ஜனாதிபதி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐ.நாவிற்கும் சொல்வது ஒன்று,  இங்கு நடப்பது வேறொன்று  – இரா.சாணக்கியன்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐ.நாவிற்கும் சொல்வது ஒன்று


ஜனாதிபதி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐ.நாவிற்கும் சொல்வது ஒன்று,  இலங்கையில் நடப்பது வேறொன்று  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஐ.நா உரை மற்றும், ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் சந்திப்பு போன்றவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நாட்டின் ஜனாதிபதி   இந்த நாட்டின் பிரச்சினைகளை நாங்கள் இலங்கைக்குள்ளே பேசி ஜனநாயக வழியிலே தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐ.நாவில், அமெரிக்காவில்கூட கூறியிருக்கின்றார். இலங்கையிலே போராட்டங்களுக்கு எந்தத் தடையுமில்லை என்றும் போராட்டங்களை தான் அனுமதித்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

டயஸ்போராக்களுடனும் தான் பேசத் தயார் என்றும் ஜனநாயகத்தை மதித்து நாங்கள் நடந்து கொள்வோம் என்றும் இலங்கை தான் உலகிலே இருக்கின்ற ஜனநாயக நாடுகளிலே கூடியளவு ஜனநாயகத்துடன் இயங்குவதாகவும் நாங்கள் எதிர்காலத்தில் அப்படியே இருப்போம் என்றும் இராணுவ ஆட்சிக்கெல்லாம் ஒருகாலத்திலும் இலங்கை செல்லாது என்றும் இலங்கை இராணுவமயமாக்கப்படவில்லை என்றும் சில விடயங்களை கூறியிருக்கின்றார்.

ஆனால் அவர் கூறியதற்கு மாறாகவே இங்கு எல்லாம் நடந்து வருகின்றன. உதாரணமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை பல சவால்களுக்கு மத்தியில்தான் நாங்கள் செய்திருந்தோம். ஐ.நாவில் ஒரு விடயத்தையும் இலங்கையில் வேறொரு விடயத்தையும் அவர் சொல்கின்றார்.

ஜனநாயகம் என்பது இலங்கையில் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது. சாதாரணமாக முகநூலில்கூட ஒரு பதிவினையும் போடமுடியாதளவிற்கு இலங்கையில் ஜனநாயகம் சென்றிருக்கின்றது. ஒரு கவிதையினை பதிவிட்டதற்காக இளைஞரொருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.

இலங்கையின் அனைத்து துறைகளிலும் இராணுவமயமாக்கல் நடந்து முடிந்துள்ளது. உதாரணமாக சுகாதாரத்துறையை கூறலாம். அண்மையில்கூட அவசரகால சட்டத்தினூடாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற பொருட்களை வெளிக்கொண்டு வருவதற்காக ஒரு இராணுவ அதிகாரியை நியமித்து ஒரு நாடகத்தினை அரங்கேற்றியிருந்தார்கள்.

ஜனாதிபதி அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐ.நாவிற்கும் சொல்வது ஒரு விடயம்,ஆனால் இலங்கையில் நடப்பது வேறொரு விடயமாகும். யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்களாகிவிட்டன. ஆனால் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்திகரமான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் செய்யவில்லை.

கோட்டாபய ராஜபக்ச அவர்களும் அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்ச அவர்களும் ஆட்சியிலிருக்கின்றபோது எந்த விடயங்களும் செய்யவில்லை. நல்லாட்சிக் காலத்திலே எடுக்கப்பட்ட சில விடயங்களைக்கூட முற்றாக தடை செய்து வைத்துள்ளனர்.

உதாரணமாக ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே ஒத்துழைப்பளித்து இந்த விசாரணைகளைச் செய்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையறிதல் போன்ற விடயங்களில் நல்லாட்சிக் காலத்தில் நடந்த விடயங்களை தற்போது நிறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை வெறுமனே பெயரளவிலே வைத்து மரணசான்றிதழ் கொடுப்பது மட்டும் தான் ஒரு தீர்வாக நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். இப்படியான தருணத்தில் ஜனாதிபதியின் கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மாற்றி மாற்றி கருத்துக்களை தனக்கு சாதகமான முறையிலே கூறிக்கொண்டிருக்கின்றார்” என்றார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply