மலையக கட்சிகளும் நிதானப் போக்கும் | துரைசாமி நடராஜா

மலையக கட்சிகளும் நிதானப் போக்கும்

இலங்கையின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. அரசாங்கம் குறித்த நம்பகத்தன்மை வலுவிழந்து வரும் நிலையில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் முனைப்பில் மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய குழப்ப சூழ்நிலைக்கு மத்தியில் மலையக கட்சிகள் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. இக்கட்சிகள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது, மிகவும் அரசியல் சாணக்கியத்துடன் காய்நகர்த்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இக்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும்  தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகள் சமூகத்தின் மீது தாக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும் என்பதனை யாரும் ஒருபோதும் மறந்து விடலாகாது.

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பார்கள். இங்கு நிரந்தர எதிரிகளும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை. இச்சாக்கடையில் நுழைந்து தனது சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் அனேகர் உள்ளனர். இத்தகையோர் தன்னலத்தை முன்னிருத்தாது சமூகத்தை முன்னிருத்தி காய் நகர்த்தல்களை மேற்கொண்டவர்கள். அதனால்தான் இத்தகையோர்களை வரலாறு நினைவுகூருகின்றது. ஆட்சியில் உள்ள அரசினை வசப்படுத்தி தன்னைச் சார்ந்த சமூகத்தினருக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதென்பது ஒரு தனிக்கலை. இந்த கலையில் கை தேர்ந்தவர்களால் சமூகத்தின் எழுச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. எனினும் மலையக சமூகத்தைப் பொறுத்தவரையில், இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது? என்பதனை நாம் ஆழமாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.

மலையக கட்சிகள் ஆளுங்கட்சியிலும் எதிர்கட்சியிலும் அவ்வப்போது இருந்து வந்துள்ளன. எனினும் ஆளுங்கட்சியில் உள்ளபோது இக்கட்சிகளின் சமூகம் சார்ந்த பங்களிப்பு பூரணத்துவம் மிக்கதாக இருந்ததா? என்று நோக்குமிடத்து இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆட்சியாளர்களை வலியுறுத்தி இன்னும் அதிகமாக செய்திருக்கலாம். எனினும் வாய்ப்பு நழுவவிடப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களுக்குப் பஞ்சமில்லை. இதேவேளை பெரும்பான்மை கட்சிகள் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கணிசமான வாக்குறுதிகளை தொடர்ச்சியாகவே வழங்கி வருகின்றன. பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் இத்தகைய வாக்குறுதிகள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனினும் தேர்தல் வெற்றியின் பின்னரான செயல்வடிவம் என்பது சாத்தியமற்ற போக்கினையே  வெளிப்படுத்துவதாகவுள்ளது. பெரும்பான்மை அரசியல்வாதிகளும் கூட ஆட்சியாளர்களின் இந்த. ஏமாற்று வித்தையை அம்பலப்படுத்தியுள்ளதோடு இத்தகைய பல செயற்பாடுகளுக்கு எதிராக கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளனர்.

நிலமும் வீடும்

மலையக மக்களின் அபிவிருத்தி கருதி கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எண்ணிலடங்காது. மஹிந்த ராஜபக்சவும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் மலையக மக்களின் மேம்பாடு தொடர்பாக வாக்குறுதிகள் பலவும் வழங்கப்பட்டன. இந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்கள், வரவுசெலவு திட்ட முன்மொழிவுகள் என்பன கவர்ச்சியான வாக்குறுதிகளை உள்ளடக்கி இருந்தன. எனினும் இதன் சாதக விளைவுகள் திருப்திகரமானதாக இல்லை.

