இலக்கு மின்னிதழ் 168 ஆசிரியர் தலையங்கம்

601 Views

இலக்கு மின்னிதழ் 168 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 168 ஆசிரியர் தலையங்கம்

யாழ். மாநகர முதல்வரின் கோரிக்கையை உலகமயப்படுத்துக

யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மதிப்புக்குரிய ஹானா சிங்கரிடம் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிப்புக்குரிய வி.மணிவண்ணன் அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஒன்று “எமது இனத்தின் மீது காலாகாலம் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புகளுக்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நீதி வழங்க ஐக்கிய நாடுகள் சபை செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதுடன், ஐக்கிய நாடுகள் சபை, எமது தன்னாட்சி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட எமக்கான அரசியல் தீர்வைப் பெற உதவவேண்டும்.

மற்றது, திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்ற எமது மக்களின் பொருளாதாரக் கட்டமைப்புக்களை எமது மக்கள் மேம்படுத்துவதற்கு எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்த உதவ வேண்டும்.

முதலாவது கோரிக்கை உலகநாடுகள், அமைப்புகள் குறித்த ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கு, இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரையுள்ள தொன்மையும், தொடர்ச்சியுமான இறைமையின் அடிப்படையில், அவர்களுக்கு இயல்பாகவே உள்ள தன்னாட்சி உரிமையை உலகு ஏற்று, அவர்கள் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமையத் தங்களுக்கு வழங்கக் கூடிய அரசியல் எதிர்காலத்தை ஈழத்தமிழர்களே தீர்மானிக்க உலகு அனுமதிக்க வேண்டிய பொறுப்பை உணர்த்துகிறது. எந்த யாழ்ப்பாண அரசின் இறைமையை 1621 இல்  116 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேயர் தம்வசமாக்கினரோ, அந்த யாழ்ப்பாண அரசின் மண்ணிலிருந்து 400 ஆண்டு காலத்தின் பின்னர் மீளவும் தங்களின் தன்னாட்சியின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்னும் ஈழத்தமிழ் மக்களின் விருப்பு யாழ் முதல்வரின் குரல் வழி உலகுக்கான கோரிக்கையாகியுள்ளது.

இரண்டாவது கோரிக்கை சமகாலத்தில் ஈழத்தமிழ் மக்களின் பொருளாதாரக் கட்டமைப்புக்களை இனஅழிப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் இருதரப்பட்ட உத்திகளைப் பயன்படுத்தி அழித்தும், பலவீனப்படுத்தியும் ஈழத்தமிழர்களை தங்கிவாழும் மக்களாக்கி அடிமைப்படுத்தும் அபாயத்தில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டிய தார்மீகக் கடமையைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த இரண்டு கோரிக்கைகளும் ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைக் கோரிக்கைகள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட, இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஒரு மனித குலத்தின் கோரிக்கை.  ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் சிறிலங்காவின் இறைமையை மீறி அதீத மனிதாய தேவைகளைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவமுடியும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை.  இதனை உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்து கோரிக்கைகள் வெற்றி பெற உழைக்க வேண்டும்.

இனஅழிப்பு உள்நாட்டுப் பிரச்சினையல்ல என்ற மாநகர முதல்வரின் முக்கியமான கருத்தை ஈழத்தின் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் மனதிருத்த வேண்டிய நேரமிது. அதன் அடிப்படையில் ஈழத்தமிழர் மேலான இனஅழிப்புக்கான  தண்டனை நீதியும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய  கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான பரிகார நீதியும்  உள்ளடக்கப்படாத எந்தத் தீர்வும் ஈழத்தமிழ் மக்களுக்கான எள்ளளவான அரசியல் தீர்வைக் கூட வழங்காது என்பது வெளிப்படை.

அதீத மனிதாய தேவைகளில் உள்ள மக்களுக்கு அவர்கள் உட்பட்டுள்ள ஆட்சியின் இறைமையை மீறி உதவும் கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் நோக்காக உள்ள உண்மையையும், அதனை ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றத் தாமதித்ததின் விளைவே 176000 க்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களை சிறிலங்கா 2009 இல் இனவழிப்புச் செய்த வரலாறு என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இனியும் ஐக்கிய நாடுகள் சபை  தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உலக நாடுகளும், உலக அமைப்புக்களும் ஈழத்தமிழினத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பு மேலும் மேலும் வளர்வதற்குத் தாங்களும் ஊக்கிகளாக நிற்கும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான செயல்களைச் செய்கின்றார்கள் என்பதை யாழ். மாநர முதல்வரின் உரை தெளிவாக்குகிறது. இந்த உண்மையை உலகின் ஒவ்வாரு மக்களும் அறிந்திடச் செய்தல் இன்றைய காலத்தின் உடனடித் தேவை. உலகின் மனச்சாட்சியுள்ள மக்களை எந்த அளவுக்குப் புலம்யெர் தமிழர்கள் ஈழமக்கள் அனுபவித்து வரும் இனஅழிப்பு வரலாற்றின் தன்மைகளை அறியச் செய்கின்றார்களோ, அந்த அளவுக்குத் தான் மிகத்திட்டமிட்ட முறையில் உலக நாடுகளையும் அமைப்புகளையும் தம்வசப்படுத்தும் சிறிலங்காவின் நுட்பமான ராஜதந்திர நகர்வுகளை தடுத்து நிறுத்த முடியும்.

சிறிலங்காவின் அரச அதிபர், தமிழர்கள் தங்கள் கொள்கைகளை விட்டு விட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் எனத் தனது 2022ஆம் ஆண்டுப் பாராளுமன்றக் கொள்கை விளக்கவுரையில் அறிவித்துள்ளார். இதன்வழி அவரது சிறிலங்காவில் இனப்பிரச்சினையே இல்லை என்ற கொள்கையையும் ஈழத்தமிழர்களைப் பேச்சுக்கு அழைப்பது என்ற எண்ணமே அவரது அரசுக்கு இல்லை என்பதையும் உறுதிப்படுத்தித் தனது ஒரு நாடு ஒரு சட்டம் என்ற  பௌத்த சிங்களவாதக் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான், தனக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்த பெரும்பான்மை மக்களது விருப்பை நிறைவேற்றும் செயற்பாட்டையே செய்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ள நேரத்தில், இந்தக் கோரிக்கைகள் புலம்பெயர் தமிழர்கள் எதன் அடிப்படையில் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளைக் கடந்து, சிறிலங்காவின் ஓரு நாடு ஒரு சட்டம் எனும் புதிய அரசியலமைப்பு உருவாகாதவாறு  செயற்படலாம் என்ற கேள்விக்கு யாழ்நகர முதல்வரின் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியுடனான உரையாடலும் கோரிக்கைகளும் மிகச்சிறந்த பதிலையும் வழியையும் காட்டியுள்ளன என்பது இலக்கின் எண்ணம்.

Leave a Reply