மறுதலிக்கப்படும் காணியுரிமை | துரைசாமி நடராஜா

மறுதலிக்கப்படும் காணியுரிமை

துரைசாமி நடராஜா

மறுதலிக்கப்படும் காணியுரிமை: ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்குக் காணியுரிமையும், வீட்டுரிமையும் வலுசேர்க்கின்றன. இவற்றின் சாத்தியப்பாடுகள் சமூகமானது தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் கனவிற்கும் உந்து சக்தியாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இந்த வகையில் மலையக சமூகம் குறித்து நோக்குகையில், காணியுரிமையும், வீட்டுரிமையும் இல்லாத சமூகமாக இவர்களின் காலம் கழிந்து கொண்டிருக்கின்றது என்பது வருந்தத் தக்கதாகும்.

மறுதலிக்கப்படும் காணியுரிமைஇது குறித்து முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருந்து வருவதாக விசனங்கள் பலவும் இருந்து வருகின்றன. இவ்விடயம் தொடர்பான அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஓங்கி ஒலிக்கின்றன. மலையக மக்களின் வரலாறு இவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் தருவதாக இல்லை. இத்தகைய பல விடயங்கள் ஏனைய சமூகங்கள் முந்திச் செல்ல இடமளித்துள்ளதோடு, மலையக சமூகத்தின் பின்நிலைக்கும் வலுசேர்ப்பதாகவுள்ளது.

ஒரு சமூகம் தமது இருப்பினையும், அடையாளத்தையும் பாதுகாத்துக் கொள்வதன் ஊடாக சாதக விளைவுகள் பலவும் ஏற்படும். அரசியல் ஸ்திரப்பாடு, சமூக ஐக்கியம், உரிமைகளை பெற்றுக் கொள்வதில் அதிகரித்த அழுத்தம், மொழி மற்றும் கலாசார பாதுகாப்பு எனப்பலவும் இதில் உள்ளடங்கும். எனினும் ஒரு சமூகத்தின் இருப்பினைச் சிதைக்கின்றபோது அது பாதக விளைவுகள் பலவற்றுக்கும் வாய்ப்பளிக்கும் என்பதும் தெரிந்த விடயமாகும்.

இந்த வகையில் சமூகத்தின் இருப்பினைச் சிதைப்பதில் காணி சார்ந்த விடயங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மலையக மக்கள் இலங்கையில் பிரித்தானியர்களால் குடியேற்றப்பட்டபோது அவர்கள் யாரும் குடியேறாத பகுதிகளிலேயே குடியேற்றப் பட்டுள்ளனர் என்றும் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் சிங்கள மக்களின் நிலப்பகுதி பாதிக்கப்பட்டது என்று கூறுவது ஆதாரபூர்வமற்றது என்றும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அத்தோடு மலையகத்தை தாயகமாகக் கொண்டு இம்மக்கள் வாழத்தொடங்கிய நிலையில் இம்மக்களின் இருப்பை சிதைப்பதிலும், படிப்படியாக அம்மக்களை தோட்டங்களில் இருந்தும் வெளியேற்றுவதிலும் இனவாதிகள் முனைந்து வருகின்றமை தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தத் தவறவில்லை.

உரிமைகளின் உறுதிப்பாடு

ஒவ்வொருவரும் உணவு, அடிப்படை வசதி, மருத்துவ கவனிப்பு, அவசியமான சமூக வேலைகள் உட்பட தமதும், தமது குடும்பத்தினரினதும் உடல் நலத்துக்கும், நல்வாழ்விற்கும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கும் உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும், அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கைக்கு வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பிற்கும் உரித்துடையவராவர் என்று சர்வதேச மனித உரிமை சாசனம் வலியுறுத்துகின்றது. எனினும் மலையக மக்களைப் பொறுத்தவரையில் இவை மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றது. வீடு என்பது தனியே வெயிலுக்கும் மழைக்குமான ஒர் ஒதுங்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் ஆகும்.

அங்கேதான் சமூக நாகரீகத்தின் அத்திவாரம் இடப்படுகின்றது. எனவே வீடு என்பது குறைந்தபட்ச தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டம், குடிநீர் வசதி, கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவும், வாசிக்க இடவசதிகளும், மின்சார வசதியும் தேவை. இந்திய கிராமங்களில் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்பட்டதோடு அங்கே கல்வி உள்ளிட்ட பல துறைகளில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளன. இத்தகைய அடிப்படை வசதிகள் ஆடம்பரமானவையல்ல. சுகாதார ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இவ்வசதிகள் அத்தியாவசியமானவை என்று கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன. எனினும் தோட்ட மக்கள் லயத்து வாழ்க்கையில் மூழ்கியுள்ள நிலையிலும் வீட்டுரிமை என்பது கனவாகியுள்ள நிலையிலும் வீடு தொடர்பான மேலான எதிர்பார்ப்புக்கள் சாத்தியப்படாதுள்ளன என்பதே உண்மையாகும்.

