‘அரசியல் கைதிகளின் விடுதலை வெறும் கானல் நீரே’-பரிசிலிருந்து உதயன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பரிசிலிருந்து உதயன் என்பவரால் இலக்கு மின்னிதழுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கட்டுரைஇது, இலக்கு வாசகர்களுக்காக,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது. தேர்தல் வேளைகளில் மட்டும் பேசு பொருளாக  பிரதான இடம் பிடிப்பதோடு சரி, மற்றபடி  மாறி மாறி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் நடந்து வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்வு என்பது பல வருடங்களை தாண்டி இன்று இரண்டு மூன்று தசாப்ங்களை எட்டி விட்டது.  அதாவது அவர்களது வாலிப பருவம் தொடங்கி முழு இளமை காலங்களையும் சிறைச்சாலைகளிலேயே அதிலும் குறிப்பிட்ட சில அடிகள் கொண்ட நான்கு சுவர் கூண்டுக்குள்ளாகவே கழிந்து விட்டது. அதில் சிலர் முதுமை காரணமாகவும், சிலர் சிறை வாழ்வு தந்த நோய் காரணமாகவும் அங்கேயே மரணித்துப் போய் விட்டார்கள். இன்று எஞ்சி உள்ளவர்களது வாழ்வும் கொரோனாவோடு போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்று அரசின் பெரும் செல்வாக்கு மிக்க பிரதான அமைச்சர்களாகவுள்ள நாமல் ராஜபக்ச, உதய கம்மன்பில, போன்றவர்கள் கூட கடந்த காலத்தில் அரசியல் கைதிகளை “முன்னாள் போராளிகள்” என்று விழித்து அவர்களை தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், விடுதலை செய்வதாக குரல் கொடுத்து இருந்தனர். ஆனால் இன்று அவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததும், பாரா முகமாகவும், சிங்கள மக்களின் பிரதிநிதிகள் என்பது போலவுமே கருத்துரைத்து வருகின்றனர்.
எவ்வளவுதான் தமிழ்மக்கள் தன்னெழிச்சியாக சோர்வின்றி, ஓய்வின்றி சிறைச்சாலைகளில் உள்ள தமது உறவுகளின் விடுதலைக்காக தொடர்ச்சியான நீண்ட நெடிய அறப்போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும் எந்த அரசும் அவைகுறித்து கிஞ்சித்தும் கவனம் செலுத்துவதற்க்கு தயாராக இல்லை.
20 வருடங்களுக்கு மேலாக இலங்கை போன்ற நாட்டின் சிறைச்சாலைகளில் காலம் தள்ளுவது என்பது எவ்வளவு கொடியது என்பதை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது ஒன்று.
சர்வாதிகாரிகள் ஏதேச்சாதிகாரத்தின் பேரால் செய்தவைகளை சிறீலங்கா அரசாங்கம் சனநாயத்தின் போர்வையில் செய்து வருகின்றன.
இலங்கையின் யுத்தம் மௌனிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், தமிழ் மக்களின் உடனடி மனிதாபமானம் சார்ந்த பிரச்சனைகள் எவை குறித்தும் கரிசணை கொள்வதற்க்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
கோட்டாபாய  ராஜபக்சவின் அரசியல் சித்தாந்த்தம் என்பது முழுக்க முழுக்க சிங்கள பௌத்தத்தை மட்டும் முழுமையாக கொண்டது. அதனை தாண்டி எதனை செய்வதற்க்கும் அவர் விரும்ப போவதில்லை. இலங்கை மூவின மக்களின் நாடு என்று பெயரளவின் சொல்லி கொண்டாலும் அது சிங்கள மக்களின் நலனைத்தான் போசித்து வருகிறது.
“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எவையும் தேவை இல்லை அபிவிருத்தி மட்டும் போதும்” என்று கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கூறி வந்தவர் தான் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச என்பதும் குறிப்பிடத் தக்கது.
கோட்டாபாய என்ன மனோநிலையில் ஆட்சி செய்ய முனைகிறார் என்பதற்க்கு நல்ல உதாரணம் யாழ்ப்பாணம் மிருசிவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, இராணுவ அதிகாரி சுனில் ரட்ணாயக்க என்ற குற்றவாளியை ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்ட சம்பவமாகும்.  இது மறைமுகமாக தமிழ்மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கருதிக்கொள்ளலாம்.
சுமார் 5 வயது பாலகன் தொடங்கி  பதின்ம வயது சிறார்கள் அடங்கலாக 41 வயதுக்கு உட்பட்டவர்கள் எட்டுப் பேர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதுவித கருசணையும் இல்லாமல், நீதி துறையை அபகீர்த்தீக்கு உள்ளாகும் விதமாக இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.
இந்த விடுதலைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்த போது; ஜனாதிபதி கோட்டாபாய சொன்ன காரணம் தான் வேடிக்கையாக இருந்தது. “இந்த தீர்ப்பானது  சர்வதேசத்தை திருப்தி
ப்படுத்துவதற்காக  நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு  இருந்தது. மற்ற படி அவர் அப்பாவி” என்பதுதான் அவரது நிலைப்பாடு.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஒரு இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதற்க்காக சட்டத்திற்க்கு புறம்பான முறையில் ஆள்கடத்தல், கொலைகளில் ஈடுபட்ட முன்னாள் படைத்துறையை சேர்ந்த சிலரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. ஆனால் தற்பொழுது கோட்டாபாய அரசாங்கம் அவர்களை யுத்த வீரர்களாக கருதி விடுதலை செய்து வருகின்றது.
மறுபுறம் வெறும் சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவி்க்க மறுத்து வருகிறது இந்த அரசாங்கம். காரணம் அவர்கள் தமிர்கள்.
அதேபோல் கடந்த நல்லாட்சி காலத்தில் விடுவிக்கப்பட்டவர்கள்,
விடுதலை பெற்றவர்கள் போன்றவர்களின் விடுதலைக்கு எதிராகவும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அதனை ஒரு சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாற்ற முனைகின்றனர். பாராளுமன்றத்தின் உள்ளும்,  வெளியே பொது மேடைகளிலும் அதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.  இது போன்ற கருத்துக்கள் ஒரு வகையின் ஏற்கெனவே தடுப்பிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஆகும்.
அரச நிர்வாக சேவைகளின்  உயர்பதவிகளில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் படிப்படியாக நியமிக்கப்பட்டு வருவதென்பது ஊடக அரசாங்கம் எந்த மனோநிலையில் ஆட்சி செய்ய விழைகின்றது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.
இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு அல்லது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது சர்வதேசத்தின் தலையீட்டினால் கிடைத்தாலே அன்றி சிங்கள அரசாங்கத்தினால் ஒரு போதும் கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி யாராவது எதிர்பார்த்தால் அது கடல் வற்றி கருவாடு சாப்பிட ஆசைப்பட்டு குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு’ இந்த நிலைமையைதான் தமிழ் மக்களுக்கு  ஏற்படுத்தும்.
பரிசிலிருந்து உதயன் ‘