போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டம்: ஈரான் அறிவிப்பு

போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஈரான் புதிய சமரச திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த சமரச திட்டத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே ஈரான் அளித்த சமரச திட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஈரான் 14 அம்சங்களை தெரிவித்து இருக்கிறது. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஈரானைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும். அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும். ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒரு புதிய நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும். ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும். முடக்கப்பட்ட ஈரான் நாட்டு சொத்துக்களை விடுவிக்க வேண்டும். ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்சங்கள் அதில் இடம் பெற்று உள்ளன.