Home Blog Page 1471

மலேசியாவிலிருந்து இலங்கையர்கள் உட்பட 5,951 பேர் நாடு கடத்தல்

கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மார்ச் 18 முதல் ஜூலை 1ம் திகதிக்கு இடையிலானா காலக்கட்டத்தில் 5,951 வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டுள்ளனர்.

இதில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் 4,110 பேர், தாய்லாந்தை சேர்ந்தவர்கள் 637 பேர், மியான்மரை சேர்ந்தவர்கள் 391 பேர், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 380 பேர், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 279 பேர், சீனாவை சேர்ந்தவர்கள் 73 பேர், 26 இந்தியர்கள், 11 இலங்கையர்கள் மற்றும் மேலும் 44 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

‘அரசியல் கைதிகளின் விடுதலை வெறும் கானல் நீரே’-பரிசிலிருந்து உதயன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பரிசிலிருந்து உதயன் என்பவரால் இலக்கு மின்னிதழுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கட்டுரைஇது, இலக்கு வாசகர்களுக்காக,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது. தேர்தல் வேளைகளில் மட்டும் பேசு பொருளாக  பிரதான இடம் பிடிப்பதோடு சரி, மற்றபடி  மாறி மாறி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் நடந்து வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்வு என்பது பல வருடங்களை தாண்டி இன்று இரண்டு மூன்று தசாப்ங்களை எட்டி விட்டது.  அதாவது அவர்களது வாலிப பருவம் தொடங்கி முழு இளமை காலங்களையும் சிறைச்சாலைகளிலேயே அதிலும் குறிப்பிட்ட சில அடிகள் கொண்ட நான்கு சுவர் கூண்டுக்குள்ளாகவே கழிந்து விட்டது. அதில் சிலர் முதுமை காரணமாகவும், சிலர் சிறை வாழ்வு தந்த நோய் காரணமாகவும் அங்கேயே மரணித்துப் போய் விட்டார்கள். இன்று எஞ்சி உள்ளவர்களது வாழ்வும் கொரோனாவோடு போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்று அரசின் பெரும் செல்வாக்கு மிக்க பிரதான அமைச்சர்களாகவுள்ள நாமல் ராஜபக்ச, உதய கம்மன்பில, போன்றவர்கள் கூட கடந்த காலத்தில் அரசியல் கைதிகளை “முன்னாள் போராளிகள்” என்று விழித்து அவர்களை தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், விடுதலை செய்வதாக குரல் கொடுத்து இருந்தனர். ஆனால் இன்று அவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததும், பாரா முகமாகவும், சிங்கள மக்களின் பிரதிநிதிகள் என்பது போலவுமே கருத்துரைத்து வருகின்றனர்.
எவ்வளவுதான் தமிழ்மக்கள் தன்னெழிச்சியாக சோர்வின்றி, ஓய்வின்றி சிறைச்சாலைகளில் உள்ள தமது உறவுகளின் விடுதலைக்காக தொடர்ச்சியான நீண்ட நெடிய அறப்போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும் எந்த அரசும் அவைகுறித்து கிஞ்சித்தும் கவனம் செலுத்துவதற்க்கு தயாராக இல்லை.
20 வருடங்களுக்கு மேலாக இலங்கை போன்ற நாட்டின் சிறைச்சாலைகளில் காலம் தள்ளுவது என்பது எவ்வளவு கொடியது என்பதை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது ஒன்று.
சர்வாதிகாரிகள் ஏதேச்சாதிகாரத்தின் பேரால் செய்தவைகளை சிறீலங்கா அரசாங்கம் சனநாயத்தின் போர்வையில் செய்து வருகின்றன.
இலங்கையின் யுத்தம் மௌனிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், தமிழ் மக்களின் உடனடி மனிதாபமானம் சார்ந்த பிரச்சனைகள் எவை குறித்தும் கரிசணை கொள்வதற்க்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
கோட்டாபாய  ராஜபக்சவின் அரசியல் சித்தாந்த்தம் என்பது முழுக்க முழுக்க சிங்கள பௌத்தத்தை மட்டும் முழுமையாக கொண்டது. அதனை தாண்டி எதனை செய்வதற்க்கும் அவர் விரும்ப போவதில்லை. இலங்கை மூவின மக்களின் நாடு என்று பெயரளவின் சொல்லி கொண்டாலும் அது சிங்கள மக்களின் நலனைத்தான் போசித்து வருகிறது.
“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எவையும் தேவை இல்லை அபிவிருத்தி மட்டும் போதும்” என்று கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கூறி வந்தவர் தான் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச என்பதும் குறிப்பிடத் தக்கது.
கோட்டாபாய என்ன மனோநிலையில் ஆட்சி செய்ய முனைகிறார் என்பதற்க்கு நல்ல உதாரணம் யாழ்ப்பாணம் மிருசிவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, இராணுவ அதிகாரி சுனில் ரட்ணாயக்க என்ற குற்றவாளியை ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்ட சம்பவமாகும்.  இது மறைமுகமாக தமிழ்மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கருதிக்கொள்ளலாம்.
சுமார் 5 வயது பாலகன் தொடங்கி  பதின்ம வயது சிறார்கள் அடங்கலாக 41 வயதுக்கு உட்பட்டவர்கள் எட்டுப் பேர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதுவித கருசணையும் இல்லாமல், நீதி துறையை அபகீர்த்தீக்கு உள்ளாகும் விதமாக இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.
இந்த விடுதலைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்த போது; ஜனாதிபதி கோட்டாபாய சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது. “இந்த தீர்ப்பானது  சர்வதேசத்தை திருப்தி
ப்படுத்துவதற்காக  நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு  இருந்தது. மற்ற படி அவர் அப்பாவி” என்பதுதான் அவரது நிலைப்பாடு.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஒரு இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதற்க்காக சட்டத்திற்க்கு புறம்பான முறையில் ஆள்கடத்தல், கொலைகளில் ஈடுபட்ட முன்னாள் படைத்துறையை சேர்ந்த சிலரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. ஆனால் தற்பொழுது கோட்டாபாய அரசாங்கம் அவர்களை யுத்த வீரர்களாக கருதி விடுதலை செய்து வருகின்றது.
மறுபுறம் வெறும் சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவி்க்க மறுத்து வருகிறது இந்த அரசாங்கம். காரணம் அவர்கள் தமிர்கள்.
அதேபோல் கடந்த நல்லாட்சி காலத்தில் விடுவிக்கப்பட்டவர்கள்,
விடுதலை பெற்றவர்கள் போன்றவர்களின் விடுதலைக்கு எதிராகவும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அதனை ஒரு சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாற்ற முனைகின்றனர். பாராளுமன்றத்தின் உள்ளும்,  வெளியே பொது மேடைகளிலும் அதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.  இது போன்ற கருத்துக்கள் ஒரு வகையின் ஏற்கெனவே தடுப்பிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஆகும்.
அரச நிர்வாக சேவைகளின்  உயர்பதவிகளில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் படிப்படியாக நியமிக்கப்பட்டு வருவதென்பது ஊடக அரசாங்கம் எந்த மனோநிலையில் ஆட்சி செய்ய விழைகின்றது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.
இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு அல்லது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது சர்வதேசத்தின் தலையீட்டினால் கிடைத்தாலே அன்றி சிங்கள அரசாங்கத்தினால் ஒரு போதும் கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி யாராவது எதிர்பார்த்தால் அது கடல் வற்றி கருவாடு சாப்பிட ஆசைப்பட்டு குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு’ இந்த நிலைமையைதான் தமிழ் மக்களுக்கு  ஏற்படுத்தும்.
பரிசிலிருந்து உதயன் ‘

கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த  மதகுரு கைது

கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த  மதகுரு ஒருவரை ரஷ்ய காவல்துறையினர் செய்துள்ளனர்.

