கடன் நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியுமா? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி

435 Views

கடன் நெருக்கடிகலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி

கடன் நெருக்கடி- இலங்கை மீளுமா?

வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மீளளிப்புச் செய்வதை இடை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் சிக்கிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி யிருக்கின்றது. இலங்கை ஒரு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது என்பதைத்தான் இந்த அறிவிப்பு உணர்த்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில் உண்மை நிலை என்ன என்பது தொடர்பில் பொருளாதாரத்துறை நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகள்.

கேள்வி:
வெளிநாடுகளுக்கான கடன் மீளளிப்பை இடைநிறுத்தப் போவதாக இலங்கை அறிவித்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்த நடவடிக்கை எந்தளவுக்கு பலனளிப்பதாக அமையும்?

பதில்:
இது காலத்தின் தேவை என்றுதான் சொல்லமுடியும். காரணம் – நாம் பெற்றுக்கொண்ட கடன் தொகையில் ஏழு பில்லியன் டொலர் வரையிலான தொகையை இவ்வருடத்துக்குள் செலுத்த வேண்டியிருக்கின்றது. அதிலும் பெருமளவு தொகை ஒன்றை ஜூலை மாதத்துக்குள் கட்டவேண்டியுள்ளது. இவற்றைக் கட்டும் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது இலங்கையிடம் இல்லை. இவ்வருடத்துக்குள் இதனைச் செலுத்தக்கூடிய நிலை இல்லை என்பதால்,  இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

இதனைவிட – இன்று மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதிருக்கின்ற நிலையில், கையிருப்பில் இருக்கின்ற அந்நியச் செலாவணியை இவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. இல்லையெனில் நாட்டில் மக்கள் மத்தியில் பசி, பட்டினி என்பன ஏற்படும். இந்த நிலையில், கடன்கள் அதற்கான வட்டி என்பவற்றை உடனடியாகச் செலுத்தாமலிருப்பதுதான் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரே வழி. அதனைத்தான் அரசாங்கம் செய்திருக்கின்றது.

கேள்வி:
வங்குரோத்து நிலை என்ற இந்த அறிவிப்பு – சர்வதேச ரீதியாக இலங்கையின் நற்பெயரைப் பாதிக்கும் என்ற கருத்து ஒன்றும் முன்வைக்கப்படுகின்றது. அது குறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:
நிச்சயமாக பாதிக்கும். இலங்கை ஏற்கனவே இவ்வாறான ஒரு நிலையில் – அதாவது சர்வதேச ரீதியான தரப்படுத்தலில் பின்னணி நிலையில்தான் உள்ளது. சர்வதேச அளவில் நம்பகத் தன்மையை நாம் ஏற்கனவே இழந்து விட்டோம். நாம் இப்போது இந்த நிலைமை இன்னும் மேசமான கட்டத்துக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள நிலையில் – சர்வதேச நிலையில் எமது நம்பகத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதைவிட – மக்களுடைய அத்தியாவசியத் தேவைகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும். உள்நாட்டில் உள்ள மக்களைப் பாதுகாப்பதா சர்வதேச ரீதியாக உள்ள நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்வதா என்ற கேள்வி எழும் போது, மக்களைப் பாதுகாத்துக் கொள்வது என்ற முடிவுக்குத் தான் வரவேண்டும். இலங்கையின் நற்பெயர் ஏற்கனவே பாதிக்கப் பட்டிருக்கின்றது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியை புத்துணர்வுடன் ஆரம்பிப்பதற்கு இவ்வாறான ஒரு முடிவு உதவலாம்.

கேள்வி:
எதிர்காலத்தில் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதை இந்த அறிவிப்பு பாதிக்காதா?

பதில்:
நிச்சயமாகப் பாதிக்கும். இலங்கையில் நாம் மூன்று வகையான கடன்களைப் பெற்றிருக்கின்றோம். ஒன்று – நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்கள். இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்கள். இரண்டாவது – வர்த்தக ரீதியான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்கள். இதனைவிட, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களும் உள்ளன.

இவைகளிடமிருந்து பெறும் கடன்களை உரிய வகையில் நாம் திருப்பிச் செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது இலங்கைக்கான உத்தரவாதம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படும். ஆனால், இப்போதுள்ள நிலை என்னவென்றால், எம்மால் இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது.

உதாரணமாக வங்கி ஒன்றிலிருந்து கடன் பெற்ற ஒருவர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர் வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவிக்கப்படும். மற்றொரு வங்கியிலிருந்து அவரால் கடன்பெற முடியாத நிலை ஏற்படும். அதேபோன்ற ஒரு நிலை தான் இப்போது இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், கடனை அடைக்க முடியாத ஒருவருக்கு அதனைச் செலுத்துவதற்கான காலத்தை மீள வரையறுப்பதற்கான தெரிவு ஒன்று வழங்கப்படும். அதுபோலத்தான் இலங்கையும் இவ்வாறு அறிவித்திருப்பதன் மூலம் கடனை மீளச் செலுத்துவதற்கான காலத்தை மீள நிர்ணயித்துக்கொள்ள முடியும்.

