காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது

நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாதுகனகரத்தினம் சுகாஸ்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான என கனகரத்தினம் சுகாஸ் உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்

கேள்வி ?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியூயோர்கில் ஐ.நா. செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின்போது பல விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். முக்கியமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழ்களை வழங்குவது, அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பதைக் கூறியிருக்கின்றார். இவை குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில் !
எங்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகளுடைய பொதுச் செயலருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற உரையாடல்களின் பொழுது இலங்கை ஜனாதிபதி தெரிவித்ததாக சில செய்திகள் ஊடகங்களில் காணக்கிடைத்திருக்கிறது. அந்த வகையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் பிரஸ்தாபித்திருக்கின்றார். அது மட்டுமல்லாது, சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளுக்கு, அவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பிற்பாடு பொது மன்னிப்பு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இலங்கை ஜனாதிபதியினால் கூறப்பட்டிருக்கின்ற இந்த இரண்டு விடயங்களையும் நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.

முதலில் இலங்கை ஜனாதிபதி அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திற்கு அவர் கூறியிருக்கின்ற பதில், அந்த உறவுகளினுடைய வேதனையை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஜனாதிபதி அவர்கள் காணாமல் ஆக்கபட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்குகின்றோம் என்று மிகவும் இலகுவாகக் கூறியிருக்கின்றார்.  நாங்கள் ஜனாதிபதியைப் பார்த்துக் கேட்கின்றோம். கௌரவ ஜனாதிபதி அவர்களே! உங்களுடையதோ அல்லது உங்களுடைய சகோதரர் மகிந்த ராஜபக்சவினுடைய பிள்ளையோ அல்லது உங்களுடைய சகோதர்களோ  காணாமல் ஆக்கப்பட்டிருந்தால், காணாமல் போயிருந்தால், நீங்கள் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளத் தயாரா? நீங்கள் நட்டஈட்டை வாங்கிக் கொண்டு பேசாதிருக்கத் தயாரா?  இதற்கு விடை என்னவாக இருக்குமோ அது தான் எங்களுடைய விடையும்.

ஒருபொழுதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்குவதையோ, நட்டஈடு வழங்குவதையோ நாங்கள் ஏற்க முடியாது. இந்த மரணச் சான்றிதழுக்காகவும், நட்ட ஈட்டிற்காகவும் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 1500 நாட்களைக் கடந்து கொட்டுகின்ற மழைக்கும், கொடும் வெய்யிலுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இலங்கை ஜனாதிபதி அவர்கள் கருதுகின்றாரா? அந்த உறவுகள் கேட்பது, அந்த உறவுகளின் பிரதிநிதிகளாக நாங்கள் கேட்பது என்னவென்றால், காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது முற்றுமுழுதாக ஒரு பக்கச் சார்பற்ற விசாரணையாக அமைய வேண்டும். அதிலே சர்வதேச நீதிபதிகள் மாத்திரம் தான் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள்? காணாமல் ஆக்கியவர்கள் யார்? என்ற விடயங்கள் கண்டறியப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும், பரிகாரமும் கிடைப்பதோடு, காணாமல் ஆக்கியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது தான் எங்களுடைய கோரிக்கையாக அமைகின்றது.

