அரசியல் கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? | நேர்காணல்கள்

அரசியல் கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகள் விடுதலை: நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும் எங்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து, எங்கள் உறவுகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி த.செல்வராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய செவ்வி,

அரசியல் கைதிகள் விடுதலைகேள்வி:
காணாமல் போனவர்கள் விவகாரம் தான் இலங்கை அரசுக்கு தற்போது சவாலான விடயம். இனப்படுகொலைக்கான சாட்சியும் அது தான். ஆனால் அதனை தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

பதில்:
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளினால் அரசியல்வாதிகளுக்கு எந்தவித இலாபமும் இல்லை. அவர்களுடைய பொக்கட்டுகளை நிரப்புவதற்கு எங்களிடம் பணமும் இல்லை. அதற்காகத்தான் இவர்கள் அரசிடம் சோரம் போயிருக்கின்றார்கள். எங்களுடைய தமிழ் உறவுகள் வழங்கிய ஆசனத்தை வைத்துக் கொண்டு, அரசுடன் சேர்ந்து ஐ.நாவிற்கு காலக்கெடு கொடுக்க விருக்கின்றார்கள். ஐ.நாவிற்கு காலக்கெடு வழங்கினால்தான் அவர்களுடைய பொக்கட்டுகள் சுயமாக நிறையும். எங்களுடைய பிரச்சினைகளில் தலையிட்டால், அவர்களுடைய பொக்கட்டுகள் நிறையாது. காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகள் விடயத்தில் இந்த அரசியற்கட்சிகள் பாராமுகமாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

கேள்வி:
காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் அக்கறை அற்றிருப்பது, தமிழ் மக்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யாதா?

பதில்:
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தமிழ் அரசியற் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் அக்கறையற்றிருப்பது உண்மையாகும். இவர்களுடைய ஒவ்வொரு செயற்பாடும் எங்களுடைய போராட்டத்தை வலுவிழக்கச் செய்கின்றன.

பிரித்தானியாவிலிருக்கின்ற புலம்பெயர் அமைப்புக்கள் இணைந்து எமது சாட்சியத்தை பிரித்தானிய நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாட்டை இன்று செய்துவருகின்றன. சிறு சிறு குழுக்களாக இணைந்த தமிழ் உறவுகளே இந்த செயற்பாட்டை செய்து வருகின்றனர். இலட்சக் கணக்கான தமிழ் உறவுகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கவில்லை.

தமிழ் அரசியற் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் நினைத்திருந்தால் எங்களுடைய போராட்டம் எப்போதோ முடிவிற்கு வந்திருக்கும். வீதிகளிலே நின்று நூற்றிற்கும் மேற்பட்ட தாய்மார்களை நாங்கள் இழந்திருக்கவும் மாட்டோம். தங்களுடைய பிள்ளைகளும், உறவுகளும் காணாமல் போயிருந்தால் தமிழ் அரசியற் கட்சிகளுக்கும், புலம்பெயர் அமைப்புகளுக்கும் அந்த வலி தெரிந்திருக்கும்.

ஆனால் அவர்களின் தேவை சுதந்திரமாக எங்கள் தமிழ் உறவுகளின் வாக்குகளை பெற்றுக்கொண்டு, அரசிற்கு சோரம்போய், அரசிடம் பணம் பெற்று, தங்கள் சட்டைப் பைகளை நிரப்பிக்கொண்டு கைகட்டி வாய்பொத்தி நின்றுகொண்டிருக்கின்றனர். தமிழ் என்ற ஒரு இனமே அழிந்துகொண்டிருக்கின்ற விடயத்தில் அவர்கள் பாராமுகமாக இருக்கின்றனர். வாக்குக் கேட்டு வரும்போது மட்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை முதலில் பார்ப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஆசனங்களில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு வேறு எண்ணங்கள் வந்துவிடுகின்றன. தமிழினமே அழிந்து போகின்ற நிலைமையை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி:
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில்:
ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாக இருக்கின்றது. 2018ஆம் ஆண்டிலிருந்து நாங்களும் நேரடியாக ஐ.நாவிற்குச் சென்று எங்களுடைய சாட்சியங்களை பதிவுசெய்து வந்திருக்கின்றோம். ஒருசில புலம்பெயர் உறவுகள் தாங்களாக முன்வந்து எங்களுடைய பிரச்சினைகளை ஐ.நா சபையில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ஒருசில தமிழ் உறவுகளே எங்களுக்காக செயற்படுகின்றனர். எத்தனையோ அரசியல்வாதிகள் ஐ.நாவிற்கு சென்று வந்திருக்கின்றனர். ஆனால் யாராவது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைப் பற்றி பேசியிருக்கின்றனரா? அங்கு சென்று அரசிற்கு எதிராக காலநீடிப்பை செய்துவிட்டு, இங்கு வந்து அரசிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள். எங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் அரசியற் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் போதும். நாங்கள் வீதிகளில் நின்று போராட வேண்டிய தில்லை.

