நிலைமாறிடா சிங்களத் தரப்புடன் இணைந்து செயலாற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது! | இரா.ம.அனுதரன்

சிங்களத் தரப்புஇரா.ம.அனுதரன்

சிங்களத் தரப்புடன் இணைந்து செயலாற்றுவது…..

இலங்கைத் தீவு இன்று வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்கும் இந்நேரத்தில், அதற்கு காரணமான தற்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களில் சிங்கள தேசம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த அரசாங்கத்தின் முறையற்ற நிதி-நிர்வாக செயற்பாடுகள் காரணமாகவே நாடு இந்த நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வெகுண்டெழுந்து, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, ஆட்சி – அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே அரசியல் செய்து வரும் எதிர்க்கட்சியினர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியேனும் தமது இலக்கை அடைந்துவிட துடியாய்த்துடித்து வருகின்றனர்.

இவை அனைத்தும் சிங்கள தேசம் சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் நடந்தேறி வருபவையாகும். இருப்பினும் சிங்கள தேசத்தின் இவ் எதிர்வினை செயற்பாடுகளுடன் தமிழ் தரப்பினரும் நிபந்தனையேதுமின்றி ஒருங்கிணைந்து செயற்பட முற்படுவதானது, தற்கொலைக்கு ஒப்பானதாகவே அமைந்துள்ளது.

சுதந்திர இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே தனது தேவைகளுக்காக மட்டுமே தமிழர் தரப்பை பயன்படுத்திவிட்டு, பின்நாட்களில் அழித்தொழிக்கவும், அடக்கியாளவும் செய்தமை கடந்த நல்லாட்சி காலம் வரையான அனுபவ பாடமாகும்.

இலங்கைத் தீவை தமது ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க பிரிட்டன் தீர்மானித்த தருணத்தில்கூட, சுயாட்சி அதிகாரத்தை வலியுறுத்தி சமூக – அரசியல் பரப்பில் செயற்பட்டு வந்த தமிழ்த் தரப்பு, அதனை வலுவாக பிரிட்டனிடம் முன்வைக்கும் முனைப்புகள் எதனையும் செய்யாது, சிங்களத் தரப்பின் நயவஞ்சகத் திட்டத்திற்கு இரையாகிப் போயிருந்தமையே தமிழ் மக்கள் இன்றளவும் சந்தித்துவரும் துயரங்களுக்கு மூலகாரணமாகும்.

சிங்களத் தரப்புவரலாற்று முற்காலத்தால் எப்போதுமே தனிப் பிராந்தியமாகவோ, தனி ஆட்சிப் பரப்பாகவோ இருந்திராத நிலையில் கூட, இந்திய முஸ்லீம்களுக்கு சுதந்திரமான நாடு தேவை என்ற தீர்மானகரமிக்க நிலைப்பாட்டில் முகம்மது அலி ஜின்னா உறுதியாக நின்றதனால், இன்று பாகிஸ்தான் எனும் நாடு உலக வரைபடத்தில் முஸ்லிம்களுக்கான தேசமாக உள்ளது.

காலனித்துவ நாடாக இருந்த இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கி விட்டு, பிரிட்டன் வெளியேறத் தீர்மானித்த பொழுது, முஸ்லிம்களுக்கான சுதந்திர நாடாக பாகிஸ்தான் உருவான பின்னரே சுதந்திரம் என்பதில், முகம்மது அலி ஜின்னா எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடம்கொடாது உறுதியாக நின்றமையாலேயே அவ்வரலாறு சாத்தியமாகியிருந்தது.

ஆனாலும் இலங்கைத் தீவில் அந்நிய நாட்டவர் கால்பதித்த போது தனி அரசு நடத்தியிருந்ததுடன், நூற்றாண்டு கடந்த காலம் ஆக்கிரமித்து வந்த அந்நியப் படைகளாலேயே வீழ்த்த முடியாத வகையில் தனித்துவமான வீர மரபுடன் இருந்த தமிழர்களை சுதந்திரத்தின் பெயரால் சிங்களத்தரப்பினருடன் ஒன்றிணைத்து, ஒரே நிர்வாக அலகுக்குள் அடிமைப்படுத்த பிரிட்டன் முற்பட்டபோது, தமிழர்களின் தனியரசை வலியுறுத்தாது சிங்களத்தரப்புடன் நல்லிணக்கம் கொண்டாடிய தமிழ்த் தலைமைகளின் வம்சாவளிகளே தற்காலத்திலும் தொடர்வது தமிழினத்தின் சாபக்கேடாகும்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்த தமிழ்த் தலைமைகள் காட்டிய வழியில் அரசியல் பயணத்தை தொடர்ந்த தமிழ் அரசியல் தரப்பினர், தமிழ்களின் இறையாண்மையை வலியுறுத்தும் விடயத்தில் மென்போக்குடன் நடந்து வந்தமையும், வெறுமனே அரசியல் கோசமாகவே அதனை கடக்க முற்பட்டிருந்தமையுமே, தமிழர்களின் சுதந்திர இலட்சியத்தையே மூச்சாக கொண்டு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் சூழ்நிலைக்கு வித்திட்டது என்பதை எவராலும் மறுத்துவிட முடியது.

சுமார் நான்கு தசாப்த கால விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழர்களின் சுதந்திர தாகம் தமிழ் மக்களின் பங்கேற்புடன் செயல் வடிவுருவாகியிருந்த நிலையில், மாபெரும் மனித பேரவலத்துடன் முள்ளிவாய்க்காலில் நிலைகுத்தி முனை மழுங்கிப்போனமை தமிழர்களின் துர்ப்பாக்கியமே.

ஈழத்தமிழினம் சுமந்து நின்ற விடுதலைக் கனலை மாபெரும் இரத்த சாட்சியாக முள்ளிவாய்க்கால் மண் தன்னகத்தே சுமந்து நிற்கிறது. தமிழின விடுதலைப் போராட்டத்தின் அஞ்சலோட்டத்தை அங்கிருந்தே தொடர வேண்டிய தமிழ் அரசியல் தரப்பினர் வரலாற்று வழியே சிங்களத்தரப்புடன் கூடிக்குலாவி வருவதிலேயே காலத்தை கழித்து வருகின்றனர்.

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் ஒற்றைப் புள்ளியில் ஈழத்தமிழனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கப் பாடுபடுவதை விடுத்து, சிங்கள தேசத்து ஆட்சிமாற்ற கனவுகளுடனேயே ஈழத்தமிழின விடுதலையைக் குழிதோண்டிப் புதைக்கும் வரலாற்றுத் தவறை தமிழ் அரசியல் தரப்பினர் தொடர்ந்தும் செய்து வருகின்றமையானது, தற்போது சிங்கள தேசம் சந்தித்து நிற்கும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் எத்தனம் வரை தொடர்கிறது.

இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இனப்படுகொலை நடந்தேறிய கையோடு தமிழின அழிப்பை போர் வெற்றியாக பிரகடனப்படுத்தி அதனை அரசியல் அங்கீகாரமாக அறுவடை செய்யும் முனைப்பில் சிங்கள தேசம் 2010 ஜனாதிபதி தேர்தலை சந்தித்த போதும் தமிழ்த் தரப்பினர் வரலாற்றுத் தவறையே இழைத்திருந்தனர்.

எந்தெந்த விடயங்களுக்காக ராஜபக்சக்களை பொறுப்புக்கூற வலியுறுத்து கின்றோமோ அத்தனை குற்றங்களிலும் பங்காளியாக இருந்தவரும், இறுதி யுத்தத்தை தலைமை தளபதியாக இருந்து வழி நடத்தியவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ராஜபக்சவுக்கு எதிராக களமிறங்கிய போது அவருக்கு வாக்களிக்குமாறு தமிழர்களை கோரிநின்றனர் தமிழ்த் தலைமைகள்.

தமிழர்களின் ஆதரவு இல்லை என்பதே ராஜபக்சக்களின் வலுவான ஆதரவாக மாறி, சிங்கள-பௌத்த மக்களை ஓரணியில் அணிதிரட்டும் வரலாறு 2010 இலும் கைகூடி 2019இல் புதிய வரலாறாக படைக்கப்பட்டிருந்தது.

தமிழினப் படுகொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ராஜபக்ச தரப்பினரின் கண்மூடித்தனமான சீன சார்பு நிலைப்பாடு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கொதிநிலைக்கு இட்டுச் சென்றிருந்தது. அதன் வெளிப்பாடாக அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றும் வகையில் புதிய ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவர அத்தரப்பினர் பாடுபட்டனர்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இருந்து அதனோடு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தம்மைத்தாமே பிணையெடுக்கும் உக்தியாக அதனோடு நேரடியாகத் தொடர்புடைய தமிழ்த் தரப்பையும் புதிய ஆட்சி மாற்றத்தின் பங்காளர்களாக ஆக்கும் அனைத்துலக சூழ்ச்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியமை மாபெரும் வரலாற்று தவறாகவே அமைந்திருந்தது.

விதி வசமாக ஈழத்தமிழர் நிலத்தில் விதைத்த வினைகளையெல்லாம் மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் ராஜபக்சக்கள் 2019 இல் மீண்டும் ஆட்சிபீடமேறியிருந்தனர். அப்போதுகூட சஜித் பிரேமதாசவை தமிழத் தரப்பு நிபந்தனையற்று ஆதரித்திருந்தமையே வரலாறு காணாத வெற்றியை கோட்டாபாய ராஜபக்சவுக்கு வழங்கியிருந்தது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

சிங்களத் தரப்பு69 இலட்சத்திற்கு மேற்பட்ட தனிச் சிங்கள வாக்குகளாலே தெரிவு செய்யப்பட்டமையை கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கை களை முழுவீச்சாக முன்னெடுக்க வழங்கப் பட்ட ஆணையாக கருதி, அதுவே வடக்கு, கிழக்கில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இராணுவத்தினரது தேவைகளுக்காக எனக் கூறி, நேரடியாகவும், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் ஊடாக மறைமுகமாகவும் வடக்கு, கிழக்கில் தமிழர்களது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றமை, ஈழத்தமிழினத்தின் மரபுவழி தாயகத்தின் மீதான உரித்தையும், உரிமையையும் பலவீனப்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

இவை உள்ளிட்ட ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கும் அடக்குமுறைகளாகட்டும், அத்துமீறல்களாகட்டும் எவற்றையும் தடுத்து நிறுத்தவோ, அவற்றில் இருந்து ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழர்  தேசத்தையும் பாதுகாக்கவோ திராணி அற்றவர்களாகவே தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகள் இன்றுவரை இருந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் மேற்சொன்ன வகையில் சிங்கள தேசத்து ஆட்சிமாற்ற முன்னெடுப்புகளில் தமிழர் தரப்பு கைகோர்ப்பதானது, சிங்கள-பௌத்த பேரினவாத ஆதரவுத்தளத்தை மென்மேலும் திரட்சிபெறச் செய்யும் செயற்பாடாகவே அமைந்துவிடும் என்பது வரலாற்று படிப்பினையாகும்.

சிங்களத் தரப்பு2015இல் அனைத்துலக தலையீட்டின் மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பினும், தமிழர்களால் தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்பதாக சிங்கள் மக்களிடம் ஓயாது ஒப்பாரி வைத்தே ராஜபக்சக்கள் 2019இல் மீண்டும் ஆட்சிபீடமேறினர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பு நிலை, அரசுக்கு எதிரான போராட்டமாக விரிவடைந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரினும் சிங்கள-பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை விட்டு விலகிவிடாத வகையிலேயே மிக கச்சிமாக வழிநடத்தப்பட்டு வருகிறது.

வெறுமனே ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தியதாக கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், முன்குறிப்பிட்டதை போன்று ஆட்சி-அதிகாரத்திற்காக இலவு காத்த கிளிகளாக தருணம் பார்த்துள்ள எதிர்க்கட்சியனருக்கே அரசியல் ஆதாயமாக மாறும் நிலையையும் மறுப்பதற்கில்லை.

இது இவ்வாறு இருக்க, எதிர்க்கட்சியனரால் கொண்டுவரப்பட இருக்கும் கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முண்டியடித்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஆதரவளித்துள்ளமை உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதாகும். த.தே.கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அறிக்கை விடுத்திருந்த போதிலும், தற்போதுவரை அதில் கையொப்பம் இடவில்லை. இருப்பினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், எதிர்க்கட்சி அலுவலகத்திற்கே சென்று அதில் கையொப்பம் இட்டுள்ளனர். நீதியரசர் தரப்பு நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.

சிங்களத் தரப்புஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டு வரப்பட இருக்கும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது, தற்போதைய நிலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எவையும் இல்லை. அவ்வாறு இருக்கையில் கோட்டாபய ராஜபக்ச அரசின் பலத்தை மீளவும் ஒருதடவை எதிர்த்தரப்பினரது புண்ணியத்தில் உறுதிசெய்யும் சடங்காகவே நிறைவுபெறும்.

சிங்கள தேசம் சந்தித்து நிற்கும் பிரச்சினையை அவர்களாகவே சரிசெய்ய விட்டுவிட்டு, தமிழர்களது அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தியதான நகர்வுகளை ஒன்றுபட்ட பலத்துடன் முன்னெடுக்க வேண்டியதே தமிழர் தரப்பின் முன்னுள்ள வரலாற்று கடப்பாடாகும். அதனை விட்டுவிட்டு சிங்கள தேசத்தின் நோய்க்கு மருந்து தடவுவதற்கு முண்டியடிக்கும் தமிழ்த் தலைமைகள் ஈழத்தமிழர்களை அரசியல் முள்ளிவாய்க்காலுக்கு இட்டுச்செல்வது திண்ணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்று முண்டுகொடுத்த நல்லாட்சியின் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் பதவியேற்ற நாள் முதல் இறுதி வரை பகிரங்கமாக சிங்கள தேசத்திற்கு கூறிவந்த “மின்சார நாற்காலியில் இருந்து ராஜபக்ச தரப்பினரை காப்பாற்றியது நாங்களே” என்ற வார்த்தைகளை மறந்து மீண்டும் அதே இனவாத சாக்கடைக்குள் தமிழர்களுக்கு மீட்சியைத் தேடுவதாக தமிழ்த் தலைமைகள் கூறி நிற்பதானது தம்மைத்தாமே ஏமாற்றும் செயலன்றி வேறில்லை.

Tamil News