Home Blog Page 20

சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லையேல் …. : சிறீதரன் எம்.பி. எச்சரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும். ஜே.ஆர். ஜயவர்தனவின் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்க கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அவசர கால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சங்கீத்சனை உடன் விடுவியுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்டைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடைவிதித்து, அதனை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட எழுச்சிப்பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் (24) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டிருப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது,

பரந்துபட்ட வரைவிலக்கணம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள், சர்வதேச நியமங்களுக்கு முரணான தன்மைகள் போன்ற காரணங்களை முன்வைத்து நீண்டகாலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகத் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள போதிலும், அச்சட்டத்தின்கீழ் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் என்பன தொடர்பில் மிகுந்த கவலையடைகிறோம்.

அண்மைக்காலத்தில் பதிவான சில கைதுகள் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான கரிசனைகளை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் குறிப்பாக 24 வயதான தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்சன் என்பவரது கைதும் ஒன்றாகும்.

அவர் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட அவரது சொல்லிசைப் பாடல் ஒன்றுடன் தொடர்புடைய காரணத்துக்காகக் கடந்த 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பாடிய பாடல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினைப் புகழும் விதத்தில் அமைந்திருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் பரந்துபட்ட முறையிலும், தெளிவற்ற விதத்திலும் வரையறுக்கப்பட்டிருக்கும் குற்றங்கள் சர்வதேச சட்ட நியமங்களுக்கு ஏற்புடையனவாக அமையவில்லை. அவ்வாறிருக்கையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

அதேவேளை மறுபுறம் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டு கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தடுப்புக்காவலின் கீழ் மிகமோசமான முறையில் நடாத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடு வழங்கல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு. அத்தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.

அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டம் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் சார்ந்தும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது அச்சட்டப் பிரயோகத்தின் நோக்கம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டமானது முறையான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததன் காரணமாக சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழ்நிலையை வழங்குவதுடன், துஷ்பிரயோகங்களை சாத்தியமாக்குகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக விசாரித்தல், சுரேஷ் சலே உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், பயங்கரவாதத்டைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடைவிதித்தல், அச்சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குதல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்காது என்று அறிவிப்பு

போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டாலோ அல்லது கருத்துக்களை வெளியிட்டாலோ, அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் மூலம் மக்களின் மனங்களை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு கலாசாரம் வளர்ந்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 12 அல்லது 18 பேர் கொண்ட குழுக்களை வைத்துக்கொண்டு போராடுவதனால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் அல்லது தடையும் ஏற்படாது என்றும், விசாரணைகள் சரியான முறையில் முன்னோக்கி நகரும் என்றும் அவரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, “சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் எமது அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளைப் பாதுகாக்காது” என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

ஒருவர் எந்தத் தொழிலைப் புரிபவராக இருந்தாலும், அவர் குற்றமிழைத்திருந்தால், உரிய விசாரணைகளின் பிரகாரம் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு”

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அரசியல், வரலாற்று மற்றும் சமகாலப் அரசியல் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

மேலும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலப் பாதைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாட்டில் பங்கேற்று வரலாற்றுப் பொறுப்பை பகிர்ந்து கொள்ளுமாறு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களை உரிமையோடு அழைக்கிறோம்” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விமர்சனம்!

“உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

பாடகர் சங்கீத்சனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளமையை கண்டித்து வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இன்றைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் உள்ள போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக போராடினர். அதனை இல்லாமலாக்குவோம் என மக்களின் ஆணையினைப் பெற்றனர்.

ஆட்சிக்கு வந்த பின்னர் அச் சட்டத்தின் வாயிலாக மக்களின் உணர்வுகளை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக மேலுமொரு பயங்கரவாத எதிர்ப்புச் தடைச்சட்டத்தினை அமுல்படுத்த எத்தனிக்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்

அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தமிழ்த் தேசிய விடுதலைப்பாடல்களை பயன்படுத்தியமை வெளித்தெரிந்த உண்மை. ஆனால் ஒரு கலைஞன் தன்னுடைய ஆற்றலில் விடுதலைப் போராட்ட இசையை இசைக்கும் போது மிகவும் கொடூரமான சட்ட ஏற்பாடுகளை அரசு அதிகம் பிரயோகித்த உதாரணமே நடைபெற்றுள்ளது.

