பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர் செய்யக்கூடியது இதுதான் | செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை

676 Views

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன

இலங்கை என்றும் இ செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன: இலங்கை என்றும் இல்லாதளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது சந்திக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? இதிலிருந்து மீளமுடியுமா? தமிழ் மக்களை இது எந்தளவுக்குப் பாதிக்கும்? இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய முடியும்? போன்ற கேள்விகளுடன் இந்த வாரம் சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்.

கேள்வி:
இலங்கையின் பொருளாதாரம் என்றும் இல்லாதளவுக்கு பாரிய பின்னடைவு ஒன்றை இப்போது சந்தித்திருக்கின்றது. பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு. விலைவாசி உயர்வு என மக்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றார்கள். இந்த நெருக்கடிக்கு காரணம் என்ன?

பதில்:
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தவறுகள் தான் காரணம். பொருளாதாரம் தொடர்ச்சியான முறையில் தவறாகக் கையாளப்பட்டு வந்திருக்கின்றது. அரசியல் அதிகாரங்களுக்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மாறி மாறி கடன்களைப் பெற்றதும், உடனடிப் பொருளாதார விளைவுகளைத் தராத முதலீடுகளைச் செய்ததும், கட்டுப்பாடற்ற முறையில் ஆடம்பரச் செலவுகளை மேற்கொண்டதும் காரணமாக இலங்கை மிகப்பெரும் கடன் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டது. கடனை மீளச் செலுத்துவதற்கும், கடனுக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கும் வருடாந்தம் பெருமளவான அந்நியச் செலாவணி இலங்கைக்குத் தேவைப்பட்டது. சமகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் நான்கு ஐந்து முதன்மையான துறைகளில் கட்டமைக்கப்பட்டிருந்தது. 1. பெருந்தோட்டத்துறை (தேயிலை ஏற்றுமதி), 2. சுற்றுலாத்துறை 3. ஆடைக் கைத்தொழில் 4. மத்திய கிழக்கில் வாழ்கின்ற தொழிலாளர்கள்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கடன்களையும், கடன் தொகையையும் சமாளித்துக் கொண்டிருந்தவர்கள். திடீரென கோவிட் பெருந்தொற்று வந்த போது, சுற்றுலாத்துறை முற்றாக முடங்கியது. இதனால் அந்நிய செலாவணி வருமானம் இழக்கப்பட்டது. அதே நேரம் ஆடைக் கைத்தொழிலும் ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு முடங்கியது. அந்நிய செலாவணி வருமானங்கள் வராமையால், கடனை அடைக்க முடியாத அளவு அந்நிய செலாவணி பற்றாக்குறை வந்துவிட்டது.

முதன்மையானது கடன் அல்ல. ஒரு நாட்டில் மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யத் தேவையான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பது பாதுகாப்பான நிலைமை என்று சொல்வார்கள். இப்படியான தடைகள் வந்ததும் அந்நிய செலாவணிக் கையிருப்பு ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இது முதன்மைப் பிரச்சினையாக மாறியது. அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், கைத்தொழிலுக்கான மூலப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவைாயன அந்நிய செலாவணி கையிருப்பு முற்றுமுழுதாக இழக்கப்பட்டது.

இதனால் ஆடம்பர வாகன இறக்குமதிகளை தடை செய்வதாக சொன்னார்கள். இவ்வாறு ஒவ்வொன்றாக இறுக்கி கொண்டு வந்து இறுதியில் உணவுப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை வந்தது. உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றைக்கூட பெறமுடியாத அளவு அந்நிய செலாவணி வங்குரோத்து நிலைமைக்கு வந்தது.

இதேநேரம் கடன் கட்ட வேண்டிய சந்தர்ப்பமும் வந்தது. ஜனவரி 18ஆம் திகதி ஆசிய கடன் நிதி நிறுவனத்திற்கு கணிசமான கடன் கட்ட வேண்டும். அந்த திகதியை தவறவிட்டால், கடன் கட்ட முடியாத தேசங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்துவார்கள். இவ்வாறான ஒரு நெருக்கடி வந்தது. இதற்குக் காரணம் என்னவென்றால், ஆட்சியாளர்களின் தேசிய பாதுகாப்புக் கொள்கை என்ற சிந்தனை ஒட்டுமொத்த பொருளாதாரமும் கவிழ்ந்து போவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இது தான் இப்போதைய இலங்கையின் பொருளாதாரம்.