இதுபோன்றே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தார். மலையக மக்களின் வாழ்வாதாரக் கட்டமைப்பு, கல்வி, உயர் கல்வி, கலாசார, சுகாதார பொது வசதிகள் சம்பந்தமாக நிர்வாக அமைப்புகள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு அரச சேவைகள் அம்மக்களுக்கு நேரடியாக கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கான விஞ்ஞானம், கணிதம், ஆஙகிலம் கற்பிக்கக்கூடிய விசேட பாடசாலைகள் மலையகத்தில் உருவாக்கப்படும். மேலும் மலையக மக்களை லயத்து வாழ்க்கையில் இருந்து மீட்டெடுப்பது உள்ளிட்ட பல வலியுறுத்தல்களும்  மைத்திரியின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில்  இடம்பெற்றிருந்தன. எனினும் ஏட்டளவிலேயே   இவ்விடயங்கள் பலவும் முற்றுப் பெற்றுவிட்டன.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றியில் மலையக மக்களின் பங்களிப்பினை புறந்தள்ளி விடமுடியாது. நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 75,823 வாக்குகளை ஜனாதிபதி பெற்றுக் கொண்டிருந்தார். இம்மாவட்டத்தின் ஹங்குரான்கெத்த தொகுதியில் கோட்டாபய வெற்றி பெற்ற நிலையில் கண்டி, மாத்தளை, பதுளை போன்ற இடங்களிலும் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்தன. எனினும் மலையக மக்களின் நலன்பேணும் விடயத்தில் திருப்தி கொள்ள முடியவில்லை.

2019 ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட ‘கொள்கை விளக்கமும் கோரிக்கைகளும்’ என்ற தலைப்பிலான  முன்மொழிவில் மலையக மக்களின் மேம்பாடு கருதி முன்னெடுக்கப்படவுள்ள பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. நிலமும் வீடும், சுகாதாரம், ஊதியம், சிறப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் எனப்பலவும் இதில் உள்ளடங்குகின்றன. பல்வேறு அபிவிருத்திகளையும் ஏற்படுத்தி நாட்டின் ஏனைய மக்களுக்கு சமமான முறையில் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் மலையக மக்களும் இணைக்கப்படுவதை உறுதி செய்வதாக புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தி இருந்தது. நிலமின்மை, வீடின்மை பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு கல்வி, சுகாதாரம் போன்ற உரிமைகளும், போக்குவரத்து, சுத்தமான குடிநீர் போன்ற உட்கட்டுமான வசதிகளும் மேம்படுத்தப்படும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளில் நவீன தொழில்களுக்கு மாறுவதற்கும் கௌரவமான வருமானத்தை ஈட்டுவதற்கும் ஆவன செய்யப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பெருந்தோட்டத் துறை மீள்கட்டமைப்பு செய்யப்படும். பெருந்தோட்ட பிரதேசங்களில் பரம்பரையாக வாழும் சட்ட வதிவுடையோருக்கும் அதனை அண்மித்த நகரங்கள் குடியிருப்புகளில் வாழுகின்ற நிலமற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் சொந்த நிலத்தையும், வீடற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தற்போதைய நிலையில் இருந்து முன்சென்று ஒவ்வொரு குடும்பமும் தலா 7 பேர்ச்சஸ் காணியைப் பெற்றுக் கொள்வது உறுதிப்படுத்தப்படும். மலையக மக்களின் நிலம், வீட்டு வசதி தொடர்பான விடயங்கள் தேசிய காணி மற்றும் தேசிய வீடமைப்பு கொள்கைகளுக்கு அமைவாக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் உள்ளடக்கப்படும்.

இவற்றோடு பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்கான விசேட ஜனாதிபதி செயலணி உடனடியாக நிறுவப்படும். பெருந்தோட்டத்துறை நிறுவன மேற்பார்வைகளின் கீழ்வரும் பெருந்தோட்ட சமூக விவகாரங்களை, அரச பொது நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்குள்ள தடைகளை அகற்றி புதிய எல்லை மீள்நிர்ணயத்துடன் மேலதிக பிரதேச செயலகங்கள், மேலதிக கிராம சேவகர் பிரிவுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் போன்றன நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதைப் போன்று நிறுவுதல். பெருந்தோட்ட சமூகத்தை வலுப்படுத்தும் சிறப்பு அபிவிருத்தி நடவடிக்கையாக நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல் முதலான முக்கிய பல விடயங்களை புதிய ஜனநாயக முன்னணியின் கொள்கை விளக்கம் கொண்டிருந்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தம் பல சிறப்பான விடயங்களை புதிய ஜனநாயக முன்னணி முன்வைப்பதற்கு உந்துசக்தியாக அமைந்தது. எனினும் 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச 6,924,255 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி ஈட்டிய நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா 5,564,239 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இதனால் முன்னணியின் மலையக அபிவிருத்தி சார்ந்த கொள்கைகள் வலுவானதாகக் காணப்பட்ட போதும் அது சாத்தியப்பபடாமல் போனது.

சுயாதீனச் செயற்பாடு

பெரும்பான்மைக் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் மறந்து செயற்படுவதுமான நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், எமது அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மை கட்சிகளுக்கு பெற்றுக் கொடுத்து விட்டு குரலின்றி இருக்கும் நிலையே அதிகமுள்ளது. அத்தோடு சிலர் அமைச்சு பதவி உள்ளிட்ட பல வசதி வாய்ப்புகளை அரசியல் பிரவேசத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் நிலையில் வாக்களித்த மக்கள் நட்டாற்றில் விடப்படும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலை மாற்றப்படுவதோடு மலையக அரசியல்வாதிகள் நிதானப் போக்கினை கடைபிடித்து சமூகத்தின் முன்னோக்கிய நகர்விற்கு வழிசமைக்க வேண்டும். சமகாலத்தில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றிருக்கின்றது. நடு இரவில் என்னென்ன நடந்திருக்குமோ! என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொருவரினதும் காலைப்பொழுது விடிகின்றது. விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட பலவும் இதில் உள்ளடங்கும். இதேவேளை அரசியலில் எந்த நேரத்திலும் மாற்றங்கள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாக அதிருப்தியுடன் வெளியேற ஆரம்பித்திருக்கின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் உட்பட 42 பேர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து அரசின் பெரும்பான்மை கேள்விக்குறியாகியுள்ளது.

மலையக கட்சிஇதனிடையே பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு இதுவரை காலமாக வழங்கிவந்த ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலக்கிக் கொண்டுள்ளதோடு, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  ஜீவன் தொண்டமான், மருதுபாண்டி ரமேஷ்வரன் ஆகியோர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக  செயற்படவுள்ளனர். அரசாங்கத்தின் மீது மலையக மக்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக இத்தகைய முன்னெடுப்புக்கள் அமைந்துள்ளன. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் போராட்ட சூழ்நிலைக்கும் மத்தியில் எதிரணியில் இணையக்கூடுமென்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வரும் தமிழ் முற்போக்குக் கூட்டணி.  சஜித் பிரேமதாசாவின் கரத்தை பலப்படுத்துவதில் ஈடுபட்டுழைத்து வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் ஆட்சிபீடமேறினால், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை நகர்வில் முன்னணி ஈடுபட்டுள்ளதாக பலரும் பேசிக் கொள்கின்றார்கள். அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வதில் தப்பில்லை எனினும் அவ்வமைச்சுப் பதவியின் ஊடாக மலையக மக்களுக்கு உரிய சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலை தற்போது திரிசங்கு சொர்க்கமாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் நிழலில் நீண்ட காலமாக தங்கியிருந்த இக்கட்சி தற்போது அவரைப் பிரதமராகக் கொண்ட  பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியுள்ள நிலையில் அடுத்துவரும் தேர்தல்களில் இ.தொ.கா.வின் நிலைப்பாடு என்ன? ஐ.தே.க. வோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ எந்தளவுக்கு இ.தொ.கா.வை அரவணைத்துக் கொள்ளப் போகின்றன? அக்கட்சிகளிலுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள், இ.தொ.கா. அக்கட்சிகளில் உள்நுழைய முற்படுமிடத்து எத்தகைய எதிர்வினைகளை வெளிப்படுத்துவார்கள்? என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் சமகால அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மலையக கட்சிகள் சமூகத்தின் நலன் கருதி விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. பெரும்பான்மை கட்சிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பியும், அமைச்சு பதவியின் சுகபோகங்களையும் எதிர்பார்த்தும் மலையக சமூகத்தினரை பெரும்பான்மை கட்சிகளுக்கு பலிக்கடாவாக்குவதை விடுத்து மனச்சாட்சியின்படி நடந்து இச்சமூகத்தினரின் எழுச்சிக்கு தோள் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

Tamil News