இலங்கையில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 185 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா துறை, கொரோனா அச்சம் காரணமாக கடந்த 9 மாதங்களாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சேவையை தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு யுக்ரேன் நாட்டிலிருந்து சென்ற சுற்றுலா பயணிகள்,

சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சுற்றுலா துறைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறுகையில், “சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை விசேட விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கே இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்னர், சாதாரண விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தவுடன், பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். அதன்பின்னர், 5 மற்றும் 7 நாட்களுக்கு இடையில் மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வோர் கடைபிடிக்க வேண்டிய, சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும்” என்றார்.