விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்: தற்காலிக விசாவாசிகளுக்கு அனுமதி கிடையாதா?

விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்


விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்: தற்காலிக விசாவாசிகளுக்கு அனுமதி கிடையாதா? வரும் நவம்பர் மாதம் முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திய அவுஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த வாரம் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருந்தார். 

இந்த குறிப்பிட்ட அனுமதி என்பது அவுஸ்திரேலியாவுக்குள் வருவதற்காக அல்லது சொந்த நாட்டிற்கு சென்று திரும்பி வருவதற்காக காத்துக்கொண்டிருக்கும் தற்காலிக விசாவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச எல்லைகள் திறக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசின் அறிவிப்பின் மூலம் அவுஸ்திரேலியர்களும் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்றவர்களும் மட்டுமே நாட்டிலிருந்து வெளியேறவும் மீண்டும் நுழையவும் முடியும் என்பதால் தற்காலிக விசாவாசிகள் தாங்கள் எப்போது அனுமதிக்கப்படுவோம் என்ற நிச்சயத்தன்மையற்ற நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ள விக்டர் அவ்வாறு காத்திருப்பவர்களில் ஒருவர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிக்கோவில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க டிசம்பர் மாதம் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது, “அவுஸ்திரேலியர்களுக்கான வாழ்க்கையை திரும்பி தருவதற்கான நேரம் இது,” என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருந்தார். ஆனால் விக்டர் போன்ற தற்காலிக விசாவாசிகள், அவுஸ்திரேலியாவில் சிக்கிக்கொண்டுள்ளதாக உணர்கின்றனர்.

சிட்னியில் முதுகலைப் பட்டத்தை முடித்த விக்டர் பட்டதாரி விசாவின் மூலம் அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது வேலைச் செய்யும் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய திட்டமிட்டிருந்தாலும் கொரோனா பொருளாதார சூழல் காரணமாக அந்நிறுவனத்தால் இவருக்கு ஸ்பான்சர் செய்ய இயலவில்லை எனப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதம் விக்டரின் சொந்த நாட்டில் கொரோனா தொற்று பெருகியிருந்த பொழுது, அவரது தாயுடனான உரையாடலை நினைவுக்கூறும் அவர், “எங்களிடையே கடுமையான ஓர் உரையாடல் நடந்தது. நான் அவுஸ்திரேலியாவில் ஸ்பான்சர் பெறுவதற்கு போராடிக்கொண்டிருந்ததால் தனக்கு ஏதேனும் நடந்தால் திரும்பி வர வேண்டாம் என்று என் தாய் கூறினார்.”

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் இதே நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விசாவாசிகளுக்கு ஏன் இல்லை என்பதே விக்டரின் கேள்வியாக இருக்கிறது.

“அவுஸ்திரேலியாவில் தான் நாங்கள் வாழ்கிறோம், உழைக்கிறோம், வரிச் செலுத்துகிறோம்,” என்பது விக்டரின் கேள்வி மட்டுமல்ல, அவுஸ்திரேலியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தற்காலிக விசாவாசிகளின் கேள்வியாகவும் இருக்கிறது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply