ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை – அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு

174 Views

1cb9ba73ea5223772db714ba347af14c ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை - அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள ட்ரோய்கா பேச்சுவார்த்தைக்கு (முத்தரப்பு பேச்சுவார்த்தை) அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா, இந்தியாவை மட்டும் புறக்கணித்துள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் படிப்படியாகக் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு சமீப காலமாக தலிபான்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக ரஷ்யா ட்ரோய்கா பேச்சு வார்த்தையை முன்னெடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வரும் 11ஆம் திகதி கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த மார்ச் 18 மற்றும் ஏப்ரல் 30 திகதிகளில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையைப் போலவே இதுவும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறும்போது, ஆப்கன் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆகையால், இந்தப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவுக்கும் அழைப்பு வரும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ரஷ்யா, அமெரிக்கா இடையே பல்வேறு விஷயங்களில் முரண் இருந்தாலும் கூட ஆப்கன் சர்ச்சைக்கு உள்நாட்டுப் பேச்சுவார்த்தையின் மூலமே நீடித்த தீர்வு காண முடியும் என இரு நாடுகளுமே நம்புகின்றன.

இதற்கிடையில், ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக் கிழமை கூடி ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா இதுவரை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி – இந்து தமிழ் திசை ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply