சர்வதேசத்துடன் எவ்வாறு பேசுவதென்று கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள்! அரசுக்கு சாணக்கியன் எம்.பி. ஆலோசனை


சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

இன்று நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தபோது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில காணொளிகளைப் பார்த்தேன். இதில் ஒன்றில், ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டும் என்றுக் கூட ஒரு சிலர் கூறியிருந்தனர்.

உண்மையில், இன்று ஹிட்லரைப் போன்றுதான் ஜனாதிபதி ஆட்சி நடத்தி வருகிறார். ஹிட்லர் தனது கடைசி காலத்தில் ஜேர்மானியர்கள் எத்தனைப் பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்.

அதேபோன்றுதான் ஜனாதிபதி கோட்டாபயவும் செயல்பட்டு வருகிறார். ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இன்று நாட்டில் நீதிக்கு என்ன நடந்தது எனும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் இன்று பொருளாதார யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி உள்ளிட்ட பொது ஜன பெரமுனவினர் தோல்வியடைந்து வருகிறார்கள்.

எனவே, இனியும் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். கொரோனாவினால் பல உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இந்த நிலையில் உணவின்றியும் மக்களின் உயிர்களை பறிக்க வேண்டாம் நாம் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை முதலில் உயர்த்த நடவடிக்கை எடுக்கவும். பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாத தரப்பிடம் இந்த நாடு இன்று சிக்குண்டுள்ளது. கருறுப்புப் பணத்தைக் கொண்டு வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சரியாயின் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.

வடகொரியா என்பது பொருளாதாரத் தடைக்குட்பட்ட நாடாகும். இந்த நாட்டிலிருந்து எவ்வாறு கருப்புப் பணத்தை கொடுத்து ஆயுதம் வாங்க முடியும்? விவசாய அமைச்சரோ பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது யாருடையபணம்? விவசாயிகளுக்கு உரத்தை வழங்கியிருந்தால் அவர்கள் சீராக அவர்களின் வாழ்க்கையை கொண்டு சென்றிருப்பார்கள்.

அதனை விடுத்து மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்வது சரியா? இது தொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும். -என்றார்.

Tamil News