“நாங்கள் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்பினை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதனை மதிக்கின்றோம். அதனை கேள்விக்குட்படுத்தவில்லை. மாறாக அரசாங்கம் குற்றங்கள் தொடர்பாக பிரயோகிக்கும் சட்டங்களின் அடிப்படைகள் தொடர்பாகவே எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம்” என்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட ஒரு குழுவினர் திட்டமிட்ட முறையில் மறைமுகமாகத் தலையிட்டு, முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், சந்தேகநபரான சுரேஷ் சலே விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும், இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் செயல்களுக்கு உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை வெளிவராத அரசியல் பின்னணிகள் மற்றும் தொடர்புகள் அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

செம்மணியில் உடல்கள் கொடூரமாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (08) ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 318 ஆக உயர்வடைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், விசேட நிபுணர்களின் முன்னிலையில் நேற்று அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வு பணிகளின் போது புதிதாக 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளின் 4 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் மொத்தமாக இதுவரை 318 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 302 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வுகளின் போது, மனித உடல்கள் மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான பல தடயங்கள் சிக்கியுள்ளன.

குறிப்பாக, எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று தொடுகையுற்று ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னப்பட்ட நிலையில் இரு வெவ்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன

அவற்றில் ஒரு பகுதியில் ஆறு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், பிறிதொரு பகுதியில் நான்கு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத் தொடுகையுற்றவாறு கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் ஒன்று, அதன் கால்கள் இரண்டும் பின்பக்கமாக மடிக்கப்பட்ட நிலையிலேயே புதைக்கப்பட்டுள்ளமை தடயவியல் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, மனித என்புகளின் எச்சங்கள் அடங்கிய விசேட குவியல் ஒன்றும் நேற்றைய அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் உள்ள மண்ணைச் சீர்செய்து, எச்சங்களைச் சேதமடையாமல் சுத்தப்படுத்தும் பணிகளில் அகழ்வாராய்ச்சிப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் இனப்பிரச்சினை: அரசியல் தீர்வு முயற்சிக்கு தொடர்ந்து பங்களிப்பேன் – சுவிட்ஸர்லாந்து தூதுவர்

தமிழர் இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வை இலக்காகக்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது நாட்டின் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றம் என்பவற்றுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக சுவிட்ஸர்லாந்து தூதுவருக்கு சிறிதரன் நன்றி தெரிவித்ததுடன், நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார்.

அதேபோன்று தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கான நிலையான அரசியல் தீர்வை எட்டும் நோக்கில் தூதுவர் சிரி வோல்ற் அவரது பதவிக்காலத்தில் முன்னெடுத்த சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகளை சிறிதரன் நினைவுகூர்ந்தார்.

அதற்குப் பதிலளித்த தூதுவர், இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னரும், உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் தமிழர் இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வை இலக்காகக்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படாது

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொது அவசர கால நிலையினையும், நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (9) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசர கால நீடிப்பு தொடர்பான இன்றைய விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் வாக்குறுதியை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. விரைவில் குறித்த சட்டத்தை நீக்குவதற்கு நீதி அமைச்சு உள்ளிட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பல உயிர் பலிகளையும் ஏற்படுத்திய மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையும் அதன் பின்னணியையும் கண்டறிவதற்காக பயன்படுத்தியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்புகிறோம்.

எனவே இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

அத்துடன் விரைவில் குறித்த சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் – பாகிஸ்தான்

இந்நாட்டின் சகல துறைகளினதும் அபிவிருத்தியில் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ச்சியான தனது பங்களிப்பினை வழங்கும் என பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  நய்யார் நசீர் உறுதியளித்துள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  கலாநிதி நய்யர் நசீர் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (8) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவு, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளினதும் சுகாதார சேவைகள் மற்றும் மருந்து விநியோகத்தை மேம்படுத்துதல், மருத்துவக் கல்விக்கான ஒத்துழைப்பு மற்றும் குறிப்பாக பாகிஸ்தானில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கான மருத்துவ புலமைப்பரிசில்களை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

அத்துடன், அறுவை சிகிச்சை  உபகரணங்களைப்  பரிமாறிக்கொள்ளும் திட்டமொன்றை ஆரம்பித்தல் மற்றும் அதுசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை  விரைவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இரு நாட்டு கலாசாரங்களை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் சுற்றுலா மற்றும் ஊடகத்துறையை மேம்படுத்துவது குறித்தும், கூட்டுப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் ஆவணப்படங்களை திரையிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தொலைக்காட்ச்சி-நாடகங்களை ஒளிபரப்புவது உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக, இலங்கை ஊடக அமைச்சுக்கும் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துமாறு உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்திருந்தார்.  இதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இச்சந்திப்பின் நிறைவில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார். இக்கலந்துரையாடலில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு அதிகாரி மஹ்வாஷ் சாமி, ஊடக மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் அதீல் சத்தார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.