Home Blog Page 19

சங்கீத்சனின் விடுதலை குறித்து சிறீதரன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

01. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

J.R.ஜயவர்தனவின் அடக்குமுறைப் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கக் கூடாது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக நாட்டில் மீண்டும் ஒரு கொடூரமான சூழல் உருவாகத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வைத்து, கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த கணேஸ் குமார் சங்கீத்சன் என்ற இளம் பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச் சட்டம், கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை மிக மோசமாகப் பாதித்திருந்ததாகக் குறிப்பிட்ட சிறீதரன், இன்று ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பியினரின் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோர் இந்தச் சட்டத்தையே கொடூரமாகப் பயன்படுத்தினர் என்பதை நினைவூட்டினார்.

அதேபோல், தமிழ் இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்தச் சட்டத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

இதேவேளை, சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையில் முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின்போது, சங்கீத்சன் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதால், சாதாரண நீதிமன்ற நடைமுறையின் கீழ் அவருக்கான பிணை கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறீதரனிடம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோருக்கிடையில் பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த சந்திப்பின்போது, சங்கீத்சனின் சட்டநிலை மற்றும் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சர் சந்திரசேகர், சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது தொடர்பில் குவைத் கட்டுப்பாடு!

குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், வீட்டுப் பணியாளர்களை அழைப்பது 10 நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், 27 நாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களை அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள 10 நாடுகள்:

இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நேபாளம், தென்னாப்பிரிக்கா, பெனின், எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 9 நாடுகளிலிருந்து பெண் மற்றும் ஆண் ஆகிய இருபாலாரையும் அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், செனகல் நாட்டிலிருந்து பணியாளர்களைப் பணியமர்த்துவது ஆண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கென்யா, உகாண்டா, நைஜீரியா, மடகாஸ்கர் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளர்களை அழைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சில நாடுகளிலிருந்து பெண் பணியாளர்களுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆண் பணியாளர்களை அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராக ரவீந்திர விஜேகுணரத்ன!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

2.6 இலட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்தியதாக தகவல்

2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2010 முதல் 2017ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பாடசாலை கல்வியை இடைநிறுத்திய குழந்தைகள் குறித்த துல்லியமான தரவுகள் தன்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

2018 முதல் 2024 வரையான வருடாந்திர பாடசாலை மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், முதலாம் தரம் முதல் 10ஆம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் விலகிய விகிதங்களை கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமன்பாட்டைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, பாடசாலை கல்வியை இடைநிறுத்திய குழந்தைகளின் எண்ணிக்கை 2018இல் 38,839 ஆகவும், 2019இல் 41,503 ஆகவும், 2020இல் 32,540 ஆகவும், 2021இல் 25,492 ஆகவும், 2022இல் 52,596 ஆகவும், 2023இல் 50,345 ஆகவும், 2024இல் 25,823 ஆகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மாறுதல், சர்வதேச பாடசாலைகளில் சேருதல் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் சில மாணவர்கள் பாடசாலை அமைப்பிலிருந்து விலகினாலும், அவர்கள் தொடர்ந்து முறையான கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் எனப் பிரதமர் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறான தரவுகளை இந்தக் கணிப்பீட்டில் துல்லியமாக அடையாளம் காண முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதற்குப் தனிப்பட்ட காரணங்கள், பாடசாலை சார்ந்த காரணங்கள், குடும்பம் சார்ந்த காரணங்கள், சமூகக் காரணங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் கருத்து

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் பல சிக்கல் தோற்றம் பெறும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.தேர்தலை நடத்துவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் புதன்கிழமை (10) தெரிவித்தார்.

இந்நிலையில், அரச நிதியை சேமிப்பதற்காக தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியமும்,உலக வங்கியும் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதா ? என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க , பிரதமர் ஹரிணியிடம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் மீனவ சமூகங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்று மற்றும் வேகம் 

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். இதன் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் (kmph) வரை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் தன்மை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்  காணப்படும்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என வானிலை அவதானிப்பு நிலையம் மேலும் எச்சரித்துள்ளது.

