அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் | மட்டு.நகரான்

ஈஸ்டர் தாக்குதல் மட்டு.நகரான்

ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டதே

இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்கள் இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நினைவுகூரப்பட்டனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட நிலைமைகள் என்பது பாராதூரமானதாக இருந்தது.

இலங்கையினைப் பொறுத்தவரையில் காலங்காலமாக ஆட்சிக்குவரும் சிங்கள பேரினவாத அரசுகள் ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு கையிலெடுக்கும் ஆயுதம் இனவாதமாகும். இந்த இனவாதத்தினைக் கொண்டு சிறுபான்மை சமூகத்தினை நிம்மதியற்ற நிலையிலேயே இந்த நாட்டில் வாழவைத்தனர். அதன் எதிரொலியே இன்று இலங்கை பற்றி எரியும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

இவ்வாறான செயற்பாடே இன்று இந்த நாட்டில் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நிலைமையினை உணரும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையிலேயே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முன்னெடுத்தவர்களின் இலக்கு என்பது நிறைவேற்றப்பட்டாலும், அதன்மூலம் அடைந்த இலாபம் என்பது அவர்களுக்கான இழப்பாகவே மாறியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் என்பது ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதற்கும் அப்பால், சிறுபான்மை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மை சமூகத்தினையும் பெரும்பான்மை சமூகத்தினையும் பிரித்து நாட்டில் தமது இருப்பினை நிலைநிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும்.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் காலத்திற்கு காலம் இவ்வாறு இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினை வேறு வகையில் தென்னிலங்கையில் சித்திரித்து வாக்கு வங்கியை பெறும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. ஈஸ்டர் தாக்குதலும் அந்தவகையிலேயே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை கிழக்கில் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வன்முறைகள் எழவில்லையென்ற போதிலும் பெரும்பான்மை சமூகம் அதனை ஒரு இனவாத நோக்குடனேயே பார்த்தது.

ஈஸ்டர் தாக்குதல்இவ்வாறான நிலையிலேயே இன்று இலங்கையில் இந்த ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களை ஏற்படுத்தி மீண்டும் இனவாதத்தினை கொண்டு ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றும் எண்ணங்கள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவேயுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கையில் இன்று கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும்போராட்டங்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினரும் பங்குபற்றக்கூடாது என்ற ஒரு பிரிவினரும் பிரசாரங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அங்குள்ள மக்களின் கருத்துகள் மிகவும் வேறுபட்டதாகயிருக்கின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பின் சட்டத்தரணியாக கடமையாற்றும் என்.கமல்ராஜ் தெரிவிக்கையில்,

இறுதி யுத்ததித்தின் போது பல ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். அது தொடர்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் மௌனமாகவே இருந்தனர், ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரம் பொதுமக்களின் உயிர்கள் பிரியும் போதும் ஆதரித்தனர், இந்த ஒட்டுமொத்த படுகொலைக்கும் ஒரு குடும்பத்தை பொறுப்பாக்க முடியாது ஒட்டு மொத்த பெரும்பான்மை சமூகமும் பொறுப்பு கூற வேண்டும், அப்போது வராத கரிசனை ஒற்றுமை எப்போதும் வரப்போவதில்லை, இது ஒட்டு மொத்த மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் ஒரு சமூகத்தை போட்டு வதைப்பதற்கு பட்ட கடனும், வதைப்பதற்கு பெரும்பான்மை சமூகம் தெரிவு செய்தவர்களின் மூலமும் ஏற்பட்ட விளைவு, வினை விதைத்தவனே வினையினை அறுக்கட்டும், இதில் எம்மால் ஆவதற்கு ஒன்றுமில்லை, கடந்த 2015ம் ஆண்டும் இதேதான் நிகழ்ந்தது எங்களுக்குள் இனவாதம்மில்லை என்று ஒற்றுமையாகத்தான் இருந்தோம், ஆட்சி பலாபலன்களை இரு சமூகம் மட்டும் பாரிய நலன்களை பெற்றது, உரிய அபிவிருத்தியும் கிடைக்கவில்லை உரிமை சார்ந்த விடயம்களும் கை கூடவில்லை.

தற்போதுள்ள அரசினால் எம்மை நசுக்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் தொல்பொருள் திணைக்களம், மேய்ச்சல் தரை பிரிச்சினைகளை உட்பட பல்வேறு அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது யாரும் எங்களுக்காக குரல்கொடுக்கவில்லை. உண்மையில் எமது தமிழ் சமூகம் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சமூகமாகவும் தலைமைகள் உரிய முறையில் திட்டமிட்டு மக்களை வழிநடத்த தவறுவதனாலும், எமது சமூகத்தின் வாக்குகளுக்கும் பெறுமதி அற்றுப்போய் காணப்படுகின்றன. இந்தநிலைமை 2015ல் அவதானிக்க முடிந்தது, இம்முறையும் மக்களுக்கு தலைமைகளும் உரிய திட்டமிடலுடன் செயல்படாவிட்டால் இதுதான் நிலைமை எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் நிலாந்தன், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு எதிராக சிங்கள பௌத்த பிக்கு உட்பட சிலர் இன்று தமிழில் தேசிய கீதம்  பாடியவர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். இனவாதம் மத வாதம் எதுவும் இன்றி எல்லா இன மக்களும் காலிமுகத்திடலில் போராடுகிறார்கள் என்று சொன்னவர்கள் தமிழ், தமிழர்கள் என்றால் இந்த நாட்டில் உள்ள சிங்கள இனவாத சிந்தனை கொண்ட மக்கள் எந்த நல்லிணக்கத்தையும் அங்கிகரிக்க போவதில்லை. என்னை பொறுத்தவரை தமிழ் மக்கள் காலிமுகத்திடலில் இருந்து ஒதுங்கி நிற்பதே சிறந்தது. அவர்கள் போராட்டம் நடத்த வேண்டுமாக இருந்தால் அவர்களது பிரதேசங்களில் நடத்துவதுதான் சிறப்பு. போராட்டத்தை எப்படி திசை திருப்பலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சிங்கள இனவாத அதிகார வர்க்கம் இதே போன்ற பிரச்சினைகளை பெரிதாக்க மீண்டும் இனவாத பூதங்களை ஏவி விட்டு 1983 இன கலவரம் போன்றவற்றை உருவாக்க கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கொழும்பில் உள்ள தமிழர்கள் அடக்கி வாசிப்பதும், அவதானமாக செயற்படுவதும் கட்டாயம் எனவும் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக இவ்வாறான கருத்துகளே அதிகளவில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் ஏன் சிங்கள மக்களின் இந்த போராட்டத்தில் பங்கெடுக்ககூடாது என பல்வேறு தரப்பினராலும் கேள்வியெழுப்பப்படும் நிலையில் அதற்கான பதிலாக நாங்கள் 30வருடத்தில் அனுபவித்த துன்பங்களில் ஒரு துளியை இவர்கள் கடந்த ஒரு வருடமாக அனுபவிக்கின்றனர் என்கின்றனர் மக்கள்.

30வருட போராட்டத்தில் தமிழ் மக்கள் இவ்வாறான சூழ்நிலையில் வாழப்பழகிக் கொண்டார்கள். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களை அழிப்பதற்கு அன்று வழங்கிய ஆதரவுகள் இன்று அவர்களை எதிராகநோக்கி நிற்கின்றன.

இவ்வாறான நிலையிலேயே சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தி தெற்கில் நிலைமையினை திசைதிருப்புவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பிலும் சிறுபான்மை மக்கள் அவதானமாக செயற்படவேண்டிய காலமாகவுள்ளது.

ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்ல நினைக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மையினங்களை மோதவிடுவது என்பது பெரிய விடயமாகயிருக்கப் போவதில்லை. இந்த நேரத்தில் நாங்கள் அவதானமாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதாகவும் இன்று பல்வேறு தரப்பினரும் அறிவிறுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் எதிர்வரும் காலங்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு தமது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். வெறுமனே தமது வாக்கு வங்கியை மட்டும் நோக்காக கொண்டு செயற்படுவார்களானால் எதிர்காலத்தில் அது மிகமோசமான நிலையினை ஏற்படுத்தும்.

தற்போதுள்ள சிறந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு சாதகமாக்கி கொடுக்க வேண்டிய பொறுப்பினை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பதே இன்று கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Tamil News