தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தேசிய நலன்சார் அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

அதேசமயம், 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் அணைக்குழுவின் செயல் அமர்வுகள் தொடர்ந்து கால அவகாசம் வழங்கியபோதும், சிறீலங்காவின் புதிய அரசு அதில் இருந்து விலகியுள்ளது.

சிறீலங்கா அரசு விலகிய காலம் முதற்கொண்டு புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து செயற்பட ஆரம்பித்த போதும், தற்போது அதனை ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், தமது தீர்மானத்திற்கான ஆதரவையும் கோரியுள்ளார். அதனை தொடர்ந்து பிரித்தானியத் தூதுவரும் அவரை சந்தித்துள்ளார்.

அதேசமயம், பிரித்தானிய அரசும் புலம்பெயர் சமூகத்தை தொடர்புகொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பூகோள பிராந்திய வல்லாதிக்க களத்தில் சிக்குண்டுள்ள சிறீலங்காவானது, மேற்குலகத்தை அனுசரித்து போகமுடியாத ஒரு நிலைப்பாட்டுக்குள் சென்றுள்ளதே எதிர்வரும் மனித உரிமைகள் அணைக்குழுவில் அதன் மீதான தீர்மானம் தொடர்பில் மேற்குலகத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Pompeo Colombo தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -	வேல்ஸ் இல் இருந்து அருஸ்

2015 ஆம் ஆண்டு சிறீலங்காவின் அரசியல் களநிலமையை முற்றுமுழுதாக மையமாக கொண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானமானது, அங்கு ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் நீர்த்துப்போனது நாம் அறிந்ததே. ஆனால் தற்போதைய தீர்மானம் என்பது 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ இந்த ஆண்டு சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் தோல்வி. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா கடுமையான முயற்சி செய்த மிலேனியம் சலஞ்ச் என்ற உடன்பாட்டின் தோல்வி என்பவற்றை தொடர்ந்து மேற்குலகத்தால் முன்வைக்கப்படும் தீர்மானம் என்பதால் அதனை தமிழ் சமூகமும், சிறீலங்கா அரசும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் சமூகத்துடனான தொடர்புகளை பிரித்தானியா அரசு மேற்கொள்ள ஆரம்பித்ததும், பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகம் பிரித்தானியாவில் உள்ள சில தமிழர்களை அழைத்து  கலந்துரையாடியுள்ளது.

அதாவது பிரித்தானியா தலைமையிலான இணைத்தலைமைக்குழுவினர் ஜெனீவாவில் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதில் சிறீலங்கா அரசு தீவிரமாக செயற்பட்டுவருகின்றது. அது இந்தியாவின் உதவியையும் நாடக்கூடும்.

இந்த நிலையில் தான் சிறீலங்கா மீதான தீர்மதனத்தை வலுப்படுத்தி தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கு நீதி கோரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய தேவை ஒன்று தமிழ் மக்களுக்கு முன் முதன்மையான கடமையாக எழுந்துள்ளது.

 

‘இனஅழிப்பு’ என்ற சொல்லை மனித உரிமை அமர்வுகளில் வார்த்தைகளாகவோ அல்லது அறிக்கைகளில் சொற்களாகவோ பயன்படுத்தலாமா என்ற குழப்பமும் சில ‘மனித உரிமை செயற்பாட்டாளர்கள்’ என சொல்லி கொள்பவர்கள் மத்தியில் உள்ளது.