அடுத்து சிறைக் கைதிகளுக்கு அதாவது அரசியல் கைதிகளுக்கு விசாரணையின் பின்னர் பொது மன்னிப்பு வழங்குவேன் என்று ஒரு சிறுபிள்ளைத்தனமாக, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற வகையில், ஜனாதிபதி அவர்கள் கூறியிருக்கின்றார். உண்மையில் காணாமல் போனோர் விவகாரத்தை எவ்வாறு தட்டிக் கழிக்கின்றாரோ அவ்வாறு தான் அரசியல் கைதிகளுடைய விவகாரத்தையும் சூட்சுமமாகக் காலம் கடத்துகின்றார்.  இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இன்று அரசியல் கைதிகளில் பலர் பத்து ஆண்டுகளாக, இன்னும் பலர் பதினைந்து இருபது ஆண்டுகளைக் கடந்தும், சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய விசாரணைகள் நிறைவடைந்ததன் பிற்பாடு, பெரும்பாலானவர்கள் இயல்பாகவே விடுதலையாகி விடுவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக போதிய குற்றச்சாட்டும் இல்லை. ஆதாரமும் இல்லை, சாட்சியங்களும் இல்லை, தடயங்களும் இல்லை. பொய்யான வழக்குகளிலே குற்றம் செய்யாத அப்பாவிகள் தாங்கள் கொண்டிருந்த அரசியல் கருத்துக்களுக்காக அரசியல் கைதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். ஆகவே விசாரணைகள் முடிந்தால், அவர்கள் இயல்பாகவே விடுதலையாகி விடுதலையாகி விடுவார்கள்.

ஆகவே இயல்பாகவே விடுதலையாகின்றவர்களுக்கு நாங்கள் கேட்கின்ற விடயம், அவர்கள் பல்லாண்டுகளாக சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய விசாரணைகள் முடிவடைவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ தெரியாது. ஆகவே உடனடியாக அரசியல் கைதிகள் நிபந்தனை யில்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக அமைகின்றது.

கேள்வி ?
ஜெனிவா குறித்த அணுகுமுறை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே உருவான முரண்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக் கின்றது. தமிழ்க் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து பொதுவான நிகழ்ச்சி நிரல் ஒன்றுடன் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் தோல்வி யடைந்தமைக்கு என்ன காரணம்?

பதில் !
எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் மற்றைய கட்சிகளைப் போல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இரண்டு கடிதங்களையோ, மூன்று கடிதங்களையோ அனுப்பிய அல்லது அனுப்பத் தயாரான தமிழ்த் தேசியக் கொள்கைக்கு எதிராகச் செயற்படுகின்ற ஒரு கட்சி அல்ல.  எங்களுடைய அமைப்பாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அன்று தொட்டு இன்று வரை, வலியுறுத்தி வருகின்ற ஒரேயொரு விடயம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கையினுடைய பொறுப்புக் கூறலை, இனப்படுகொலை விவகாரத்தை மட்டுப்படுத்தி, நாங்கள் ஈழத் தமிழர்களுடைய இனப் பிரச்சினைக்கோ அல்லது ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கோ ஒரு தீர்வைப் பெறமுடியாது.

எனெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு எந்தவொரு நாட்டையும் திணிக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய, தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கிடையாது. அதனால் தான் எங்களுடைய கட்சி அன்று தொட்டு இன்று வரை ஈழத்தில் அரங்கேறிய இனப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், ஒரேயொரு வழிதான் இருக்கின்றது. முற்றுமுழுதான  சர்வதேச விசாரணை ஒன்று ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

அந்த சர்வதேச விசாரணையில்  இலங்கை  விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதன் வாயிலாக நடத்தலாம். அல்லது குறைந்த பட்சம் ஒரு தீர்ப்பாயம் ஒன்றை ஒழுங்கமைப்பதன் வாயிலாகவும் நடத்தலாம். இதுதான் எங்களுடைய மாறாத நிலைப்பாடு. இது எங்களுடைய நிலைப்பாடு என்று சொல்வதைவிட, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரேயொரு உபாயமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், சட்டப் புலமை வாய்ந்த சர்வதேச சட்டத்திலே விற்பன்னர்களாக இருக்கக் கூடிய தமிழர்களும், சர்வதேச அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெற்றவர்களும் நம்புகின்றார்கள்.

இந்த விடயத்தில் உறுதியாக இருக்கக் கூடியவர்களுடன் சேர்ந்து செயற்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராகவே இருந்தது. இருக்கின்றது. ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியத்தை வெறும் உதட்டளவிலும், தங்களுடைய கட்சிப் பெயர்களிலும் மாத்திரம் ஒத்தி வைத்திருக்கின்ற போலித் தேசியவாதிகளால் தான் எங்களுடைய சரியான நிலைப்பாட்டிற்குப் பின்னால் வரமுடியாமல் இருக்கின்றது.

