிவாக இருக்கிறோம். உள்ளக விசாரணை மீது நமக்கு நம்பிக்கை இல்லாமைக்கு நிறையவே அனுபவங்கள் உள்ளன.

குறிப்பாக திருகோணமலை 5 மாணவா்கள் கொலை, கொழும்பில் 11 போ் கடத்தல் உ ள்ளிட்ட பல சம்பவங்களில் உள்ளக விசாரணை ஊடாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தொியும். அதனை சொல்லி புாிய வைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேலி கூத்தாக இருக்க முடியாது. எனவே எமக்கு சா்வதேச விசாரணை ஊடாக நீதி வழங்கப்படவேண்டும். மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கம் சாத்தியமாகும் என்றாா்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று! தற்போதைய நிலவரம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில் 60 இலங்கையர்களும் இரண்டு வெளிநாட்டவர்களும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் சமித்த குருகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுற்றுலா வழிகாட்டிக்கும் அவரது நண்பருக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகள், அநுரதபுரம் மற்றும் பொரல்லை வைத்தியசாலைகள், ராமக, கம்பஹா, நீர்கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருநாகல் மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் ஏனைய 62 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 5000 பேர் வரை மரணமாகியுள்ளனர். 117 நாடுகளில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. ஒரு லட்சத்து 34ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் மாத்திரம் 3117 பேர் மரணமாகினர். அங்கு 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 ஆயிரம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கையில் இந்த நோயில் இருந்து மீளும் சிகிச்கைகள் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் குருகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சஜித் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் எந்தவொரு அரசியல் இலாபமும் கருதாமல் நாட்டு மக்களின் நன்மையை மாத்திரம் கருத்தில் கொண்டு மேற்குறித்த நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

தற்போது நாடு விழுந்துள்ள பள்ளத்தில் இருந்து மீண்டெழ எதிர்க்கட்சி என்ற வகையில் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைகளை கூறி அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொள்ளாது ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

வவுனியா வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி முஸ்லீம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

“ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம்” என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (சீட்) நிறுவனத்தின், வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றிருந்தது.
இதன் இறுதி நாள் நிகழ்வானது வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய பொது விளையாட்டு மைதானத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விருத்தினர்களின் பற்குபற்றலுடன் நிறைவுற்றிருந்தது.

இவ் விளையாட்டு போட்டியானது வெறுமனே விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாமல் விசேட தேவைக்குட்பட்டவர்களை எவ்வாறு சாதாரண கல்வி முறைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பான உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வும் அவர்களின் திறன்களை வெளிகொண்டு வருவதாகவும் அமைந்திருந்தது.
மேலும் விசேட அம்சமாக அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் விசேடதேவைக்குட்பட்ட மாணவர்களும் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றிணைந்து ஈடுபட்டதுடன் உட்படுத்தல் சாத்தியம் என்ற எண்ணக்கருவை அனைவருக்கும் நிரூப்பித்திருந்தமை முன்னுதாரணமான செயற்பாடுகளாக காணப்பட்டது.

இதில் இயற்கை வளப்பாதுகாப்புடன் பராம்பரிய முறைகள் மற்றும் ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம் என்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் அரச பாடசாலைகளுக்கு நிகராக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல சேன, வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நந்தகுமார், வவுனியா தெற்கு வலய விசேடகல்வி ஆசிரிய ஆலோசகர் உதயராஜன், உளநலபிரிவு விசேட வைத்தியர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி கேனடி உட்பட பல அரச மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

DSC 0913 வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி
????????????????????????????????????

IMG 20200309 154004 வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு இன்று மாலை 7 மணியளவில் விமான பயணிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பேரூந்துகளில் 265 பேர் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் விமான பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாட்டுக்கு முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

DSC 0528 6 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

DSC 0533 4 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

DSC 0536 3 1 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

DSC 0541 1 வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்: கோத்தாவிடம் சஜித் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் ஜனாதிபதியைச் சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் விவாதிக்க முடியும்என்று சஜித் பிரேமதாஸ நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டவிரோதப் படுகொலைகளை இலங்கை நிறைவேற்றியது; சாடுகிறது அமெரிக்கா

இலங்கை அரசால் சட்டவிரோதப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரச முகவர்கள் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

இவ்வாறு பலவிதமான குற்றச்சாட்டுக்களை இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

இலங்கையில் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் நியாயப்படுத்த முடியாத விதத்தில் கைது செய்யப்படுவது, சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது போன்றன காணப்படுகின்றன. அதேவேளை, பொலிஸார் தொடர்ந்தும் பொதுமக்களைத் துன்புறுத்துகின்றனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரைப் பொறுப்புக் கூறச் செய்வதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நடை முறைப்படுத்தவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது. அரச தரப்பினரும் நீதித்துறையினரும் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் என்று சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. மனித உரிமைகள் அமைப்பினர் வழங்கியுள்ள பேட்டிகளின்போது இலங்கையில் சித்திரவதைகளும் அளவுக்கதிகமான பலப்பிரயோகமும் காணப்படுவது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி கண்மூடித்தன மாகக் கைதுசெய்து தடுத்துவைத்தலும் தொடர்கின்றமையை அறியமுடிந்துள்ளது” என்றுள்ளது.

கட்சியை நாசமாக்கிவிட்டீர்கள்; கடுஞ்சொற்களால் மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கி அதனை முற்றாக ஒழிக்க முயன்ற பெருமை உங்களையே சாரும்.கட்சியில் இருந்து என்னை நீக்க நீங்கள் யார்? அரசியலில் நீங்கள் ஒரு செல்லாக்காசு ஆகிவிட்டீர்கள்

இவ்வாறு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

13 பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் சிறிசேனவைக் கடும் வார்த்தைப்பிரயோகங்களால் விளாசித் தள்ளியுள்ள சந்திரிகா , ஐ.தே.க. வழங்கிய பதவியை வைத்து பின்னர் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த ஒருவர் என்று மைத்திரியைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியமை தவறென்றும் அது செல்லுபடியாகாதென்றும் குறிப்பிட்டுள்ள சந்திரிகா , சுதந்திரக்கட்சியை எந்தக் கொம்பனாலும் இல்லாமலாக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.