ஆனால் அவர்கள் எங்களுடைய போராட்டத்தை வலுவிழக்கச் செய்ததை எண்ணியே நாங்கள் கவலை அடைகின்றோம். இவர்கள் எங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதை உணர்ந்து, நாங்கள் தனித்து எங்களுடைய நியாயமான போராட்டத்தை தொடங்கியதால் இன்று அவர்களால் எங்கள் முன் நிற்க முடியவில்லை. அவர்கள் எங்கள் முன் பொய்வேடம் தரித்து நடித்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் எங்களுக்கான தீர்க்கமானதொரு முடிவு கிடைத்திருக்கும்.

எட்டு மாவட்டத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாங்கள் செய்கின்ற இந்தப் போராட்டமானது, எந்த அரசியற்கட்சி சார்ந்ததுமல்ல. தனித்துவமானதாகும். நாங்கள் தொலைத்தது வெறும் கடதாசிகளையல்ல, பெறுமதி மிக்க உயிர்களையாகும். எத்தனை கோடிகளை கொட்டித் தந்தாலும் எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு ஈடாகாது. எங்கள் உறவுகளை உயிருடன் நாங்கள் ஒப்படைத்தோம். அந்த உறவுகளை நாங்கள் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக் கின்றோம். நாங்கள் அவர்களின் சிரிப்பிற்கும் கேலிக்கும் உரியவர்களல்லர். நாங்கள் தேடுவது எங்கள் உறவுகளை மட்டுமே.

அரசியல்வாதிகளும், புலம்பெயர் அமைப்புகளும் இந்தச் செய்தியைக் கேட்டும் திருந்த மாட்டார்கள். இவர்கள் திருந்திய அன்றே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினையும் தீரும்.

கேள்வி:
இன்றைய நிலையில் சர்வதேச நாடுகளுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்?

பதில்:
நாங்கள் மன வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது தேடலுக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இன்னும் வரவில்லை. எனவே எங்கள் வேதனைகளை சர்வதேச நாடுகள் கண்கொண்டு பார்த்து, எங்களின் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம். எங்களால் போராட முடியாத நிலைமையிலும் நாங்கள் போராடிக் கொண்டிருக் கின்றோம் நாங்கள் இறக்கும் தறுவாயிலும் எமது பிள்ளைகளைத் தேடும் போராட்டம் தொடரும். எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பதினொரு வருடங்களாகின்றன. ஆனால் இதுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இனிவரும் சமுதாயத்திற்கு இவ்வாறான நிலைமை வந்துவிடக் கூடாது. சர்வதேச நீதிமன்றத்திற்கு எங்கள் பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் எங்கள் வேதனைகளைக் கண்கொண்டு பாருங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நீதி வேண்டி நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். அனைத்துலக நாடுகளும் எங்களுடன் சேருங்கள். நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும் எங்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து எங்கள் உறவுகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகள் விடுதலைகேள்வி:
காணாமல் போனவர்கள் விவகாரம் தான் இலங்கை அரசுக்கு தற்போது சவாலான விடயம். இனப்படுகொலைக்கான சாட்சியும் அது தான். ஆனால் அதனை தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

பதில்:
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 2009 ஆம் ஆண்டு ஆயுதம் மௌனிக்கப்படும் முன்னரும், பின்னரும் தமது காணாமலாக்கப்பட்ட  உறவுகளை தேடி அலைந்து கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நீதிகேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமது உறவுகளைத் தேடுவதற்கு அப்பால், இவர்கள் காணமலாக் கப்படுவதற்கான பேரினவாத அரசியலைத் தோலுரித்து, எமது அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ் கட்சிகளுக்கு உள்ளது. ஆனால் அதனை அவர்கள் கைவிட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.

