மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும்
உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி மின் கலங்கள் போன்று பல முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அது மின் சக்தியாக மாற்றப்படுகிறது. அன்று வடக்கு கிழக்கில் மூடப்பட்ட பொருளாதாரம் இருந்தமையால் மாற்று சக்தி மின் வள இணைப்பே காணப்பட்டது. பல ஆயிரக்கணக்கான சூரிய மின் சக்தி ஆலைகள் அமைக்கப்பட்டன. காற்றாலைகள் பல இனங் காணப்பட்டன.
மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாற்று சக்தி வள மாநாட்டில் காற்றாலை அமைப்பதற்காக வடமாகாணத்தில் மன்னார், வல்லைவெளி, வடமராட்சி கிழக்கு, ஆனையிறவு, தீவகம் உட்பட 10 இடங்கள் இனங்காணப்பட்டன. இதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் 5 இடங்கள் இனங்காணப்பட்டதுடன், மாதிரியாக காற்றாலைகள் உருவாக்கப்பட்டன.
சூரியசக்தி மின் கலங்களைப் பொறுத்தவரையில், வட மாகாணத்தில் மட்டும் பல ஆயிரக் கணக்கான சூரிய மின்கலங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்தப்பட்டன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மூடப்பட்ட பொருளாதார சூழ்நிலை இருந்தாலும், அன்று அங்கு மக்கள் ஓரளவாவது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய கூடிய நிலைமை இருந்தது. நகரங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
இன்று ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொழில் செய்ய முடியாத அளவுக்கும், இரவில் பிள்ளைகள் படிப்பதற்குக் கூட முடியாத சூழ்நிலை இலங்கை முழுவதும் காணப்படுகின்றது.
மின்சாரம் இன்மையால் உற்பத்தி நடவடிக்கைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நெருக்கடியில் இருந்த போதும், மாற்று சுய வளங்களை பயன்படுத்தி ஓரளவுக்கு மின்சாரம் பெற கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்று மின்சாரம் இல்லாமையால் மிகவும் ஒரு மோசமான சூழ்நிலையில், இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டு மிக மோசமான சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்தியாவில் இன்று 50க்கும் மேற்பட்ட காற்றாலை உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் பல ஆயிரம் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, இன்று உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
மின் உற்பத்தியைப் பொறுத்தவரையில், காற்றாலைகள் 200 முதல் 350 அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் காற்றாலை மூலம் அதிகளவு மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இருபத்தி ஒன்பது சதவீத மின்சாரம் காற்றாலை மூலம் பெறப்படுகின்றது.
மின்சாரத்தை மாற்றுச் சக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்வதன் மூலமும், அதே நேரம் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிப்பதன் மூலமாகவும் நாம் அதிக பலனை அனுபவிக்க முடியும். ஒரு யுனிட் மின்சாரத்தை சேமித்தால் 2 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு சமமாகும்.
இதனை நாம் உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மஞ்சள் நிற பல்புகளை பயன்படுத்துவதை, தவிர்த்து Tube Light மற்றும் தற்போது வந்துள்ள சிறு சுழல் விளக்குகளை பயன்படுத்தி, மின்சாரத்தை மிகக் குறைந்த அளவு உள்ளெடுத்து, மிக அதிக வெளிச்சத்தை கொடுக்கும் பல்புகள் போன்றவற்றை நாம் உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் மின்சாரப் பாவனையை குறைத்து சேமிக்கலாம். Tube light களுக்கு தற்போது வந்துள்ள Electric Shokeகளை பயன்படுத்தலாம்.
சூரிய சக்தி மின்சாரத்தைப் பொறுத்தவரையில், இலங்கையில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மாவட்டங்கள் தோறும் சூரிய சக்தி மின் உற்பத்தி மிக அதிக அளவில் காணப்படுகின்றன. சூரிய மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அதிகமாகக் காணப்படுகின்றன.
இலங்கை மின்சார சபையைப் பொறுத்தவரையில், விசேட திட்டங்கள் மூலம் சூரிய சக்தி மின்கல மின்சாரம் தனியாரிடம் இருந்து கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுகின்றது. இதனை பயன்படுத்தி யாழ் மாவட்டத்திலும் வட மாகாணத்திலும் பல பொது மக்கள் நூற்றுக்கணக்கான சூரிய சக்தி மின்சார உற்பத்தி மேற்கொண்டு, இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்து வருகின்றனர்
இதனை மிகச் சரியான முறையில் நாம் பயன்படுத்துவோமே ஆயின், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்வாதார திட்டம் ஆகவும், தற்போது உள்ள மின்சார பற்றாக்குறையை நீக்க ஒரு மிகச்சிறந்த திட்டமாகவும் இருக்கும். எனவே இதை விரிவாக்கம் செய்வதற்கு துறைசார் நிபுணர்கள் உதவ வேண்டும்.
எமது மாகாணங்களைப் பொறுத்தவரையில், காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது. இதற்கு சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் முன்வர வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இதுபோன்ற திட்டங்களே முக்கியமாகும்.
சர்வதேச நிறுவனங்கள் சூரிய சக்தி மின்சாரம், காற்றாலைகள் அமைக்க முன்வர வேண்டும். அன்று மூடப்பட்ட பொருளாதாரம் இருந்தபோதும் இது போன்ற திட்டங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் முன்வந்து பல உதவிகள் செய்தன. இன்று திறந்த பொருளாதாரம் உள்ளபோதும் இத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே துறைசார் நிபுணர்கள் மாற்று சக்திவளத் திட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். முதல்கட்டமாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கோயில்கள், கடைகள், மற்றும் தொழிற்சாலைகள் போன்றவைகளில் சூரிய மின்கலம் பொருத்தப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் சோளத்தில் இருந்து மா உற்பத்தி செய்ய காற்றாலை பயன்படுத்தப்பட்டது. பிற் காலத்தில் தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவர காற்றாலைகள் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளில் அதிகளவில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகின்றது. காற்றின் வேகத்தை பொறுத்து ஒரு தடவை பிளேட் சுற்றும் போது 90 தடவை ஜெனரேட்டர் சூழலும். இதுவே மின் உற்பத்தியினை செய்யும்.
இரண்டு கிலோவாட் சூரியசக்தி நிலையத்திற்கான முதலீடு அண்ணளவாக 25 லட்சம் இலங்கை ரூபாய் அளவில் இருக்கும். எனவே டீசலை மட்டும் நம்பி இராது, இயற்கையாகக் கிடைக்கும் சூரிய சக்தி காற்றாலை போன்ற மாற்று வளங்களைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை நாம் உருவாக்க முன்வர வேண்டும். நிலக்கரியைப் பயன்படுத்தியும் பெரிய அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும்.
சூரிய மின்சக்தி வளங்களை பொறுத்தவரையில், ஆசிய அபிவிருத்தி வங்கி 4% வட்டியில் கடன் வழங்கி வருகின்றது. இது 2020 இல் முடிவடைந்துள்ளது. இலங்கையில் 10 ஆண்டுகளில் 2 லட்சம் சூரிய சக்தி மின் கலங்கள் உருவாக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் மட்டும் சூரிய மின்கலங்கள் கடன் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்டம்தோறும் விரிவாக்க வேண்டும். இதன் மூலம் மாற்று சக்தியை வலுப்படுத்த வேண்டும்.
சூரிய சக்தி மூலம் ஒரு Unit 23 ரூபாய் என்ற அளவுக்கு இலங்கை மின்சார சபை மக்களிடமிருந்து கொள்வனவு செய்கின்றது. எனவே இதுபோன்ற திட்டங்களை நாம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதிகரிக்கும் போது, இதன் மூலம் மக்களுக்கான ஒரு வாழ்வாதார திட்டத்தையும் நாம் உருவாக்க முடியும்.
மேலும் அரசாங்கம் டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆலை மின்சாரத்தை பொதுமக்களிடம் இருந்து ஒரு Unit 37.50/= ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்றது. இவ்விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். சூரிய சக்தியிலிருந்து மட்டும் 5 ஜிகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுகின்றது. இது யாழ் மாவட்டத்தில் அதிகளவில் உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 450 வாட்ஸ் சோலார்கள் 5 லட்சத்துக்கு மேல் 2000 வீடுகளில் பூட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி 4% சதவீத வட்டி அடிப்படையில் 80 சதவீதம் வரை கடன் வழங்கி இருந்தது. தற்போது கடன் பணம் ஒதுக்கீடு முடிவடைந்து உள்ளமையால் இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆசிய வங்கி வழங்குமேயானால் 50% வீடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக செய்ய முடியும்.இதன் மூலம் அந்நிய செலவாணி 50% கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் யாழ் மாவட்ட மின் உற்பத்தியில் தன்னிறைவு காண முடியும்.
ஆனையிறவுக்கு அண்மையில் புலோப்பளை பகுதியில் Wind Mill போடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் மின் தடை செய்யப்படாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் Wind Mill போடப்பட்டுள்ளது. இவை பாரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பத்துக்கும் மேற்பட்ட சோலார் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவை ஊடாக மாதாந்தம் 100க்கும் மேற்பட்ட சோலார் செல் உற்பத்தி செய்யப்படுன்றன.
இவ்வாறான முயற்சிகளுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள், துறைசார் நிபுணர்கள் பொருத்தமான ஆலோசனைகளையும், நிதி உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும் என்பதே தாயக மக்களின் தற்போதைய தேவையாகும். மின்சாரத்தில் நாம் தன்னிறைவு காண்பதற்கு சூரியசக்தி, காற்றாலை போன்ற மாற்று சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.