போராட்டக்களத் துப்பாக்கிச் சூடு: ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான அரச வன்முறை சார்ந்த புதிய திருப்பமா…..? | பி.மாணிக்கவாசகம்

அரசுக்கு எதிரானபி.மாணிக்கவாசகம்

அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங்கள்…

அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங்கள் இந்த வாரம் நாடெங்கிலும் பரவலாகத் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், புதிய பரிமாணங்களுடன் இரண்டு வாரங்களைக் கடந்து விட்டது. ராஜபக்சக்கள் வீடு செல்ல வேண்டும். முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இந்தப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான கோரிக்கையாகும்.

அரசாங்கத்தைப் பதவி விலகச் செய்வது மட்டுமல்ல. பொருளாதார நெருக்கடியினால் எற்பட்டுள்ள எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோரிக்கைப் போராட்டத்தில் மக்கள் இப்போது வீரியத்துடன் களமிறங்கி இருக்கின்றார்கள். அடுத்தடுத்து எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டமையும் அதனால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடான நெருக்கடிகளுமே இதற்கு முக்கிய காரணம்.

பல துறைகளைச் சார்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு வாரத் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றன. நெருக்கடி நிலைமைகள் காரணமாக நலிந்திருந்த இயல்பு வாழ்க்கை இந்தப் போராட்டத்தினால் மேலும் மோசமடைந்துள்ளது. போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பல நகரங்கள் கடையடைப்பு காரணமாக செயலிழந்திருக்கின்றன. பாடசாலைகள், அலுவலகங்களுக்கான வருகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதனால் சிவில் நடவடிக்கைகள் முடக்க நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றன. நாளுக்கு நாள் தீவிரம் பெற்று வருகின்ற போராட்டத்தினால் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கின்றது. நாடு அமைதி இழந்து தவிக்கின்றது.

இந்த நிலையில் அரசியல் நெருக்கடி வேறு நாட்டின் ஸ்திர நிலைமையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. பொருளாதார நெருக்கடியினால் தள்ளாடுகின்ற நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வலிமையுடன் எதிர்கொள்வதற்கு உறுதியான அரசாங்கம் ஒன்று அவசியம். நெருக்கடிகளைத் தளர்த்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச உதவிகளை நாட வேண்டிய கட்டாய நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கின்றது.

நாட்டில் இயல்பு நிலைமையும், நிலையான அரசியல் நிலைமையும் நிலவ வேண்டியது அவசியம். சர்வதேச உதவி நிறுவனங்கள் குறிப்பாக உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இந்த நிலைப்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கின்றது. கடனுதவி பெறுவதற்கு இது ஒரு பிரதான நிபந்தனை. இத்தகைய சூழமைவில் ஆட்சியாளர்கள் எவ்வாறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகின்றார்கள் என்ற வினா விசுவரூபம் எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் வெடித்துள்ள போராட்டங்களையடுத்து, நாட்டின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. போராட்ட நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறி வன்முறைகள் வெடித்துவிடக் கூடாது என்பதற்காகவே பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டிருக்கின்றது. போராட்ட நிலைமைகள் கட்டுக்கடங்காமல் எகிறிச் செல்வதை யடுத்து, பொலிசாருக்கு உதவியாக அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பாதுகாப்புக் கடமைகளில் பொலிசாரும் அதிரடிப்படையினரும் முழு அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இராணுவம் அவ்வப்போது அவசியமான இடங்களில் தலைகாட்டியிருக்கின்றது. நாட்டையும் மக்களையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டியது தனது பொறுப்பு என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இராணுவம் தயாராக இருப்பதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார்.

நெருக்கடி நிலைமைகளினாலும், போராட்டங்களினாலும் நிலைகுலைந்துள்ள நாட்டில் எந்த வேளையிலும் இராணுவம் களத்தில் இறங்கலாம் என்பதையே இராணுவத் தளபதி கோடி காட்டியிருக்கின்றார். அதற்கான சூழல் உருவாகி வருவதையே ரம்புக்கனையில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கோடி காட்டியிருப்பதாகத் தெரிகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிபொருள் ஏற்றப்பட்டிருந்த பௌசர் வண்டிக்குத் தீமூட்ட முயற்சித்ததாகவும், அதனைத் தடுப்பதற்காகவே பொலிசார் நடவடிக்கை எடுத்ததாகப் பொலிஸ் பேச்சாளர் கூறியிருக்கின்றார். இந்த சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்வர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டத்தினால் நிலைமைகள் மோசமடைந்ததையடுத்து, பொலிசார் குறைந்த அளவிலான சக்தியையே பிரயோகித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் வீடுகள் நிறைந்த பகுதியொன்றில் பொலிசார் ஆட்களைத் துரத்தித் துரத்திச் சூடு நடத்திய காட்சியைக் கொண்ட வீடியோ நறுக்கு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியாகி இருக்கின்றது. இந்தக் காட்சி பல விடயங்களைச் சொல்லாமல் சொல்லுகின்றது.

அவ்வப்போது பொருட்களின் விலைகளை தனது விருப்பத்திற்கும் பொருளாதாரத் தேவைக்கும் அமைய அரசு அதிகரித்திருந்தது. மக்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை. நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைதியாக அந்த சுமைகளைத் தாங்கிக் கொண்டார்கள்.