கடந்த காலங்களில் இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சுய நலன் கருதியும், லாப மற்றும் குறுகிய அரசியலுக்காகவும் காணாம லாக்கப்பட்ட உறவுகளை பிழையாக வழிநடத்திய வரலாறும் உள்ளதோடு, 2015ஆம் ஆண்டு நல்லாட்சிக்காக இந்த உறவுகளை பயன்படுத்தி கை கழுவியதும் நாமறிவோம்.

நல்லாட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைமை வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசசார்பற்ற நிறுவனங்களை போன்றே நடந்து கொண்டதாக காணாமலாகப்பட்ட உறவுகள் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு இல்லை. தமது அரச சுகபோகங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் உறவுகளை தேடி அலையும் ஏழை எளிய மக்களின் நீதிக்கான கோரிக்கையை அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை அவர்கள் அங்கீகரிக்கவும் இல்லை. பார்வையாளர்களாக இருந்தனர் .அல்லது ஊடக நடிகர்களாக இருந்தனர்.

இதனை நன்குணர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுய எழுச்சியோடு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசியல் கட்சித்  தலைவர்களை போராட்ட உறவுகள் வெளிப் படையாகவே விமர்சிப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது அரச படைகளால் மட்டும் நிகழ்த்தப்படவில்லை. இந்திய அமைதி காக்கும் படையாலும், அவர்களுக்கு துணை ஒட்டுக்குழுக்கள், அரச ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டது. தற்போது அரசியல் கட்சிகளாக அடையாளப்படுத்தியுள்ளவர்களாலும் நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை.

இந்நிலையில் கட்சிகளின் கூட்டுக்களின் உறவு நிலை காரணமாகவும் அரசோடு கொண்டுள்ள மறைமுக உறவு ஏனைய பூகோள அரசியல் சக்திகளோடு கொண்டுள்ள உறவுகள் காரணமாகவும் அரசியல் கட்சிகள் அமைதி நிலையை வகிக்கலாம்.

யுத்த இறுதிக் காலத்தில் பல நூற்றுக்கணக்கானோர் படைத்தரப்பிடம் சரணடைந்ததோடு உறவுகளால் படைகளிடம் கையளிக்கப்பட்டும் உள்ளனர். இதற்கான நேரடி சாட்சிகள் உள்ளனர். அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய காலகட்டம் வரை பெரும்பாலான தமிழ் கட்சிகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருப்போரை கண்டுகொள்ளாதிருப்பது என்பது தமிழ் கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. இவர்கள் தமிழர்களின் அரசியல் நீதிக்கான கோரிக்கைகளினின்றும் அதன் செயற்பாடு களினின்றும் தூரமாகி உள்ளனர் என்பது மட்டுமல்ல, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேச அங்கீகரித்துகான அரசியல் செயல் பாடுகள் என்பவற்றினின்றும் ஒதுங்கி உள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் மனிதகுலம் அங்கீகரிக்காத யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிகழ்ந்துள்ளன என்பதற்கு தெளிவான சாட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாகும். இச் சாட்சிகளோடு தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமானோர் உறவுகளைத் தேடி அலைந்து பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு மரணத்தையும் தழுவியுள்ளனர். மரணத்தை தழுவியுள்ளனர் என்பதைவிட நீதி மறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதே பொருத்தமாகும்.

இந்நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை அரசியலாக்காதிருப்பது  இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அதற்கு அப்பாலோ கொண்டு செல்வதை தடுக்கும் செயலாகவே பார்க்க வேண்டி உள்ளது. இதற்கு காரணம் இவர்கள் பூகோள அரசியல் சக்திகளால் இயக்கப்படுவதேயாகும்.

எனவே இச்சக்திகளால் இயக்கப்படும் அரசியல் கட்சிகளால் தமிழ்  மக்களின் அரசியலுக்கு பாரிய ஆபத்து வரப்போகின்றது என்பதை தமிழ் தேச மக்கள் உன்னிப்பாக அவதானித்து அவர்களை நீக்கம் செய்வது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு எதிரான மக்கள் சக்தியை உருவாக்கினால் மட்டுமே அரசியல் எதிர்காலம் தமிழ் மக்களுக்கு உள்ளது.