AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா

AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல

AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா

ஒஸ்ரேலியா (A), பிரித்தானியா(UK),  அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து இந்த மூன்று ஆங்கிலம் பேசும் நாடுகளின் கூட்டணியை AUKUS என அழைக்கின்றனர். மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2021 செப்டம்பர் 15-ம் திகதி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கலந்துரையாடி இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது.

AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல

இந்த மூன்று நாடுகளின் கூட்டணி இணையவெளிப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology),  கடல் நீரடிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதாகவும் இணையவெளிக் கலந்துரையாடலில் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த மூன்று நாடுகளுடன் கனடாவும் நியூசிலாந்தும் இணைந்து ஏற்கனவே ஐந்து கண்கள் (Five Eyes) என்னும் உளவுக் கூட்டமைப்பை அமைத்துள்ளன.

ஒஸ்ரேலிய சீனத் தொடர்பு

1.2மில்லியன் சீனர்கள் ஒஸ்ரேலியாவில் வசிக்கின்றனர். இது ஒஸ்ரேலியாவின் மக்கள் தொகையில் 5.6ம% ஆகும். ஒஸ்ரேலிய அதிக வர்த்தகம் செய்யும் நாடு சீனாவாகும். சீனாவுடன் வர்த்தகம் நாடுகளின் பட்டியலில் ஒஸ்ரேலியா ஏழாவது இடத்தில் இருக்கின்றது. ஒரு சில நாடுகளே சீனாவில் இருந்து செய்யும் இறக்குமதியிலும் பார்க்க அதிக ஏற்றுமதியை சீனாவிற்கு செய்கின்றன. அவற்றில் ஒன்று ஒஸ்ரேலியாவாகும். சீனாவிற்கும் ஒஸ்ரேலியாவிற்கும் இடையில் முறுகல் தொடங்கிய பின்னர் சீனாவிற்கான ஒஸ்ரேலியாவின் ஏற்றுமதில் $3 பில்லியன் இழப்பீடு ஏற்பட்டது.

2019-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 27.4% சீனாவுடன் நடந்தது. சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும் சீன முதலீடும் ஒஸ்ரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின. 180,000 சீன மாணவர்கள் ஒஸ்ரேலியாவில் பயில்கின்றதால் பல்கலைக்கழகங்கள் 12பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெறுகின்றன. 2017 நவம்பரில் சீனாவின் அரச ஊடகமான குளோபல் ரைம்ஸ் ஒஸ்ரேலியாவின் பொருளாதாரம் சீனாவில் பெரிதும் தங்கியுள்ளது ஆனால் அது அதற்கேற்ப நன்றியுடையதாக இல்லை என்றது.

சீன இணையவெளி ஊடுருவல்

2013-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவின் உளவுத் துறைக்கு கட்டிய புதிய தலைமச் செயலகத்தின் திட்ட வரைபை சீனா இணையவெளியூடாக ஊடுருவித் திருடிக் கொண்டதாக குற்றச் சாட்டுகள் வெளிவந்தன. 2019-ம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற தேர்தலுக்கு முன்னர் ஒஸ்ரேலியப் நாடாளுமன்றத்தினதும் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் கணினித் தொகுதிகள் மீது சீனாவில் இருந்து இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒஸ்ரேலிய அரசு அறிவித்தது.

2020-ம் ஆண்டு சீனாவில் இருந்து செய்யப்பட்ட இணையவெளி ஊடுருவல்கள் மூலம் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்புத்துறையின் 300 Gigabytes அளவிலான தகவல்கள் திருடப்பட்டதாக அமெரிக்க அரசு பகிரங்கமாக அறிவித்தது. ஒஸ்ரேலியாவின் தொழிற்கட்சியில் உள்ள சீனர்களை தனது கையாட்களாக்கி அவர்களை ஒஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக்க சீனா முயன்றதை ஒஸ்ரேலியாவில் வாழும் சீனர்களே அம்பலப்படுத்தினர். ஒஸ்ரேலியப் பல்கலைக்கழகங்களில் அரசுக்கு தெரியாமல் சீனா இரகசியமாக தனக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்வதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

