வடபுலத்தில் இந்திய ரோலர் மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் – சி.கா.செந்திவேல்

மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல்

இலங்கையின் மன்னார் முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பில் இந்திய ரோலர் மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன், சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்திப் பெருமளவு மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றன” என்று குற்றம் சுமத்தியுள்ளார் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எமது கடல் வளம் சூறையாடப்படுவதுடன், நம் மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது மிகப் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதுடன் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியும் உள்ளன.

நமது மீனவர்களின் வலைகளும் படகுகளும் ஏனைய தொழில் உபகரணங்களும் இந்திய ரோலர் படகுகளில் வருவோரால் அழித்து நாசமாக்கப்படுவதுடன், எமது மீனவர்கள் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு வடபுலத்து மீனவர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் இந்திய ரோலர் படகுகளின் அத்துமீறல்களும் அழிவு வேலைகளும் மீன்வளக் கொள்ளையும் அண்மைய மாதங்களில் அதிகரித்துச் செல்கின்றன. அண்மையில் மன்னார், நெடுந்தீவு, பருத்தித்துறை, குருநகர், வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவை அண்மித்த கடற்பரப்புகளில் இந்திய அத்துமீறல்களும் தாக்குதல்களும் வலைகள் அழிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு “வடபுலத்து மீனவர்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட்டு வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்க வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதையே புதிய ஜனநாயக மாக்சிச கட்சி வலியுறுத்துகிறது” என்றும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply