தமிழர் பகுதிகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டும் அனைத்துலகப் பிரதிதிநிதிகள், காரணம் என்ன? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அனைத்துலகப் பிரதிதிநிதிகள்

வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தமிழர் பகுதிகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டும் அனைத்துலகப் பிரதிதிநிதிகள்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ஹனா சிங்கர் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டு, தமிழர் தரப்பின் கருத்துகளை அறிய முற்பட்டுள்ளார்.

ஆர்வம் காட்டும் அனைத்துலகப் பிரதிநிதிகள்இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதி வழங்கப்பட வேண்டும் என மேற்குலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றபோதும், அவர்கள் அதனை செயல்படுத்துவதில் பின்னிற்பது என்பது எமக்கு தெளிவாகத் தெரிந்த ஒன்று. எனவே அந்த தடைக்கற்களைக் கண்டறிந்து, அகற்ற வேண்டியது எமது முதன்மையான கடமையாகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கடந்த 12 ஆண்டுகளில் 7 தீர்மானங்களை நிறைவேற்றிய போதும், பெறுப்புக்கூறல், அனைத்துலக மனித உரிமை விதிகளை நிலைநாட்டுதல் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, போர் நிறைவடைந்த பின்னர் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு உறுதிமொழிகளை வழங்கியபோதும்,  இதுவரை இலங்கை அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இது தொடர்பில் உறுப்பு நாடுகள் பேச வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தம்மை ஐ.நா காப்பாற்றும் எனத் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஐ.நா அமைப்பு என்பது நாடுகளை காப்பாற்ற உருவாக்கப்பட்டதல்ல, மக்களைக் காப்பாற்றவே உருவாக்கப்பட்டது என்பதை ஐ.நா மறந்துவிட்டது. அதனால் தான் 1,50,000 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளனர். வருங்காலத்திலாவது ஐ.நா தனது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஹனா சிங்கரிடம் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்வம் காட்டும் அனைத்துலகப் பிரதிநிதிகள்தென்னிலங்கை அரசின் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப் படுத்தியுள்ளோம். கடந்த கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக எமது விமர்சனங்களைத் தெரிவித்த போது, புதிய அரசுக்கு அவகாசம் வழங்கவே அவ்வாறு அறிக்கை வெளியிட்டதாகவும், இந்த தடவை காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஹானா தெரிவித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

போர் நிறைவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட ஐ.நாவின் தீர்மானம் என்பது இலங்கை அரசை புகழ்வதாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் கொண்டுரப்பட்ட தீர்மானங்களில் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்துச் சென்றதை நாம் காணமுடிகின்றது. இறுதியாக கொண்டு வரப்பட்ட 46/1 தீர்மானத்தில் அரசியல் விடயங்களும் புகுத்தப்பட்டது என்பது, பூகோள அரசியல் நகர்வுகளின் எதிரொலியாகவே இதனை நாம் பார்க்க முடியும்.

ஆர்வம் காட்டும் அனைத்துலகப் பிரதிநிதிகள்அதாவது தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளும், ஐ.நாவின் நடவடிக்கைகளில் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதே அதன் பொருள். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடருக்கு முன்னர், ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தமிழ் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க விரும்பியதன் பின்புலமும் அதுவாக தான் இருக்க முடியும் என அவதானிகள் கருதுகின்றனர்.

சீனத் தூதுவரின் யாழ். பயணம், யாழ் நூலகத்தை இணையவழி நூலகமாக தரமுயத்துமாறு சீனாவிடம் தமிழ் மக்கள் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள், இந்தியாவினால் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை 5 வருடங்களுக்கு நிர்வகிக்குமாறு இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை, 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை கடந்து இந்தியாவிடம் முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்த வேண்டுகோள், அதற்கும் மேலான உரிமைகள் வேண்டும் என கடந்த வாரம் கிட்டு பூங்காவில் திரண்ட மக்கள் என்பன தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பெறுவதற்கும், உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் பிராந்திய சக்திகளின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பியுள்ளதாகவே கருதப்படுகின்றது.

அதாவது மேற்குலக நாடுகளும், அதன் அமைப்புக்களும் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இது அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. எனவேதான் பிரித்தானியாவின் மத்திய தென்னாசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் அவர்கள் இலங்கை வந்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.

நல்லூர் ஆலயத்திற்கு சீனப் பிரதிநிதிகள் சென்றதுபோன்றே அவர் திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டிருந்தார். அதாவது ஒரு நாட்டை தமது பிடிக்குள் கொண்டுவராது விட்டால், அங்கு வாழும் இனங்களை அவர்களின் இறைமையை பயன்படுத்தி கையாள முடியும் என்பதும் அனைத்துலக இராஜதந்திரங்களில் ஒன்று. அதனை தான் தற்போது இந்த நாடுகள் கையாள முற்படுகின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதாவது தமிழ் மக்களின் உறவுகள் என்பது பிராந்திய வல்லரசுகளுடன் ஒரு நல்ல நிலையை எட்டுமாக இருந்தால், அது மேற்குலகத்தின் போக்கில் மாற்றங்களை உண்டுபண்டும். அதேபோலவே மேற்குலக நாடுகளுடனான நெருக்கம் பிராந்திய வல்லரசுகளின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும். இலங்கை அரசின் உத்தியும் அதுவே அதனை நாமும் பின்பற்ற வேண்டும்.

அனைத்துலக சமூகத்துடன் நல்ல உறவுகளை கட்டியெழுப்புவது என்பது ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. அதுவே எம்மீதான கவனத்தை ஏற்படுத்தும்.

ஆர்வம் காட்டும் அனைத்துலகப் பிரதிநிதிகள்இந்த வருடம் இலங்கை அரசு பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களை எதிர் கொள்ளும் என ஐ.நா தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலை குறித்து தனது பயணிகளை எச்சரித்துள்ளது கனடா. தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் வெளிநாட்டுச் சேமிப்பாக இருந்த 7 பில்லியன் டொலர்களை கடன் தொகையை செலுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளார்.

தற்போது எரிபொருள், மருந்துகளை வாங்க இந்தியாவையும், அரிசிக்கு சீனா மற்றும் பாகிஸ்தானையும் நம்பியிருக்கின்றது இலங்கை அரசு.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சாதகமாக்கி திருமலை எண்ணெய்க்குதங்களை இந்தியாவும், தென்னிலங்கையின் பெரும் பகுதிகளை சீனாவும் கைப்பற்றி வருகின்றன.

எனவே நாமும் இலங்கை அரசின் தற்போதைய நிலையை எமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், தேசியப் பிரச்சனை தொடர்பில் ஒரு பொதுவான கொள்கையும், அனைத்துலக சமூகத்துடனான நல்லுறவுகளும் அவசியமானது. அதனை தான் அரசியல் கட்சிகளிடமும், பொது அமைப்புகளிடமும், புலம்பெயர் அமைப்புகளிடமும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tamil News