மோசமாகிய ஒஸ்ரேலிய சீன உறவு

2020இன் பிற்பகுதியில் சீன ஒஸ்ரேலிய உறவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதில் முதன்மையானது கொவிட்-19 தொற்று நோயின் பரவலில் சீனாவின் பங்கு தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா அறிவித்தமையாகும். இரண்டாவது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்குவதில் ஒஸ்ரேலியா அதிக முனைப்பு காட்டியமை. மூன்றாவது இந்தியாவுடன் ஒஸ்ரேலிய செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம். அதன் படி ஒஸ்ரேலிய படை நிலைய வசதிகளை இந்தியாவும் இந்தியப் படை நிலைய வசதிகளை ஒஸ்ரேலியாவும் பாவிக்கலாம்.

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியான மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ்(கீலிங்) தீவையும் இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் இரு நாடுகளும் சீனாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பாவிக்கும் போது சீனக் கடற்போக்குவரத்து பெரும் பின்னடைவைச் சந்திக்கும். நான்காவது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செய்து வந்த மலபார் போர்ப் பயிற்ச்சியில் 2020 நவம்பரில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது.

சாம்பல்-பிராந்தியப் போர்

ஒஸ்ரேலிய சீன உறவில் முறுகல் ஏற்பட்ட பின்னர் சீனா பலவகையிலும் ஒஸ்ரேலியாவிற்கு மிரட்டல்கள் விடுத்துக் கொண்டிருக்கின்றது. அதை போரியல் நிபுணர்கள் சாம்பல்-பிராந்தியப் போர் (Grey Zone War) என்கின்றனர். ஒஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா தடை விதித்தது. ஒஸ்ரேலியாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் இந்தோ பசுபிக் கடற்பரப்பில் சுதந்திரமான கடல் மற்றும் வான் போக்குவரத்தை உறுதி செய்யவும் அமெரிக்காவும் ஒஸ்ரேலியாவும் பிரித்தானியாவும் முயல்கின்றன.

25china military 1 AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மாசீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது கடற்படை வலிமையை ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை விஞ்சும் வகையில் விரிவுபடுத்தியும் புதுமைப்படுத்தியும் உள்ளது. ஒஸ்ரேலியாவிற்கு அண்மையில் உள்ள தீவுகளில் சீனா அதிக்கம் செலுத்தவும் முயன்றது. இந்த நிலையில் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடனேயே AUKUS உருவாக்கப்பட்டது. இது ஓர் உலகப் போருக்கான வியூகம் அல்ல. இது பாதுகாப்பு நகர்வு மட்டுமே.

பிரான்ஸின் கடும் சினம்

யுருமுருளு உடன்படிக்கையின் ஓரு பகுதியாக அமெரிக்காவும் பிரித்தானியாகவும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்குதலும் உள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் பிரான்ஸும் 2016-ம் ஆண்டு செய்து கொண்ட ஒஸ்ரேலியாவிற்கு 12 டீசல் எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டது. பிரான்ஸை கடும் சினமடைய வைத்த இந்த இரத்திற்கு ஒஸ்ரேலியா முன்வைக்கும் காரணங்கள்: 1. பிரான்ஸின் உற்பத்தியில் காலதாமதம் ஏற்படுகின்றது. 2. சீனாவின் அதிகரித்த கடற்படை வலுவைச் சந்திக்க அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அவசியமாகியுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கரிசனை

6000 AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மாஅமெரிக்கா செய்யும் உலக கேந்திரோபாய நகர்வுகளில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவது உண்டு. ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் AUKUS உருவாக்கப்பட்டமை கவலையளித்துள்ளது. ஏற்கனவே அவற்றுடன் கலந்து ஆலோசிக்காமல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவை எடுத்தமையால் அவை அதிருப்தி கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஓர் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு முறைமையை பிரித்தானியாவுடனும் ஒஸ்ரேலியாவுடனும் இணைந்து உருவாக்கவுள்ளது. அந்த உயர் தொழில்நுட்பம் மற்ற நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன.