‘நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்’ நூல் பற்றிய ஓர் ஆய்வு
நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும் கூறுகின்றது. நூலின் தலைப்புப் போன்றே நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட மாவீரர்களின் நினைவுகளை நூறு பக்கங்களில் அடக்கிவிட முடியாது.
இங்கு இவர் பன்னிரு மாவீரர்களின் போராட்ட வாழ்வை, வரலாற்றை கற்பனைகளோ, பசப்பு வார்த்தைகளோ, பொய்களோ இன்றி கலப்படமற்ற உண்மைகளை உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார். இது ஒரு ஆவணம் என்பதால் காலம், இடங்கள் நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகச் சேகரித்துப் பதிவிட்டிருக்கின்றார். பல்வேறு சிரமங்களின் மத்தியில் மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி, நூலுருவில் தந்திருப்பது மிகச் சிறப்பே. வீர காவியங்களை சாயம் பூசாது உண்மைத் தன்மையுடன் எழுதுவது என்பது கடினமானதே.
நிலாதமிழ் பல இடங்களில் பழமொழிகளைக் கையாண்ட விதமும், தூய தமிழ் வார்த்தைகளை பிரயோகித்த விதமும் தமிழின் மீது இவர் கொண்ட பற்றையும், அறிவையும் காட்டி நிற்கிறது. கவித்திறன் வாய்ந்தவர் என்பதை தமிழேந்தியப்பாவின் கவிதை மூலம் உணர முடிகின்றது.
இந்நூலில் போராளிகளின் வாழ்விடங்களையும், தாயகத்தின் பல பகுதிகளையும் வர்ணனையுடன் அழகாகக் குறிப்பிட்டுள்ளமை புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் போன்றவர்களின் ஊர்,தேசம் என்ற ஏக்கத்தை வலியுடன் ஏற்பட வைத்துள்ளது.
நிலா தமிழின் எழுத்தினூடாக ஒவ்வொரு போராளியும் உள்ளத்தால் மென்மை யானவராகவே காணப்படுகின்றனர். பின்பு அடக்குமுறைகளையும் அநீதிகளையும் கண்டு கொதித்தெழுந்தே போராளிகளாகின்றனர். வசதியான குடும்பங்களில் பிறந்தவர், செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள், கல்வியில் சிறந்தவர்களாகவே விளங்கி, விடுதலையுணர்வினால் உந்தப்பட்டுப் போராளியாகி மாவீரர்களாகி உன்னதமடைந்தவர்களே.
இந்த மாவீரர்களின் அறிவுத்திறன் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறேன். எல்லாத் துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சிகள், உயர்வுகள், தோல்விக்காக துவண்டு போகாமல் வெற்றியை நோக்கியே வீறு கொண்ட பயணங்கள், குடும்பத்தைப் பிரிந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் விட்டுக் கொடுத்தல், பகிர்ந்துண்ணல், பாதுகாத்தல், சகபோராளிகளின் குடும்பங்களையும் தன் குடும்பமாக நேசிக்கும் பண்பு, அன்பையும் வீரத்தையும் பண்பையுமு் வளர்த்து அறிவுடன் கூடிய கட்டுக்கோப்பானவர்களாக மிளிர்ந்து நிற்கின்றனர். இந்த வாழ்வை நாம் அனுபவிக்கத் தவறி விட்டோமே என்ற ஏக்கத்தையும் தருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட தியாகக் குடும்பங்கள், தொடர்ந்தும் போராட்டத்திற்கும், அமைப்புக்கும் ஆதரவு கொடுக்கும் உறவுகள் என்ற உயர்ந்த நிலை.
இங்கு நிலா தமிழ் ஒவ்வொரு போராளியின் குண இயல்புகளையுமு், ஆற்றலையுமு் ஆளுமையையும் அழகாக அனுபவித்து எழுதியுள்ளார். அவர்களிடையே காணப்பட்ட நகைச்சுவை உணர்வுகளையுமு் பட்டப் பெயர்களையும் குறிப்பிடத் தவறவில்லை. பேணி, பொக்கான், அரியத்தார் போன்ற செல்லப் பெயர்களும், “துவைக்கிற கல்லில் தவளை“ என்ற நகைச்சுவை வரிகள், “குமார் குமார் லைட்டடி“ என்ற வரிகள் போராட்டத்தின் மத்தியிலும் போராளிகள் திடமானவர்களாக, நகைச்சுவை உணர்வுள்ளவர்களாக, பல்திறன் மிக்கவர்களாக விளங்கினார்கள் என்றுணர முடிகிறது.
இந்நூலின் மூலம் மாவீரர்களினதும் அமைப்பினதும் ஆளுமைகளை ஆக்கங்களை வெற்றிகளை வேதனைகளை உள்வாங்க முடிகின்றது என்றாலும், தாயகத் தாகத்தை தீர்க்க முயன்றவர்களின் முழு அர்ப்பணிப்புக்களும் விதைக்கப்பட்டிருக்கின்றனவா? முளைவிட்டு, மீண்டும் வளர்ந்து, மரமாகி, கிளை பரப்பி, மீண்டும் வளர்ந்து மரமாகி கிளை பரப்பி வேரூன்றுமா? என்ற எண்ணமும் என்னுள்ளே எழுகின்றது.
நிலாதமிழ் நிதித்துறையைச் சார்ந்தவர் என்பதால், நிதித்துறையைச் சேர்ந்த மாவீரர்களை மட்டுமே இங்கு அதிகளவில் குறிப்பிட்டிருக்கின்றார். நிதித் துறையிலேயே இவ்வளவு ஆளுமை, திறமை மிகுந்தவர்கள் இருக்கும் போது மற்றத் துறைகளில் எவ்வளவு இருக்கும்? அவற்றையும் அறிய வேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது.
இந்நூலினை ஒரு ஆவண ஏடாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களில் பன்னிருவரே இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றைய துறைகளிலும் இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். காவியமாகி விட்ட மாவீரர்களின் நினைவுகள் களங்கப்படாது, நிலைத்து நீங்காது நிற்கவும், எதிர்கால சந்ததியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் என்ற அனைவரும் பேணிப் பாதுகாத்து நிற்பதற்காகவும் இதுபோன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். இந்நூலை அடிப்படை ஆவணமாகக் கருதித் தொடர வேண்டும்.
நிலாத்தமிழ் போராளியாக, மாவீரனின் வாழ்க்கைத் துணையாக, தலைவரையும், அமைப்பையும் நினைவில் நிறுத்தி “நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்” என்ற உன்னதமாக ஆவண நூலைத் தந்து தன் வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்துள்ளார்.
- பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு; எமது இருப்பு, அடையாளத்தை இல்லாமல் செய்யும் ஆபத்து! – சி.வி.விக்னேஸ்வரன்
- AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
- போரிலே பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி கஸ்டப்படுகிறார்கள் – கலாநிதி ஆறு திருமுகன்
[…] நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் […]