இளைஞர்களின் புத்தெழுச்சியும் போராட்டமும்
இலங்கையின் இளைஞர்கள் தன்னுயிரையும் துச்சமாக மதித்து ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டிற்காக போராடுகின்றார்கள். ஐனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கனுப்பி நீதியான அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பது இவர்களின் நோக்கமாகவுள்ளது.
காலிமுகத்திடலில் இளைஞர்களின் ஒன்றிணைந்த கோஷங்கள் இலங்கையில் புதிய பரிமாணத்தை தோற்றுவித்துள்ள நிலையில், உலகம் அண்மைக்கால இலங்கை இளைஞர் எழுச்சியை வியந்து நோக்குகின்றது. இளைஞர்களின் இந்த புத்தெழுச்சியானது அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்திருப்பது ஒரு புறமிருக்க மேலும் பல சாதக விளைவுகளுக்கும் அடித்தளமாகி இருக்கின்றது.
குறிப்பாக இலங்கையில் 74 வருடகாலமாக அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்டு வந்த இனவாதத்துக்கு இப்போது சாவுமணி அடிக்கப்பட்டுள்ளதோடு மதகுருமார்களின் கைகோர்ப்பு மனங்கள் ஒன்றிணையும் நிலைமைக்கு வலுசேர்த்திக்கின்றது. இது ஒரு நல்ல சகுனமாகும் என்பதோடு இனவாத சிந்தனையாளர்கள் இனியும் நாட்டு மக்களை பிரித்தாளமுடியாது என்பதனையும் இது எடுத்துக்காட்டியுள்ளது.
திட்டமிடப்படாத அரசியல் முன்னெடுப்புக்கள், நிதி கையாளுகைகள், ஊழல் மோசடிகள் என்பவற்றால் நாடு இப்போது வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது. நாளைய சந்ததியினரின் நிலைமைகள் கேள்விக்குறியாகி யுள்ளதோடு இன்றைய சமூகமும் வாழ்வதற்கு வழியின்றி திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றது.
நாளுக்கு நாள் உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாட்டு மக்களை அதளபாதாளத்தில் தள்ளி வருகின்றது.
இலங்கை நாடு வரலாற்றில் தடம் மாறி பயணித்ததால் இப்போது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இலங்கை ஒரு அழகான நாடு. பல்லின மக்கள், பன்மைக் கலாசாரம் என்பதே ஒரு சிறப்பம்சமாகும். எனினும் பன்மைக் கலாசாரம் என்பது மழுங்கடிக்கப்பட்டு தமிழர் மற்றும் சிறுபான்மைச் சமூகம் ஓரங்கட்டப்படும் நிகழ்வுகளே இங்கு அதிகமாக அரங்கேறியதை அவதானிக்க முடிந்தது.
இலங்கைக்கு இனவாதம் புதியதல்ல. இனவாதத்துக்கு பெயர் போனது இலங்கை நாடு. நாட்டின் சுதந்திரம் வேண்டி ஒரு தாய் மக்களாக ஐக்கியப்பட்டு குரல்கொடுத்த இலங்கை மக்களிடையே சுதந்திரத்திரத்தின் பின்னரான ஆட்சியாளர்களால் இனவாதம் விதைக்கப்பட்டு ஐக்கியம் வேரறுக்கப்பட்டமை கொடுமையிலும் கொடுமையாகும். இதனால் மேலெழுந்த விபரீதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இலங்கையில் முப்பது வருட காலமாக இரத்த ஆடு ஓடுவதற்கும், இலங்கை மாதாவின் புதல்வர்கள் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்வதற்கும் இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இனரீதியான பாகுபாடுகள் முக்கிய காரணமாக அமைந்தன என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இதன் தழும்புகளால் இன்னும் தேசம் அழுது கொண்டிருக்கின்றது.
அத்தோடு சர்வதேசத்தின் மத்தியிலும் இலங்கைக்கு ஏற்பட்டிருந்த கறை இன்னும் மறைந்ததாக இல்லை. யுத்தத்தின் தோற்றுவாய்க்கு ஏதுவாக அமைந்தது இனவாதம் பல்வேறு பரிமாணங்களில் தனது கோடூரத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இனவாதத்தால் நாடு இரத்தத்தில் மூழ்கியபோதும் சுயநலவாத சிந்தனையாளர்கள் அதனை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலான இனவாதப் பட்டியலை காலத்துக்குக் காலம் நடைமுறைப்படுத்தி தனது அரசியல் இருப்பைதக்கவைத்துக் கொள்வதே அரசியல்வாதிகளின் பிரதான கடப்பாடாக இருந்தது. இதிலிருந்தும் அவர்கள் இன்னும் எள்ளளவும் மாறவில்லை. இதனை தெளிவாக புரிந்து கொண்ட இளைஞர் சமூகம் இன்று வீறுகொண்டு எழுந்திருக்கின்றது.
காலிமுகத்திடல் அனைத்து இன மக்களையும் கை கோர்க்க வைத்திருக்கின்றது. இனவாதத்தின் கோரமுகத்தை இளைஞர்கள் சுட்டெரிக்க தலைப்பட்டிருக்கின்றார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தில் பல மதங்களையும் சேர்ந்த மதகுருமார்கள் ஒரே மேடையில் அமர்ந்து இனவாதத்துக்கு சாவுமணி அடித்து வருகின்றார்கள். தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு மொழியுரிமை இங்கு நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.” சுதந்திரத்தின்பின் எங்களை 74 வருட காலமாக ஆட்சியாளர்கள் பிரிதாண்டது போதும். இனியும் நாங்கள் ஏமாற்றத்தை தயாரில்லை ” என்ற கோஷங்கள் வானைப் பிறக்கின்றன.
இளைஞர்களின் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் எனப்பலரும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டின் நெருக்கடிக்கு உடனடித் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அதிபர் ஆசிரியர்கள் இன்று (25) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை எதிர்வரும் 28 ம் திகதி வியாழக்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதோடு காலிமுகத்திடல் சென்று இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளன.
இதனிடையே மதகுருமார்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்தோடு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதிகோரி நடிகர் ஜெகான் அப்புஹாமி சிலுவையைச் சுமந்தவாறு கட்டுவாப்பிட்டியிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை ஒன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்தார். இந்த பாதயாத்திரை கடந்த 22 ம் திகதி இளைஞர்களின் போராட்டக்களமாகிய ஜனாதிபதி செயலகத்தினைக் கொண்ட காலிமுகத்திடலை வந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
தர்க்க ரீதியாக சிந்திக்கின்ற பிரஜைகள் இல்லாத நிலையில் ஜனநாயகம் இலங்கையில் நலிவடைந்திருந்தது. இந்நிலையில் இளைஞர்களின் எழுச்சி ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு உந்துசக்தியாகி இருக்கின்றது. உன்னிப்பாக அரசியலை அவதானிக்கும் இளைஞர் சமூகத்தின் செயற்பாடு சாதக விளைவுகளுக்கு அடித்தளமாகி இருக்கின்றது.
எவ்விதமான அரசியல் பின்புலமுமின்றி இளைஞர்கள் சுயமாக முன்வந்து போராடும் தன்மை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்காலத்தில் அரசியல் ரீதியான அல்லது அமைப்பு ரீதியான சட்டகத்துக்குள் ஒழூங்கமைக்கப்பட ஒன்றாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் இதனால் சாதக விளைவுகள் மேலும் அதிகரிக்குமென்றும் புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.