மறுதலிக்கப்படும் காணியுரிமைஒரு சமூகம் காணியுரிமைச் சமூகமாக காணப்படுகின்ற போது, சமூக அந்தஸ்து மேம்படும். சமூக அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு, வீடமைப்பு, விவசாய நடவடிக்கைகள் என்பனவும் இதனால் சாத்தியமாகும். காணி என்பது ஒரு அத்தியாவசிய சொத்து என்றால் மிகையாகாது. ஆனால் மலையக மக்கள் அங்குலமேனும் காணியுரிமைச் சமூகமாக இல்லாத நிலையில் அவர்களின் பல வாய்ப்புகளும் மறுதலிக்கப்படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், பெருந்தோட்டக் காணிகள் பல சந்தர்ப்பங்களில் குறி வைக்கப்பட்டு அபிவிருத்தி என்னும் போர்வையில் சிங்கள மக்களுக்கு ஆட்சியாளர்களால் அவ்வப்போது பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றனவே தவிர, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இதனால் எவ்விதமான நன்மையும் ஏற்படவில்லை. ஆட்சியாளர்கள் பெருந்தோட்ட காணிச் சுவீகரிப்பு நாடகத்தை நீண்ட காலமாகவே அரங்கேற்றி வருகின்றனர்.

1972 ல் கொண்டு வரப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் காணிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அவர்களின் கைகளிலேயே அதிகமான காணிகள் சிக்கியிருந்தன. இந்த வகையில் 1972 முதல் அமுல்படுத்தப்பட்ட காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இலங்கையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் உடைமைகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இதன்படி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் பத்து ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் இருபது ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன. எவ்வாறெனினும் 1972 ல் ஒரு சிறியளவு பெருந்தோட்டக் காணிகளே சுவீகரிக்கப்பட்டன.

எனினும் 1972 இனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தேயிலைக் காணிகளைப் பொறுத்தவரையில் மேலும் 13,862 ஹெக்டேயர் காணிகள் சுவீகரிக்கப்பட்ட நிலையில் 1975 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் இரண்டாவது நடவடிக்கையின்போதே பெரும்பாலான பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.   1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதால் வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டதால் மலையகத்தவர்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.பலர் வடமாகாணத்திற்கு சென்று வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் குடியேறினர். இவர்கள் தங்களது அடையாளங்களை கைவிட்டு உள்ளுர் மக்களுடன் கலந்து வாழும் ஒரு போக்கு காணப்படுவதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் விசனம் தெரிவிக்கின்றமையும் ஆழ்ந்து நோக்கத்தக்கதாகவுள்ளது. 1972 காணிச் சீர்திருத்த சட்ட நடவடிக்கையின் போது தொழிலாளர்கள் லயன்களில் இருந்து அடித்து விரட்டப்பட்ட வரலாறுகளும் காணப்படுகின்றன.

இது குறித்து ஆட்சியாளர்களிடம் கேட்டபோது நாட்டில் ஒரு புரட்சி நடக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிலுரைக்கப் பட்டிருக்கின்றது. இதிலிருந்து இந்நடவடிக்கை ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதனை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மறுதலிக்கப்படும் காணியுரிமை1977 ம் ஆண்டு அரசாங்கம் பெருந்தோட்டக் காணிகளின் நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது. பெருந்தோட்ட நிர்வாகத்தை சீரமைத்ததோடு அதனை மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் கீழ் கொண்டு வந்தது. பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப் படுமிடத்து அத்தோட்டங்களைச் சேர்ந்த இந்திய தொழிலாளர்களுக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் அடிக்கடி விடுக்கப்படுகின்றபோதும் இதன் சாத்தியப்பாடுகள் இல்லாத ஒரு நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக 1980 இல் பயனற்ற தேயிலைக் காணிகள் என்று அடையாளமிடப்பட்டு பத்தாயிரம் ஹெக்டேயர் காணிகள் கண்டி, கம்பளை பகுதியில் மாற்றுப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் சுவீகரிக்கப்பட்டன. உலக வங்கியும் இத்திட்டத்திற்கு அனுசரணையாக இருந்தது. இத்திட்டத்தின் கீழ் ஏலக்காய், கராம்பு போன்ற வாசனைப் பொருட்களை பயிரிடவுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் இறுதியில் காணிகளற்ற கிராமத்துச் சிங்களவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டமை கசப்பான வரலாறாகும். இதுபோன்றே இன்னும் பல உதாரணங்களையும் கூறமுடியும்.

