செளதி அரேபியாவில் பெண் செயல்பாட்டாளருக்கு சிறை

செளதி அரேபியாவில் மாற்றத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்த பெண் செயல்பாட்டாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லுஜேன் அல் ஹத்லூலு என்ற பெண் செயற்பாட்டாளருக்கே ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனையை செளதி அரேபியா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்திருக்கிறது.

அதே சமயம், தனது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய நீதிமன்றம், அவருக்கான தண்டனையை இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்களுக்கு நிறுத்தியும் வைத்துள்ளது.

லுஜேன் அல் ஹத்லூலு தண்டனை விதிக்கப்பட்ட நடவடிக்கை, ஆழமான சங்கடத்தை தருவதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்த பெண் செயல்பாட்டாளர் தடுப்புக்காவல் என்ற பெயரில் இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார். இந்த தருணத்தில் துணிவுடன் அவர் இருக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.