ஆகவே போலித் தேசியம் பேசும், மக்களை ஏமாற்றுகின்ற அந்தத் தரப்புக்கள் எங்களுடைய சரியான நிலைப்பாட்டிற்குப் பின்னால் அணி திரளுகின்ற பட்சத்தில் எங்களுடைய கொள்கை வலுப்படும். எங்களுடைய கொள்கை என்று சொல்லுவதை விட இது தமிழ் மக்களின் அபிலாஷை என்று சொல்லுவதே சாலப்பொருந்தும். ஆகவே தமிழ் மக்களினுடைய அபிலாஷைகளை வலியுறுத்தாத, ஏனைய தமிழ்த் தேசியம் பேசுகின்ற தரப்புக்களும் எங்களுடைய நிலைப்பாட்டிற்குப் பின்னால் வரவேண்டும். அவர்கள் ஏன் இவ்வாறு வருகின்றார்கள் இல்லையென்று நீங்கள் அவர்களிடமே கேட்க வேண்டும். 8.20

கேள்வி ?
கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கட்சியினரிடம் ஒரு ஒருமைப்பாடு காணப்பட்டிருந்தது. 6 மாதத்தின் பின்னர் அது காணாமல் போய் விட்டது. அதற்குரிய காரணம் என்ன?

பதில் !
கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீங்கள் ஆழமாகப் பார்த்தால், அந்தத் தீர்மானம் முழுக்க முழுக்க உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்ற ஒரு தீர்மானமாக அமைந்திருக்கிறது. அந்தத் தீர்மானத்திலே இலங்கை அரசிற்கு மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்மானத்திலுள்ள விடயங்களை நாங்கள் ஏற்க முடியாது என்று நிராகரித்த பொழுது, உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்ற தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது. அந்தத் தீர்மானத்தை தமிழ் மக்கள் கூட்டணியினர் நிராகரிக்கவில்லை.

அப்படியாயின் ஏற்பதாகத் தான் அர்த்தம். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்ற தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவும், தமிழ் மக்கள் கூட்டணியினர் மறைமுகமாகவும் ஏற்றிருந்தார்கள். அதை நிராகரித்த ஒரே தரப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மாத்திரம் தான் இருக்கிறது.

ஆகவே அந்த இடத்திலும் சரியான முடிவை இன நலன் சார்ந்து ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது ஒரு உள்ளக விசாரணைக்குள் முடக்கி, குற்றம் இழைத்த இலங்கை அரசையே நீதிபதி யாக்குகின்ற அந்த செயன்முறையை நிராகரிக்கின்ற அந்த இனத்திற்கான தூய்மைப் பணியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்திருந்தது.

இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம்ஆனால் துரதிஸ்டவசமாக ஏனைய தரப்புக்கள் காத்திரமான முடிவுகளை எடுக்காமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணையை ஏற்றும், விக்னேஸ்வரன் ஐயாவினுடைய தமிழ் மக்கள் கூட்டணி நிராகரிக்காமல் நழுவியும், மறைமுகமாக ஏற்றும் தமிழ் மக்களின் நலன்களுக்கு முரணாக மாறாக எந்த உள்ளடக்கம் உள்ள கடிதத்தில் கையொப்பம் வைத்தோமோ அதற்கு மாறாகச் செயற்பட்டு ஏனைய இரண்டு தரப்புக்களும் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார்கள் என்பது வேதனையான உண்மை. இவர்களுடைய காட்டிக்கொடுப்புக்களாலேயே இம்முறை தமிழ் மக்களின் ஒற்றுமை மீண்டும் ஒருமுறை குலைக்கப் பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அன்று தொட்டு இன்று வரை ஒரே நிலைப்பாட்டில் இன நலன் சார்ந்து தெளிவாகப் பயணிக்கின்றது.