இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரிதாக நிகழும் சில தருணங்கள் உள்ளன. குறிப்பாக, நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான அநீதிகளை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அவற்றில் ஒன்றாகும். அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் நடை பெற்ற விவாதத்தின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய கருத்துக்கள், மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று அனுபவங்களை மீண்டும் தேசிய அரசியல் உரையாடலின் மையத்துக்கு கொண்டு வந்துள்ளன.
“மலையகத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவ ளித் தமிழர்கள் என அழைக்கப்படும் சமூகத்தினர், இலங்கை யின் தேயிலை பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய முக்கியமான உழைப்பாளர்களாக இருந்த போதிலும், சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ரீதியாக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர்” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த சமூகத்தின் வரலாறு வெறும் தொழிலாளர் என்ற நிலையில் மாத்திரமின்றி குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை இழப்பு, அரசியல் ஒதுக்கல், வறுமை, கல்வி பின்னடைவு, வீட்டு வசதி பற்றாக்குறை மற்றும் சமூக அவமதிப்புகள் என்பவற்றையும் உள்ளடக்கியே காணப்படுகி றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் அடர்ந்த காடுகளை வெட்டி தேயிலை, கோப்பி மற்றும் இறப்பர் தோட்டங்களை உருவாக்கினர். இன்று உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தேயிலைத் துறை யின் அடித்தளத்தில் அவர்களின் உழைப்பு உள்ளது. ஆனால் அந்த உழைப்புக்கு ஈடாக கிடைத்தது சமூக உயர்வு அல்ல. பல தலைமுறைகளாக அவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள “லயன்” வீடுகளில் வாழ்ந்தனர்.
குறைந்த ஊதியம், மோசமான சுகாதார வசதிகள், தரமற்ற குடியிருப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளின் பற்றாக்குறை அவர்களின் வாழ்க்கையை நிர்ணயித்தன. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டங்களும் மலைய கத் தமிழர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்தச் சட்டங்கள் ஆயிரக்கணக் கான மக்களை குடியுரிமையற்றவர்களாக மாற்றின.
அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அவர் கள் வாழ்ந்த நாட்டில் அவர்கள் “அந்நியர்கள்” எனக் கருதப்பட்டனர். அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, இந்த முடிவு இலங்கையின் தேர்தல் அரசியலையும் மாற்றியது. மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்ததன் மூலம் தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்தது. இதன் விளைவுகள் பல தசாப்தங்கள் நீடித்தன என்று அவர் விமர்சித்திருந்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையில், சுதந்திரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் மற்றும் பாகுபாடான கொள்கைகள் மலையகத் தமிழர்களின் துயரங்களுக்கு காரணமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
இது சாதாரண அரசியல் கருத்தாக மட்டும் பார்க்கப்பட முடியாது. ஏனெனில் இலங்கையின் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் குறிப் பாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளராக இருக்கின்ற பிமல் ரத்நாயக்க போன்றோர் இவ்வாறான வரலாற்று அநீதிகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அரிதாகும்.
எனினும், இந்த ஒப்புதல் மட்டுமே போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. மலையக சமூகத்தின் பிரதிநிதிகள், இந்தக் கருத்தை வரவேற்றாலும், கடந்த காலத்தில் பல் வேறு அரசியல் இயக்கங்கள் குறிப்பாக தற்போதைய ஆளும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் இந்த சமூகத்தின் உரிமைகளை ஆதரிக்கத் தவறியதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக அமைச்சர் பிமல் ரத்நாயக் கவிற்கு பிறகு பாராளுமன்றில் கருத்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “மலையக மக்களது பின்தங்கிய நிலைக்கு, காணி, வீடு, உரிமை மறுப்புக்கு, சிங்கள மக்கள் மனங்களில், எம்மை அந்நிய இந்தியர் என்றும், நாம் உருவாக்கிய பெருந்- தோட்டங்கள், “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்றும் இனவாதம் விதைத்த கறுப்பு வரலாறு JVP என்ற மக்கள் விடுதலை முன்னணியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு மறந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் மலையக மக்களின் வாழ்க் கையை ஆராயும்போது, குடியுரிமை என்பது மட்டுமே பிரச்சினையல்ல என்பதை காண முடிகிறது. வீட்டு வசதி, நில உரிமை, கல்வி, சுகாதாரம், பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இலங்கை தேயிலை ஏற்றுமதியால் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டிய போதிலும், அந்தத் துறையின் முதுகெலும்பாக விளங்கிய தொழிலாளர்கள் நாட்டின் மிக ஏழ்மையான மக்களாகவே தொடர்ந்தனர்.
இந்த முரண்பாடு, இலங்கையின் வளர்ச்சி மாதிரி யின் சமூக நீதி குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. மலையகப் பகுதிகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டாலும், தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது இன்னும் பல சவால்கள் நீடிக்கின்றன. உயர்கல்வி அணுகல், தொழில்நுட்பக் கல்வி, மொழித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள் போன்ற துறைகளில் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. அதேபோல், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தனித்துவமானவை. தேயிலைப் பறிப்பு உள்ளிட்ட கடின உழைப்புகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுகாதார வசதிகள் இன்னும் போதுமானதாக இல்லை. மலையக சமூகத்தின் போராட்டம் வெறும் பொருளாதாரப் போராட்டமல்ல. அது கண்ணியத்திற்கான போராட்டமாகவும் தொடர்கிறது. இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “தென்னிந்தியாவிலிருந்து மலேசியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலை உயர்வு பெற்றுள்ள போதிலும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் மேம்பாடு அடையவில்லை” என்று தெரிவித்தார். “இந்த நாட்டை கட்டியெழுப்பிய மக்களாக அந்த மக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கை அதனுள் அடங்கியுள்ளது.
இன்றைய சூழலில், மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை தனிப்பட்ட இன அல்லது சமூகப் பிரச்சி னையாக மட்டும் பார்க்க முடியாது. அது இலங்கையின் ஜனநாயக வளர்ச்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றிய சோதனையாகும். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் உரை ஒரு முக்கிய அரசியல் அங்கீகாரமாக இருந்தாலும், வரலாற்று அநீதிகளை ஒப்புக்கொள்வது மட்டும் போதாது.
அதற்குப் பின்னரான செயற்பாடுகளே உண்மை யான அளவுகோலாக அமையும். குறிப்பாக நில உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறதா? தோட்ட வீடுகள் மனித வாழ்வுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படுகிறதா?இளைஞர்களு க்கான வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படுகிறதா? பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் வலுப்படுத்தப்படுகிறதா? அரசியல் பிரதி நிதித்துவம் அர்த்தமுள்ளதா? இவ்வாறான கேள்விகளுக் கான பதில்களே எதிர்காலத்தில் அரசாங்கத்தின் உண்மை யான அர்ப்பணிப்பை நிரூபிக்கும். மலையகத் தமிழர்களின் வரலாறு இலங்கையின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. அவர்கள் காடுகளை தோட்டங்களாக மாற்றினர். சாலைகளை அமைத்தனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர். ஆனால் அவர்களின் பங்களிப்புக்கு இணையான அங்கீகாரம் கிடைக்க பல தலைமுறைகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று, அரசாங்கத்தின் ஒரு மூத்த அமைச்சர் அந்த வரலாற்று அநீதிகளை ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கலாம். ஆனால் உண்மையான மாற்றம் வரலாற்றை ஒப்புக்கொள்வதில் அல்ல; வரலாற்றால் உருவான சமத்துவ மின்மைகளை நீக்குவதில்தான் உள்ளது.
அந்த வகையில், பார்க்கும்போது, மலையக மக்களின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஆனால் அவர்கள் எதிர்நோக்கிய அநீதிகள் குறித்து தேசிய மட்டத்தில் வெளிப்படையான அங்கீகாரம் கிடைத்திருப்பது, நீண்ட நீதிப் பயணத்தின் புதிய அத்தியாயமாகக் கரு தப்படலாம். உண்மையான மாற்றம் வார்த்தைகளால் அல்ல, செயற்பாடுகளால் அளவிடப்படும். குடியுரிமை பறிக் கப்பட்ட வரலாற்றை நினைவுகூர்வது மட்டும் போதாது. அதன் விளைவாக உருவான சமத்துவமின்மைகளை நீக்க வேண்டும். அந்த நாள் வரும்வரை, மலையக மக்களின் போராட்டம் தொடரும். ஆனால் இன்று ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீண்ட காலமாக மறைக்கப்பட்டிருந்த ஒரு உண்மை, நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அது வரலாற்றை மாற்றுமா? என்பது இனி அரசாங்கத்தின் செயல்பாடுகளிலேயே தங்கியுள்ளது.