ஆனால் பொருளாதார நெருக்கடி நாட்டின் டொலர் கையிருப்பைக் கபளீகரம் செய்ததையடுத்து, பொருட்களின் விலைகள் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டது. சந்தைகளில் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் மக்கள் கஷ்டங்களை எதிர்கொண்டார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொருட்களைப் பங்கீட்டு அடிப்படையில் விநியோகம் செய்ய வேண்டிய நிலைமை உருவாகி, அரசு மக்களை வீதிகளில் வரிசைகளில் நிற்பதற்கு இழுத்து வந்தது.

நாளாந்த கடமைகள் செயற்பாடுகளைக் கைவிட்டு அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் பல மணித்தியாலங்கள் நிற்க வைக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அளவில் பொருட்கள் கிடைக்கவில்லை. நீண்ட காத்திருப்பின் பின்னர் அவர்கள் மனக்கொதிப்போடு வெறுங்கையுடன் வீடு திரும்ப நேர்ந்தது.

இதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். நாட்டு மக்கள் கலகம் செய்வதற்காக வீதிகளில் இறங்கவில்லை. அரசியல் நலன்களுக்காக அவர்கள் போராடவில்லை. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்குக் கிடையாது. அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத கையறு நிலையிலேயே அவர்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தார்கள்.

அரச வன்முறைபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடைய நிலைமைகளையும் மன உணர்வுகளையும் அரசாங்கம் சரியாக உணரவில்லை என்றே தெரிகின்றது. போராட்டம் நடத்துவது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை அரச தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், போராட்டங்களில் எழுச்சி பெற்றுள்ள மக்களுடைய சீற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளைப் போதிய அளவில் எடுக்கவில்லை. அத்தகைய நடவடிக்கைகளை அவர்களால் எடுக்க முடியவில்லை.

மாறாக போராட்டம் நடத்துபவர்களை அடக்கி ஒடுக்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது என்பதையே ரம்புக்கனையில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெளிப்படுத்தி உள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத அவல நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். வாழ்க்கையை நடத்துவதற்கான வழிமுறைகளுக்காகவே அவர்கள் போராடுகின்றார்கள். இது அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும். மனிதாபிமான ரீதியில் அவர்களுடைய போராட்டத்தை அரசு அணுக வேண்டும். மக்களுடைய போராட்டத்தை மனித நேய முறையில் அணுக வேண்டும்.

வெல்ல முடியாதவர்களாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டோம் என்ற இராணுவ வெற்றிவாத மன நிலையில் இந்த மக்கள் போராட்டத்தைக் கையாள முற்படக் கூடாது. அது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து நாடெங்கிலும் கிளர்ந்து தீவிரமடைந்துள்ள போராட்ட நிலைமைகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் பலதரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டிருக்கின்றார்கள். சர்வதேச அளவிலும் இந்த விடயம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. சர்வதேச அளவில் பலதரப்பினரும் இது குறித்து கரிசனை வெளியிட்டிருக்கின்றார்கள். கண்டனங்களையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.

ரம்புக்கனையில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு முழு அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசு கூறியிருக்கின்றது. ஆயினும் பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என முகத்தில் அடித்தாற்போல எதிர்க்கட்சியினர் கூறியிருக்கின்றனர். பக்கசார்பற்ற நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சுயாதீன விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

போராட்டம் நடத்தியயவர்கள் மீது ரம்புக்கனையில் நடத்தப்பட்ட பொலிசாரின் துப்பாக்கிச்சூடு அரச வன்முறையின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றது. தனக்கு எதிரான போராட்டங்களை அதிகார பலம் கொண்டு அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்ற அரசாங்கத்தின் எண்ணப்பாட்டை அது பிரதிபலித்திருக்கின்றது.

அரசுக்கு மிகுந்த நெருக்கடியையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதில் முன்னணி நிலையில் உள்ள காலிமுகத்திடலின் கோ ஹோம் கோத்தாகம போராட்டத்தைக் குழப்பித் தடுப்பதற்காக இராணுவ வழிமுறையிலான முயற்சியில் அரசு அடியெடுத்து வைத்திருந்த சம்பவம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தத் தகவல்கள் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் அத்தகைய இராணுவ வழிமுறையிலான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் உறுதியாகக் கூறியிருந்தது.

எனினும் அரசாங்கத்தின் இந்த உறுதிமொழியை எவரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. கோத்தபாயாக்களின் கடந்த கால ஆட்சிப் போக்கை நன்கு அறிந்துள்ளவர்கள் அவர்கள் இராணுவ வழிமுறையைப் பிரயோகிக்க மாட்டார்கள் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எது எப்படி இருந்த போதிலும், ரம்புக்கனையில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும், அதில் ஒரு மனித உயிர் பலிகொள்ளப்பட்டமையும் மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக அரச இயந்திரங்கள் எந்த வேளையிலும் வன்முறைகளைப் பிரயோகிக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கின்றது. அந்த நிலைமை உருவாகிவிடக் கூடாது. அத்தகைய ஒரு நிலைமையை நாட்டில் உருவாக்கிவிடாமல் காரியங்களைக் கையாள வேண்டியது பொறுப்புள்ள அனைவரினதும் தலையாய கடமையாகும்.

Tamil News