Home Blog Page 18

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

20260611 084203 உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (11) காலை நீர்கொழும்பு பால்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணைகளில் தலையிடாதே,  கட்டுவபிட்டிய தேவாலயத்தை  காட்டிக் கொடுத்தது யார்?, குற்றம்   செய்யாவிட்டால் பயம் ஏன்?, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய  தேவாலயத்தில் இடம்பெற்ற போது  அங்கு கொல்லப்பவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் சிலரும் பிரதேசவாசிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

விசாரணைகள் இடையூறின்றி நடத்தப்பட வேண்டும், அரசியல் தலையீடுகள் கூடாது, விசாரணைகளுக்கு இடையூறு செய்பவர்கள்  கைது செய்யப்பட வேண்டும், அச்சுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.

அமைதியான முறையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் காலை 8:30க்கு ஆரம்பமாகி  9.30க்கு  நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சங்கீதன் கைது: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

IMG 20260611 WA0043 சங்கீதன் கைது: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (11) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பு நடைபெற்றது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள், மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சங்கத்தினர், அரசியல் பிரதிநிதிகள்,பெண்கள் அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும்,பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாட்டிலே இல்லாது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இந்த நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்,கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத் உற்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.இதற்கு ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்ட நிலையில் திடீர் என குறித்த பகுதிக்கு வருகை தந்த மன்னார்  காவல்துறை பதாகை ஒன்றில் எழுதப்பட்ட வசனம் ஒன்று குறித்து சிறிது நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை…

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (10) போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாக பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

இதேவேளை, இந்த மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி, அதிபோசணை (Overnutrition) அதாவது தேவையற்ற முறையில் உடல் எடை அதிகரித்தல் என்ற நிலையும் அதிகமாகக் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஊட்டச்சத்து குறித்த அறிவு மட்டம் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு!

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்றைய தினம்(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி குருநகர் பகுதியில் இருந்து ஒரு படகில் 31 மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்ட தீவுக்கு சென்றிருந்தனர் .

இதன் போது அங்கு நின்ற கடற்படை யினர் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் வாளால் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர்.

இதன்போது 31 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த 31 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க- ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) ஒரு பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமான தொகையால் வேகமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சர்வதேச குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.47% ஆல் (2.30 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 95.40 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 2.89% ஆல் (2.60 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 92.63 டொலலர் வரை உயர்ந்துள்ளது.

எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மற்றும் இதர வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடப்படுவதாக ஈரானின் கூட்டு இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த எல்லையைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், வணிகக் கப்பல்கள் இன்னும் பாதுகாப்பாக அந்த கடல் வழிப்பாதை வழியாக பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், தங்களது போர்க்கப்பல்கள் எதன் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை பெரிய அளவிலான போருக்கான அறிகுறிகளைக் காட்டும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கொக்கிளாயில் மீனவர் குடும்பங்களை நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர் குடும்பங்களை கொக்கிளாய் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்யாத விடயத்தை இந்த அரசாங்கம் செய்வதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிறுவர்களுக்கு சமூக ஊடகத்தை தடை செய்ய கனடாவால் புதிய சட்டமூலம்!

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கனடா அரசு சமர்ப்பித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியாவால் விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டத்தைப் போன்றதொரு நடவடிக்கையையே கனடாவும் தற்போது எடுத்துள்ளது.

கனடா பாராளுமன்றத்தின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லரால் நேற்று (10) ‘பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டம்’ என்ற பெயரில் இந்த வரைவுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும், அவுஸ்திரேலிய சட்டத்தை விட கனடாவின் இந்த புதிய சட்டமூலம் சற்றே வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது.

அதன்படி, சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முறையான கொள்கைகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த புதிய சட்டத்தின் மூலம் ‘ChatGPT’ போன்ற AI செட்போட்களை ஒழுங்குபடுத்தவும், இணையம் வழியாக பரவும் “தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை” கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் சிறுவர்களை அவதூறு செய்தல், வெறுப்பை பரப்புதல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 துறைகளின் கீழ் வரும் விடயங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனேடிய டொலர்கள் (7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அல்லது அந்த நிறுவனத்தின் உலகளாவிய மொத்த வருவாயில் 3% அபராதமாக விதிக்கப்படும்.

வழக்குத் தொடர்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்களைக் கண்காணிப்பதற்காக ‘கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு’ என்ற பெயரில் ஒரு சுயாதீன அமைப்பும் நிறுவப்படவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துரதிர்ஷ்டவசமான துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் 6 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அங்கு, 18 வயதுடைய சந்தேக நபர் தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் குறித்து ‘ChatGPT’ மூலம் கலந்துரையாடியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கணக்கு குறித்து பொலிஸாருக்கு அறிக்கை செய்ய OpenAI நிறுவனம் தவறியதன் காரணமாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி செம் எல்ட்மேன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவும் வேண்டியிருந்தது.

இச்சம்பவத்திற்குப் பிறகு, இணையப் பாதுகாப்பு குறித்து கனடாவுக்கு ஏற்பட்ட அழுத்தம் தீவிரமடைந்தது.

அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள G7 நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கனடா இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளது.

அந்த உச்சிமாநாட்டிலும் சிறுவர்களை இணையத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் AI தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இவ்வாறான சட்டங்களை விதித்துள்ளதுடன், பிரிட்டனும் அடுத்த வாரம் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

கிரீஸ் நாடு வரும் ஜனவரி முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இந்தத் தடையை விதிக்கவுள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் இணைய தணிக்கை அல்லது கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என்று சில தாராளவாத அமைப்புகள் எச்சரிக்கின்றன.

இப்பிரச்சினையை கனடாவில் உள்ள சாதாரண குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலேவுக்கு தொடர்புள்ளதாக பாராளுமன்றில் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஷ் சலே நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளதாகவும், இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட நான்கு பேரில் ஒருவர், இஸ்லாம் அடிப்படைவாதி என்றும், அவர் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், அவர் தற்போது வரை காணமால் போயுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாக்குதல் நடத்தப்படும் வரை இஸ்லாம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி, பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளும், முக்கிய விபரங்களும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை சுரேஷ் சலே முன்னெடுத்திருந்தார் என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

சங்கீத்சனின் கைதுக்கு சர்வதேச ரீதியாக வலுக்கும் எதிர்ப்புகள்!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 24 வயதுடைய தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தியதாகக் கூறி ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காகக் கைது செய்யப்படுவது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என முதல்வர் பெட்ரிக் பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஜனநாயகப் பண்புகளை சீர்குலைக்கிறது. இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை உறுதியளித்த போதிலும், மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டத்தை அவர்கள் தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்திற்குப் பின்னரும், தமிழர்கள் இன்னும் தீவிர இராணுவக் கண்காணிப்பு மற்றும் முறையான ஒடுக்குமுறையின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது, பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்’ போன்ற நினைவுத் திட்டங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது என்று பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கலைஞரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ஒழிக்குமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து தானும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முறையான குற்றச்சாட்டுகள் இன்றி கைது செய்யப்பட்டுள்ள சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், முன்னாள் அரச புலனாய்வுத் துறை பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டோரின் கைதுகளிலும் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, தன்னிச்சையான கைதுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கீத்சனின் விடுதலை குறித்து சிறீதரன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

01. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

J.R.ஜயவர்தனவின் அடக்குமுறைப் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கக் கூடாது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக நாட்டில் மீண்டும் ஒரு கொடூரமான சூழல் உருவாகத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வைத்து, கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த கணேஸ் குமார் சங்கீத்சன் என்ற இளம் பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச் சட்டம், கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை மிக மோசமாகப் பாதித்திருந்ததாகக் குறிப்பிட்ட சிறீதரன், இன்று ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பியினரின் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோர் இந்தச் சட்டத்தையே கொடூரமாகப் பயன்படுத்தினர் என்பதை நினைவூட்டினார்.

அதேபோல், தமிழ் இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்தச் சட்டத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

இதேவேளை, சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையில் முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின்போது, சங்கீத்சன் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதால், சாதாரண நீதிமன்ற நடைமுறையின் கீழ் அவருக்கான பிணை கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறீதரனிடம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோருக்கிடையில் பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த சந்திப்பின்போது, சங்கீத்சனின் சட்டநிலை மற்றும் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சர் சந்திரசேகர், சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.