மறைக்கப்பட்ட உண்மைகளும் மலையகத்தின் எதிர்காலமும் : மருதன் ராம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரிதாக நிகழும் சில தருணங்கள் உள்ளன. குறிப்பாக, நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான அநீதிகளை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அவற்றில் ஒன்றாகும். அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் நடை பெற்ற விவாதத்தின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய கருத்துக்கள், மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று அனுபவங்களை மீண்டும் தேசிய அரசியல் உரையாடலின் மையத்துக்கு கொண்டு வந்துள்ளன.
“மலையகத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவ ளித் தமிழர்கள் என அழைக்கப்படும் சமூகத்தினர், இலங்கை யின் தேயிலை பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய முக்கியமான உழைப்பாளர்களாக இருந்த போதிலும், சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ரீதியாக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர்” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த சமூகத்தின் வரலாறு வெறும் தொழிலாளர் என்ற நிலையில் மாத்திரமின்றி குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை இழப்பு, அரசியல் ஒதுக்கல், வறுமை, கல்வி பின்னடைவு, வீட்டு வசதி பற்றாக்குறை மற்றும் சமூக அவமதிப்புகள் என்பவற்றையும் உள்ளடக்கியே காணப்படுகி றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் அடர்ந்த காடுகளை வெட்டி தேயிலை, கோப்பி மற்றும் இறப்பர் தோட்டங்களை உருவாக்கினர். இன்று உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தேயிலைத் துறை யின் அடித்தளத்தில் அவர்களின் உழைப்பு உள்ளது. ஆனால் அந்த உழைப்புக்கு ஈடாக கிடைத்தது சமூக உயர்வு அல்ல. பல தலைமுறைகளாக அவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள “லயன்” வீடுகளில் வாழ்ந்தனர்.
குறைந்த ஊதியம், மோசமான சுகாதார வசதிகள், தரமற்ற குடியிருப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளின் பற்றாக்குறை அவர்களின் வாழ்க்கையை நிர்ணயித்தன. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டங்களும் மலைய கத் தமிழர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்தச் சட்டங்கள் ஆயிரக்கணக் கான மக்களை குடியுரிமையற்றவர்களாக மாற்றின.
அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அவர் கள் வாழ்ந்த நாட்டில் அவர்கள் “அந்நியர்கள்” எனக் கருதப்பட்டனர். அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, இந்த முடிவு இலங்கையின் தேர்தல் அரசியலையும் மாற்றியது. மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்ததன் மூலம் தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்தது. இதன் விளைவுகள் பல தசாப்தங்கள் நீடித்தன என்று அவர் விமர்சித்திருந்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையில், சுதந்திரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் மற்றும் பாகுபாடான கொள்கைகள் மலையகத் தமிழர்களின் துயரங்களுக்கு காரணமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
இது சாதாரண அரசியல் கருத்தாக மட்டும் பார்க்கப்பட முடியாது. ஏனெனில் இலங்கையின் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குறிப் பாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளராக இருக்கின்ற பிமல் ரத்நாயக்க போன்றோர் இவ்வாறான வரலாற்று அநீதிகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அரிதாகும்.
எனினும், இந்த ஒப்புதல் மட்டுமே போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. மலையக சமூகத்தின் பிரதிநிதிகள், இந்தக் கருத்தை வரவேற்றாலும், கடந்த காலத்தில் பல் வேறு அரசியல் இயக்கங்கள் குறிப்பாக தற்போதைய ஆளும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் இந்த சமூகத்தின் உரிமைகளை ஆதரிக்கத் தவறியதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக அமைச்சர் பிமல் ரத்நாயக் கவிற்கு பிறகு பாராளுமன்றில் கருத்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “மலையக மக்களது பின்தங்கிய நிலைக்கு, காணி, வீடு, உரிமை மறுப்புக்கு, சிங்கள மக்கள்  மனங்களில், எம்மை  அந்நிய இந்தியர் என்றும், நாம் உருவாக்கிய பெருந்-  தோட்டங்கள், “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்றும் இனவாதம் விதைத்த கறுப்பு வரலாறு JVP என்ற மக்கள் விடுதலை முன்னணியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு மறந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் மலையக மக்களின் வாழ்க் கையை ஆராயும்போது, குடியுரிமை என்பது மட்டுமே பிரச்சினையல்ல என்பதை காண முடிகிறது. வீட்டு வசதி, நில உரிமை, கல்வி, சுகாதாரம், பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இலங்கை தேயிலை ஏற்றுமதியால் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டிய போதிலும், அந்தத் துறையின் முதுகெலும்பாக விளங்கிய தொழிலாளர்கள் நாட்டின் மிக ஏழ்மையான மக்களாகவே தொடர்ந்தனர்.
இந்த முரண்பாடு, இலங்கையின் வளர்ச்சி மாதிரி யின் சமூக நீதி குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. மலையகப் பகுதிகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டாலும், தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது இன்னும் பல சவால்கள் நீடிக்கின்றன. உயர்கல்வி அணுகல், தொழில்நுட்பக் கல்வி, மொழித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள் போன்ற துறைகளில் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. அதேபோல், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தனித்துவமானவை. தேயிலைப் பறிப்பு உள்ளிட்ட கடின உழைப்புகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுகாதார வசதிகள் இன்னும் போதுமானதாக இல்லை. மலையக சமூகத்தின் போராட்டம் வெறும் பொருளாதாரப் போராட்டமல்ல. அது கண்ணியத்திற்கான போராட்டமாகவும் தொடர்கிறது. இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “தென்னிந்தியாவிலிருந்து மலேசியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலை உயர்வு பெற்றுள்ள போதிலும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் மேம்பாடு அடையவில்லை” என்று தெரிவித்தார். “இந்த நாட்டை கட்டியெழுப்பிய மக்களாக அந்த மக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கை அதனுள் அடங்கியுள்ளது.
இன்றைய சூழலில், மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை தனிப்பட்ட இன அல்லது சமூகப் பிரச்சி னையாக மட்டும் பார்க்க முடியாது. அது இலங்கையின் ஜனநாயக வளர்ச்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றிய சோதனையாகும். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் உரை ஒரு முக்கிய அரசியல் அங்கீகாரமாக இருந்தாலும், வரலாற்று அநீதிகளை ஒப்புக்கொள்வது மட்டும் போதாது.
அதற்குப் பின்னரான செயற்பாடுகளே உண்மை யான அளவுகோலாக அமையும். குறிப்பாக நில உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறதா? தோட்ட வீடுகள் மனித வாழ்வுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படுகிறதா?இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படுகிறதா? பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் வலுப்படுத்தப்படுகிறதா? அரசியல் பிரதி நிதித்துவம் அர்த்தமுள்ளதா? இவ்வாறான கேள்விகளுக் கான பதில்களே எதிர்காலத்தில் அரசாங்கத்தின் உண்மை யான அர்ப்பணிப்பை நிரூபிக்கும். மலையகத் தமிழர்களின் வரலாறு இலங்கையின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. அவர்கள் காடுகளை தோட்டங்களாக மாற்றினர். சாலைகளை அமைத்தனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர். ஆனால் அவர்களின் பங்களிப்புக்கு இணையான அங்கீகாரம் கிடைக்க பல தலைமுறைகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று, அரசாங்கத்தின் ஒரு மூத்த அமைச்சர் அந்த வரலாற்று அநீதிகளை ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கலாம். ஆனால் உண்மையான மாற்றம் வரலாற்றை ஒப்புக்கொள்வதில் அல்ல; வரலாற்றால் உருவான சமத்துவ மின்மைகளை நீக்குவதில்தான் உள்ளது.
அந்த வகையில், பார்க்கும்போது, மலையக மக்களின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஆனால் அவர்கள் எதிர்நோக்கிய அநீதிகள் குறித்து தேசிய மட்டத்தில் வெளிப்படையான அங்கீகாரம் கிடைத்திருப்பது, நீண்ட நீதிப் பயணத்தின் புதிய அத்தியாயமாகக் கரு தப்படலாம். உண்மையான மாற்றம் வார்த்தைகளால் அல்ல, செயற்பாடுகளால் அளவிடப்படும். குடியுரிமை பறிக் கப்பட்ட வரலாற்றை நினைவுகூர்வது மட்டும் போதாது. அதன் விளைவாக உருவான சமத்துவமின்மைகளை நீக்க வேண்டும். அந்த நாள் வரும்வரை, மலையக மக்களின் போராட்டம் தொடரும். ஆனால் இன்று ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீண்ட காலமாக மறைக்கப்பட்டிருந்த ஒரு உண்மை, நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அது வரலாற்றை மாற்றுமா? என்பது இனி அரசாங்கத்தின் செயல்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் தொடர்ந்து மீட்கப்படும் சிறுவர்களின் என்புகூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து  நேற்றைய தினம்(09) 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிசுவினுடைய என்பு கூட்டு தொகுதி ஒன்று உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.