தொழிலாளர் வெளியேற்றம்

அபிவிருத்தி என்ற பின்புலத்தை மையப்படுத்தி பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிக்கும் வழக்கம் அன்று ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மூன்றாம் உலக நாடுகளில் உலக வங்கியின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி திட்டங்கள், வனவள மறுசீரமைப்பு முகாமைத்துவ திட்டங்கள், நகர நிர்மாணங்கள் மற்றும் சேரி ஒழிப்புத் திட்டங்கள் யாவும் சமூகத்தின் அடக்கப்பட்ட (தேசிய, மத,, வர்க்க, நிற ரீதியான அடக்குமுறைகள்) மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் இம்மக்கள் தமக்கிருந்த இறுதி வாழ்விடப் பகுதியில் இருந்து அகற்றப்படுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப் படும் இம்மக்களின் சனச்செறிவு சிதறடிக்கப்பட்டு ஒரு சக்தியாக குறைந்தபட்சம் தம் உயிர் வாழ்வைக் கூட தக்கவைக்க முடியாத நிலைமைக்கு இவர்கள் தள்ளப் படுகின்றனர். அடக்கப்பட்ட மக்களை அப்புறப்படுத்தி அம்மக்கள் தொகுதிகளை அழித்தொழிப்பதானது புதிய அபிவிருத்தி முயற்சிகளுடன் திட்டமிட்ட வகையில் இணைத்து முன்னெடுக்கப்படுகின்றது என்ற ஒரு ஆழமான குற்றச்சாட்டும் காணிச் சுவீகரிப்பு தொடர்பில் முக்கியஸ்தர்களால் ஏற்கனவே முன்வைக்கப் பட்டுள்ளமையும் நோக்கத்தக்கதாகும்.

இதேவேளை நிலச்சீர்திருத்தம், தோட்டக் காணிகளை அரசு பொறுப்பேற்று பல்வேறு குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்தியமை என்பவற்றின் மூலம் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டு அவர்களின் காணியுரிமையும்  வீட்டுரிமையும் பறிக்கப்பட்டதாக எழுத்தாளர் அ.லோறன்ஸ் தனது நூலொன்றில் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் டெல்டா, சங்குவாரி லயன்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டமை, டெவன் காணி சுவீகரிப்பில் சிவணு லெச்சுமணன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இறந்தமை போன்ற சம்பவங்கள் இனக்கலவரம், திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதனை புலப்படுத்துவதாகவும் லோரன்ஸ் குறிப்பிடுகின்றார்.

1948 இல் இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதன் தழும்புகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதே ஆண்டில் புவக்கொகுபிட்டிய தோட்டத்திலுள்ள லயன்களில் வாழ்ந்த 400 குடும்பங்கள் டீ.எஸ்.சேனநாயக்கா வினால் வெளியேற்றப்பட்ட வரலாறும் இனவாதத்தின் ஒரு முன்னெடுப்பேயாகும். இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட நிலையில் அரச வேலைக்கு விண்ணப்பிக்கவோ, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவோ, வாக்களிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இதனோடு அவர்கள் காணிகளை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலையும் மேலெழுந்தது. எனினும் இன்று இம்மக்கள் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றைப் பெற்றுக் கொண்டு  இலங்கையர் என்ற பொதுவரையறைக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் நாட்டில் ஏனைய இனத்தவர்கள் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் இம்மக்களும் அனுபவிக்க உரித்துடையவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே நாட்டின் காணிப்பகிர்வு விடயத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்ளீர்க்கப்படுதல் வேண்டும். மலையக மக்களுக்கான காணியுரிமையையும் வீட்டுரிமையையும் நிலைநாட்ட அவர்கள் தொடர்ந்து காணியில்லா வீடில்லா சமூகமாக வாழாமலிருக்க இம்மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பாக ஒரு தேசிய கொள்கை வகுக்கப்படுதல் வேண்டும். இந்தக் காணி வீடமைப்புக் கொள்கையில் குறைந்தது பத்து தொடக்கம் இருபது பேர்ச் காணி ஒரு மலையக குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்து தேயிலை, இறப்பர் காணிகளை சிற்றுடைமையாக்குவதன் மூலம் காணியுரிமையையும் வீட்டுரிமையையும் மேம்படுத்த முடியும் என்ற கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நாட்டின் நிலமற்ற விவசாயிகளுக்கு காணிவழங்கும் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியதே. எனினும் பெரும்பான்மை மக்களை மட்டுமே சார்ந்ததாகவுள்ளமை விரும்பத்தக்கதல்ல. சிங்களமயமாக்கல் நடவடிக்கையை பிரதானமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்தகைய போக்குகள் விரும்பத்தகாத பின்விளைவுகளையே ஏற்படுத்துவதாக அமையும். இத்தகைய பல பிழையான முன்னெடுக்கப்புக்களால் இலங்கை பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளது. எனினும் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறும் பாங்கிலான செயற்பாடுகள் நகைப்புக்கிடமாகியுள்ளன. இந்நிலையில் மலையக மக்களின் காணியுரிமைக் கனவை நனவாக்கி அவர்களின் வாழ்வில் புது இரத்தம் பாய்ச்சுவதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Tamil News