நான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம்

தன்னைக் கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ரணில் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டார். இதன்போதே, மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

நான் சதித்திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன் என்று ரணில் குறிப்பிட்டார். தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் தொலைபேசி உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சி.டிகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது, இந்தப் பதிவுகள் இப்போது சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.

அவை ஊடகங்களிலும், எம்.பிக்களின் கைகளிலும் எப்படி சென்றடைந்தன என்பது பெரிய கேள்விக்குறி என ரணில் தெரிவித்தார். அத்துடன், பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை பொலிஸாரிடமிருந்து பெற்று சபாநாயகர் ஆராய வேண்டும். எந்த எம்.பியாவது சட்டத்தை மீறியிருந்தால் இந்தச் சபைக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.