எனினும் இனஅழிப்பு என்ற சொல்லை பயன்படுத்துவது தவறு என எந்த ஆவணமும் தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு தரப்பினர் அதனை பயன்படுத்தும் போது எதிர்த்தரப்பு அதற்கான எதிர்ப்பை அவையில் தெரிவிக்கலாம். இருந்தபோதும் அதனை பயன்படுத்துவதற்கு தடையில்லை என ஜெனிவாவில் பணியாற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமைகள் மையத்தின் துறைசார் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் உள்ள சரத்துக்கள் மற்றும் உடன்படிக்கைகள், விசேட அறிக்கையிடல் குழுக்கள் என்பவற்றினூடான தொடர் அழுத்தங்களை தமிழர் தரப்பு முற்றுமுழுதாக சிறீலங்கா அரசுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. வருடமொன்றுக்கு 4000 இற்கும் மேற்பட்ட மனித உரிமைகள் சார்ந்த முறைப்பாடுகள் அல்லது அறிக்கைகள் மனித உரிமை ஆணையகத்திற்கு கிடைப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதுவரையில் 2009 இற்கு பின்னர் தமிழர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் 42 அறிக்கைகளே ஏற்றுக்கொள்ளப்பட்டு மனித உரிமைகள் ஆணையத்தின் சிபாரிசுகளுக்கான ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன எனும் விபரத்தை அண்மையில் ஐ. நா மனித உரிமை ஆணையக தகவல் சேமிப்பு பகுதியை ஆய்வு செய்த இளம் மனித உரிமை செயற்பாட்டாளர் தெரிவித்தார்.  அவை தவிர மேலும் சில தனிநபர்களின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறான ஆவணங்கள் பாதுகாப்புக் கருதி பொது ஆவணப்பகுதிகளில் வெளிப்படுவதில்லை.

Millenium Fund தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -	வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஐ.நா மனித உரிமைகள் அணைக்குழுவில் உள்ள பல சரத்துக்களின் மையமாகக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் பல நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அந்தந்த சரத்துக்களுக்கு அமைவாக ஐ.நா மனித உரிமைகள் அணைக்குழுவில் அறிக்கைகளை சமர்ப்பித்து தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை கோர முடியும்.

நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய பிரிவுகள்:

சிறுவர் உரிமைகள், போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமடைந்தோர் தொடர்பான விடயம், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வறுமை மற்றும் பட்டினி தொடர்பான விடயம், அவர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பு, இனபாகுபாட்டை நீக்குவதற்கான அனைத்துலக தினம் தொடர்பில் சிறீலங்கா அரசு இழைத்துவரும் இனப்பாகுபாடு தொடர்பாக தமிழ் இனம் தயாரிக்கும் ஆண்டு அறிக்கை, மருத்துவம், சமூகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பாடுபாடு அல்லது புறக்கணிப்பு, கலாச்சார உரிமைகளில் இழக்கப்பட்டுவரும் அநீதிகள், தமிழ் மக்களின் மத சுதந்திரம் மீது சிங்கள பௌத்தம் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைகள், தமிழ் இனத்தின் உணவு மற்றும் விவசாய உரிமைகள் மீதான நெருக்கடி, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இனம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், தமிழ் மக்களின் பொருளாதார வளங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் மீது அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள், பாதுகாப்பான வாழ்விடம் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பான அறிக்கை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், எழுந்தமானமான கைதுகள், அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் காணாமல்போனோர் விவகாரம்.

இந்த விவகாரங்கள் மீது கவனம் செலுத்தி அற்கான செயற்திட்டங்களை ஒவ்வொரு அமைப்பும் அல்லது அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக நீதியை கோரலாம்.

ஒரே விடயத்தை எல்லோரும் முன்வைப்பதை விடுத்து சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனஅழிப்புக்கு எதிராக எல்லா வழிகளிலும் நாம் நடவடிக்கைகளில் இறங்கும்போது மிகப்பெரும் அழுத்தம் ஒன்றை சிறீலங்கா அரசு மீது ஏற்படுத்துவதுடன், அதன் இனஅழிப்பு செயற்பாடுகள் மீதும் தடைகளை ஏற்படுத்தலாம்.

தற்போது சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பூகோள நெருக்கடி மற்றும் சிறீலங்காவுக்கும் மேற்குலகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எமது நடவடிக்கைகள் பலப்படுத்த வேண்டிய கடப்பாடு ஒன்று தமிழ் மக்கள் முன் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.