அதன் போது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களுடைய 08 என்பு கூட்டு தொகுதி உட்பட 09 என்பு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் சிசுவினுடைய என்பு கூடு உட்பட 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இன்றைய அகழ்வு பனியின் போது என்பு கூடொன்றின் மீதிருந்து நாணய குற்றி ஒன்று மீட்கப்பட்டு , சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 327 மனித என்பு கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , 311 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவசரகால நிலை நீடிப்பு

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு பாதையை திறந்து வைத்தார். அவரது படைப்புக்கள்  கிராமத்து  வாழ்வியலையும் , மண் வாசனையையும் பேசியது.

பதினாறு வயதினிலே (1977), சிகப்பு ரோஜாக்கள் (1978), கிழக்கே போகும் ரயில் (1978), நிறம் மாறாத பூக்கள் (1979), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), புதுமைப் பெண் (1983), மண்வாசனை (1983), ஒரு கைதியின் டைரி (1984), முதல் மரியாதை (1985), கடலோரக் கவிதைகள் (1986), வேதம் புதிது (1987), ஆராதனா (1987), கொடி பறக்குது (1989), புது நெல்லு புது நாத்து (1991), நாடோடி தென்றல் (1992), கிழக்குச் சீமையிலே (1993), கருத்தம்மா (1995) உள்ளிட்ட திரைப்படங்கள் பாரதிராஜாவின் மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்களாகும்.

இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.