சங்கீத்சனை உடன் விடுவியுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்டைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடைவிதித்து, அதனை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட எழுச்சிப்பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் (24) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டிருப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது,

பரந்துபட்ட வரைவிலக்கணம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள், சர்வதேச நியமங்களுக்கு முரணான தன்மைகள் போன்ற காரணங்களை முன்வைத்து நீண்டகாலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகத் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள போதிலும், அச்சட்டத்தின்கீழ் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் என்பன தொடர்பில் மிகுந்த கவலையடைகிறோம்.

அண்மைக்காலத்தில் பதிவான சில கைதுகள் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான கரிசனைகளை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் குறிப்பாக 24 வயதான தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்சன் என்பவரது கைதும் ஒன்றாகும்.

அவர் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட அவரது சொல்லிசைப் பாடல் ஒன்றுடன் தொடர்புடைய காரணத்துக்காகக் கடந்த 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பாடிய பாடல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினைப் புகழும் விதத்தில் அமைந்திருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் பரந்துபட்ட முறையிலும், தெளிவற்ற விதத்திலும் வரையறுக்கப்பட்டிருக்கும் குற்றங்கள் சர்வதேச சட்ட நியமங்களுக்கு ஏற்புடையனவாக அமையவில்லை. அவ்வாறிருக்கையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

அதேவேளை மறுபுறம் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டு கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தடுப்புக்காவலின் கீழ் மிகமோசமான முறையில் நடாத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடு வழங்கல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு. அத்தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.

அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டம் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் சார்ந்தும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது அச்சட்டப் பிரயோகத்தின் நோக்கம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டமானது முறையான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததன் காரணமாக சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழ்நிலையை வழங்குவதுடன், துஷ்பிரயோகங்களை சாத்தியமாக்குகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக விசாரித்தல், சுரேஷ் சலே உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், பயங்கரவாதத்டைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடைவிதித்தல், அச்சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குதல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.