ஆனால், இது இலகுவானதாக அமையாது. மூன்று வகையில் இதனைச் செய்யலாம். முதலாவது – கடன் மீளளிப்புக்கான காலத்தை நீடிக்குமாறு கோருவது. இரண்டாவது – வட்டியை மட்டும் கட்டி முதலை தாமதமாகச் செலுத்துவதற்காக சம்பந்தப் பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது. மூன்றாவது – கடன்களை ரத்துச் செய்யுமாறு கோருவது. அவ்வாறு கோருவதற்கான சக்தி இலங்கையிடம் இல்லை.

அதேவேளையில், நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களைத்தான் திருப்பிச் செலுத்துவதற்கு மீளச்செலுத்துவதற்கான காலத்தை மீள வரையறுத்துக்கொள்ள முடியும். மற்றைய கடன்களுக்கு அவ்வாறு செய்ய முடியாது. ஆனால், அந்த நிறுவனங்கள் அவ்வாறு காலத்தை மீளவரையறுப்பதற்கு இணங்கினால் எமக்கு மூச்சுவிடுவதற்கான ஒரு கால அவகாசம் கிடைக்கும். இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி அந்நியச் செலாவணியை அதிகரித்து நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம்.

கேள்வி:
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திய நிலையில்தான், கடன் மீளளிப்பை தாமதப்படுத்துவது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா?

பதில்:
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது என்ற நிலைப்பாட்டை எடுத்த பின்னர்தான் இவ்வாறு கடன் மீளளிப்பை இடைநிறுத்துவது என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்திருக்க முடியும். ஆனால், இந்த முடிவுக்கு வருவதற்கு இன்னொரு விடயமும் காரணமாக இருந்துள்ளது. நாட்டில் உருவாகியுள்ள மக்கள் போராட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். காரணம் என்னவென்றால் – எமக்குக் கிடைக்கின்ற அந்நியச் செலாவணியில் 50 வீதமான தொகையை மத்திய வங்கி மூலமாக கடன்களை மீளச்செலுத்துவதற்கு நாம் பயன்படுத்துகின்றோம். இதனால் தான் மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை எமக்கு ஏற்படுகின்றது. அதனால், மக்களுடைய இந்த தன்னெழுச்சியான போராட்டம் மக்களை ஏதோ ஒரு முடிவுக்கு வருவதற்குத் தூண்டியுள்ளது.

இவ்வாறு வந்துள்ள நிலையில் இலங்கைக்குள்ள ஒரேயொரு வாய்ப்பு சர்வதேச நாணய நிதியம்தான். ஏனெனில், ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களை மீளளிப்பு செய்வதை தாதமப்படுத்தும் போது சர்வதேச நாணய நிதியம்தான் இதனை உறுதிப்படுத்த முடியும்.

கேள்வி:
அதற்கு அரசாங்கம் தயங்கியது எதற்காக?

பதில்:
இதற்கு அரசியல் காரணம்தான் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விதி முறைகளின்படி ஒரு நாட்டுக்கு அவர்கள் கடன்கொடுக்கப் போகின்றார்கள் என்றால், அந்த நாட்டின் பொருளாதாரத் தன்மைகள் சீராக்கப்பட வேண்டும். முதலாவதாக இலவசங்களை நிறுத்துமாறு அவர்கள் கேட்பார்கள். இரண்டாவதாக வரிகளை அதிகரிக்குமாறு அவர்கள் கோருவார்கள். இது ஆளும் தரப்புக்கு அரசியல் ரீதியாக பிரச்சினையை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் இதனைப் பயன்படுத்தும். ஆனால், ஆளும் கட்சிக்கு இது நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும். அதனால்தான் – அரசாங்கம் தயங்கியது. இருந்த போதிலும் இப்போது வேறு தெரிவுகள் இல்லை என்ற நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டியுள்ளது.

கேள்வி:
வங்கிகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப் பட்டிருக்கின்றது. இது தற்போதைய நெருக்கடிக்கு எந்தளவுக்குத தீர்வைக் கொண்டுவரும்?

பதில்:
அந்நியச் செலாவணியை இலங்கைக்கு வரவழைப்பதற்கு வைப்புக்களுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. கறுப்புச் சந்தையில் இடம்பெறக் கூடிய அந்நியச் செலாவணி செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இது அவசியமாகிறது. இதனைவிட வங்கிகள் திவாலாகுவதைத் தடுப்பதற்கும் இவ்வாறான நடவடிக்கை அவசியமாகின்றது. இதில் சாதகமான அம்சங்களும், பாதகமான அம்சங்களும் உள்ளன. ஆனால், பொருளாதார நிலை மந்தமாக உள்ள காலப் பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 1990களில் இலங்கையில் 20 க்கும் அதிகமான வட்டி வழங்கப்பட்டது. இது ஒரு குறுகிய கால செயற்பாடுதான். அதிகளவு பணத்தை நாட்டுக்குள்ளே கொண்டுவர வேண்டுமானால் இவ்வாறான செயற்பாடு அவசியமானதாக இருக்கின்றது.

Tamil News

1 COMMENT

  1. […] கடன் நெருக்கடி- இலங்கை மீளுமா? வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மீளளிப்புச் செய்வதை இடை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பது பாரிய பொருளாதாரமேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-178-april-17/  […]

Leave a Reply