Home Blog Page 1948

நான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னுரிமை திட்டங்களை சமர்ப்பிக்க கோரப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

அரச அதிபர் எம்.கனீபாவின் ஒழுங்குபடுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியாவின் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அந்தவகையில் வவுனியா நகரம் மற்றும் உப நகரங்களிற்குட்பட்ட முக்கிய வீதிகள் புனரமைக்கப்படுவது, விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவான குளங்களை புனரமைத்தல்,

பொதுமக்கள் வருமானத்தை ஈட்டும் பொருட்டு மீன் குஞ்சுகளை நன்னீர் குளங்களில் விடுதல், கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு மற்றும் செட்டிகுளத்தில் அமைக்கபட்டு இயங்காத நிலையில் உள்ள ஆலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வது,

மற்றும் மாவட்டத்தில் தற்போது தேவையாகவுள்ள 8 ஆயிரம் வீடுகளினை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிபரால் முன்வைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான திட்ட முன் மொழிவுகளை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோக பூர்வமாக வழங்குமாறு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது அந்தந்த அமைச்சுகளினூடாக அவற்றை சமர்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெறிய அரசு தயாரா? சஜித்

நாட்டுக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்த மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெறிய அரசு தயார் என்றால் நாங்கள் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றக்கொண்ட பின்னர் பாராளமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஆதரவளிப்போம். ஆனால் நாட்டில் இனவாதம், மதவாதத்தை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரிவாக்குவதன் மூலமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த
முடியும்.

அதனால் அரசு தெரிவிக்கும் மக்கள் மயமான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்குப் பூரண ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது. அரசு
மக்களுக்கு அளித்த வேலைத் திட்டங்களை மேற்கொள்ள பொதுத் தேர்தல் வரை பார்த்துக் கொண்டிருக்கமாமல் விரைவாக வரவு – செலவுத் திட்டத்தை நாடாளு
மன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும்’ என்றார்.

கச்சதீவுக்கு படையெடுக்கவுள்ள 9000 இந்திய மற்றும் இலங்கையர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக இந்த முறை 9000 இலங்கை – இந்திய யாத்திரிகர்கள் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இதை தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி திருவிழாவிற்கு முதல் நாளான 6 ஆம் திகதி அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணிவரை யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை குறிகாட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான படகு சேவையும் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசமொன்றுக்கு சென்ற யாழ் இளைஞன் துருக்கியில் மர்மமாக உயிரிழப்பு

வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலம்பெயர் தேசமொன்றுக்கு சென்ற நிலையில் துருக்கியில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி புளியடிவீதி வதிரியைச்சேர்ந்த ரஞ்சன் -மயில்வாகனம் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞர் தமது நாட்டில் உயிரிழந்ததை துருக்கி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவர் எவ்வாறு இறந்தார் என்ற மேலதிக தகவல்கள் எவையும் வெளிவரவில்லை

பதுளை பகுதியில் இடம்பெற்ற விபத்து! பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

பதுளை – பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இந்த விபத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அனைத்து மருந்து வகைகளை வழங்கவும் போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனி வழி: மைத்திரி ஆலோசனை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மந்திர லோசனைகளை நடத்தி வருகிறார்.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் வேளையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை யில் உரிய இடம் அளிக்கப்படாமை, எதிர்வரும் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டுமென்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களது வலியுறுத்தல் போன்ற விடயங்களால் மைத்திரிபால கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளார் என அறியமுடிந்தது.

இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப்பின்னர் பெரும்பான்மை பெரும்தரப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவது குறித்து மைத்திரி இப்போது மந்திரலோசனைகளை நடத்தி வருகிறார் எனத் தெரியவருகின்றது.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு மூடுவிழா? கோட்டா அரசு ஆலோசனை

முன்னைய அரசால் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.

காணாமற்போனோர் பணியகச் சட்டம் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள நீதியமைச்சின் அதிகாரியயாருவர் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அரசு மீளாய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தை அரசு தொடருமா எனத் தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி உரியமுறையில் மீளாய்வை மேற்கொண்ட பின்னர் அது குறித்து தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் பணியகச் சட்டம் முன்னைய அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் காணாமற்போனோர் பணியகத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது.

எனினும் அச்சமயம் எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசில் இடம்பெற்றிருந்தவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்திருந்தனர்.

புதிய அரசமைப்பு பணியை முன்னெடுங்கள்: கோட்டாவிடம் சுமந்திரன் கோரிக்கை

“கடந்த அரசின் காலத்தில் இந்த நாடாளுமன்றமே ஏகமனதான தீர்மானம் மூலம் அரசமைப்புப் பேரவையாக மாறி, புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அது கணிசமான அளவு முன்னேறியுள்ளது. அந்தப் பணியை அப்படியே முன்னெடுத்து, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதான புதிய அரசமைப்பு உருவாக்கத்தைப் பூர்த்தி செய்யுங்கள்”

இவ்வாறு புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை நேற்று நாடாளுமன்ற உரை மூலம் கோரியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றிய அவரது கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“எனது இந்த அறிக்கையானது கடந்த ஜனவரி மூன்றாம் திகதி அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பானதாகும். இக்கொள்கை பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசாங்கங்களின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதி னால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஜனாதிபதி கடந்த நவம்பர் 16, 2019 அன்று மிக முக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள,பெளத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதி அவர்களில் நம்பிக்கை வைப்பதற்கு தயாராக இல்லை என்பதாகும்.

இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டு வரும் நோக்கில் நான் கூறவில்லை. மாறாக, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்கவேண்டுமன்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.”

அதிரடியாக வந்தார் சந்திரிகா! குழப்பத்துடன் முடிந்த சுதந்திரக் கட்சிக் கூட்டம்

சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் நேற்று இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது. அப்போது அதற்கு அழைப்பு விடுக்கப்படாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மைத்திரிபால அங்கு வரவில்லை. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றனர் என்றும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம்

தன்னைக் கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ரணில் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டார். இதன்போதே, மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

நான் சதித்திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன் என்று ரணில் குறிப்பிட்டார். தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் தொலைபேசி உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சி.டிகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது, இந்தப் பதிவுகள் இப்போது சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.

அவை ஊடகங்களிலும், எம்.பிக்களின் கைகளிலும் எப்படி சென்றடைந்தன என்பது பெரிய கேள்விக்குறி என ரணில் தெரிவித்தார். அத்துடன், பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை பொலிஸாரிடமிருந்து பெற்று சபாநாயகர் ஆராய வேண்டும். எந்த எம்.பியாவது சட்டத்தை மீறியிருந்தால் இந்தச் சபைக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.