அதி தீவிர பழமைவாத சிந்தனை உடையவரான ஃபாதர் செயீர்ஹீ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ரஷ்யன் ஆர்தோடக்ஸ் திருச்சபையால் மத போதனை செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் எகாதெரின்பர்க் அருகே உள்ள ஸ்ரெட்னூரல்ஸ்க் எனும் இடத்தில் உள்ள துறவிகள் மடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இவர் மறுத்து வந்த இவர் மீது சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்   பதியப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம், இறை நம்பிக்கை உள்ளவர்கள் பொது சுகாதார ஆணைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று ஊக்குவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த பின், மே மாதம் சிலுவை அணிவதற்கான உரிமை அவரிடமிருந்து பறிக்கப்பட்டதோடு  மத போதனை செய்வதற்கும் அவருக்கு தடை  விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் மனித உரிமை விவகாரங்களில் மேற்குலகின் நிலைப்பாடு – விளக்குகிறார் ஆய்வாளர் அருஸ்

பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு ஆய்வாளர் அருஸ் வழங்கிய செவ்வி.

யாழ். மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு – ஒரு வாக்கால் தோல்வியடைந்த ஆர்னோல்ட்

யாழ். மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நியமன உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார். எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20 வாக்குகளைப் பெற்றார்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன்  மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு, விவசாயிகள் இடையே இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து   இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மத்திய வேளாண் துறையின் அழைப்பின் பேரில் 40 விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் அனுப்பிய கடிதத்துக்கு, 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 4 முக்கிய கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டபூர்வமாக உறுதிசெய்ய வேண்டும்.

வேளாண் கழிவுகளை எரிப்பதற்காக விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை இரத்து செய்ய வேண்டும்.

மின்சார திருத்தம் சோதாவை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாய சங்க மூத்த தலைவர் அபிமன்யு கூறும்போது, “எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 30-ம் திகதி டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைப் பகுதிகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம்.

அன்றைய தினம் மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் டிராக்டர் பேரணியை டிசம்பர் 31-ம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளோம். மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது எங்களது 4 முக்கிய கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்” என்றார்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார அதிகாரி

கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் வழங்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது என்ற முடிவில் எந்த சூழ்நிலையிலும் இதுவரை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்க வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

தொடர்ந்தும் தாமதமாகிவரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிவேவ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் சென்றவேளை நாடாளுமன்றம் இது குறித்து தீர்மானிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட புதிய மாகாணசபைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை மாகாணசபைகள் எல்லைகள் மீள்நிர்ணயம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிலலை இதன் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அனைத்து கரிசனைகளுக்கும் தீர்வை காணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது நீண்டகாலம் எடுக்ககூடியந நடவடிக்கை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் பழைய மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தினை திருத்தங்களுடன் சமர்ப்பித்து நிறைவேற்றினால் அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சரின் பதவி விலகல் தவறான செய்தி – சிறீலங்கா அரசு

சிறீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது பதவியில் இருந்து விலகியதாக வெளிவந்த செய்தி தவறானது என அமைச்சரின் செயலாளர் சமீர் சவாகீர் இன்று (29) தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற முறையில் தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டது மிகவும் வருத்தத்திற்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவிடம் வழங்கியதாகவும், ஆனால் கோத்தபாயா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

கொரோனோ வைரஸின் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லீம் மக்களின் உடல்களை எரிப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் சமூகத்தவர் அமைச்சர் மீது அதிக அழுத்தங்களை பிரயோகித்ததாக அது மேலும் தெரிவித்திருந்தது.

இலங்கையில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 185 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா துறை, கொரோனா அச்சம் காரணமாக கடந்த 9 மாதங்களாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சேவையை தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு யுக்ரேன் நாட்டிலிருந்து சென்ற சுற்றுலா பயணிகள்,

சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சுற்றுலா துறைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறுகையில், “சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை விசேட விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கே இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்னர், சாதாரண விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தவுடன், பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். அதன்பின்னர், 5 மற்றும் 7 நாட்களுக்கு இடையில் மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வோர் கடைபிடிக்க வேண்டிய, சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும்” என்றார்.