தற்போது இந்தியாவும், சீனாவும் வந்து கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள். அந்தக் கடனையும் உடனடியாக காசாகக் கொடுக்கவில்லை. சீனா கடன் கொடுக்கின்றது எப்படியென்றால், அந்தக் கடன்களை இவர்கள் செலவு செய்ய முடியாது. அல்லது வேறு கடன்களை அடைப்பதற்குப் பயன்படுத்த முடியாது. கடனை சீன நாணயத்தில் சர்வதேச கணக்கில் வைத்திருக்கலாம். இதனால் கடன் கட்ட முடியாத தேசம் என்று இலங்கையைக் கருத முடியாதபடி இருக்கும். நீங்கள் எந்த நாட்டிலாவது கடன் வாங்குவதாக இருந்தால், இதைக் கொடுத்து கடனை வாங்கலாம் என்று சீனா கூறுகிறது.

இதேபோல் இந்தியாவும் கடனைத் தருவதாகக் கூறிவிட்டு ஆசிய கடன் நிதி நிறுவனத்திற்குக் கட்ட வேண்டிய கடனில் 500 மில்லியன் ரூபாவை அனுப்பி 18ஆம் திகதி இலங்கையை பிணை எடுத்துவிட்டது. மிகுதி 900 மில்லியனையும் உடனே கொடுக்கவில்லை. சீனாவும் இந்தியாவும் கடன் தருவதாகக் கூறி இலங்கையை கொக்கி போட்டு கொழுவி வைத்துள்ளார்கள்.

இலங்கை சீனாவுடன் 100 வீதம் இருந்தால், சீனா இலங்கையைப் பிணை எடுத்திருக்கும். அல்லது இந்தியாவுடன் இருந்திருந்தால், இந்தியா இலங்கையைப் பிணை எடுத்திருக்கும். இலங்கை இரண்டிற்கும் நடுவில் இருப்பதால், ஆப்பிழுத்த குரங்கு மாதிரி மாட்டிக் கொண்டுள்ளனர். இதனால் இலங்கை தர்மசங்கடமான நிலைமைக்குள் உள்ளது.

இலங்கை சீனாவிடம் போய் ஏற்கனவே பெற்ற கடன்களை நீண்டகால கடன்களாக கட்டமைப்பு செய்வதாக கேட்டுள்ளது. சீனா அதற்கு இசைந்து கொடுப்பதாக இல்லை. முரண்பாடில்லாத நாடுகள் சார்ந்த சிந்தனையாளர்கள் சொல்வது என்னவென்றால், நீங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்கும்படி சொல்கிறார்கள். அவர்களிடம் போய் கடனைக் கேட்டால் அவர்கள் நிபந்தனை விதிப்பார்கள். பொது நிதிச் செலவுகளைக் குறையுங்கள். பொதுவாக அரசாங்க செலவுகளைக் குறைக்க வேண்டும். அரசாங்க ஊழியர்களின் செலவுகளைக் குறையுங்கள், மக்களுக்கு வழங்கும் சலுகைகளைக் குறையுங்கள் என்று கூறும்.

இதனால் அரசாங்கம் அரசியல் ரீதியாக தங்கள் பிடியை இழந்து விடுவதாக ஒரு பயம் வந்துள்ளது. ஏனெனில் இலங்கையின் ஜனநாயக அரசியல் வாக்கு வங்கிகள் கட்டமைக்கப்பட்டிருப்பது நலனோன்பு சேவைகளாலும், பாரியளவு மனித வளத்தை அரசாங்க உத்தியோகத்தியோகத்தர்களால் கட்டமைக்கப்பட்ட வாக்கு வங்கி. ஆகவே இதை இழப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை. அது தான் இங்குள்ள பிரச்சினையாக இருக்கின்றது. இது இலங்கையின் தேசியப் பிரச்சினையாக இருக்கின்றது.

கேள்வி:
இந்த பொருளாதார நெருக்கடி இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:
அண்மையில் நிதி அமைச்சர் கூறியதன்படி குறைந்தது 5 வருடங்கள் தொடரும் என்று கூறியுள்ளார். இது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 கேள்வி –
இந்த பொருளாதார நெருக்கடி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை எந்தளவுக்குப் பாதிக்கின்றது?

பதில்:
இன்றை வரையும் இலங்கையில் பட்டினி என்றதொரு விடயம் இல்லை. ஏற்கனவே விளைவித்த உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் சாப்பிடக்கூடியதாக இருந்தது. அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஒரு சவால் வரப்போகின்றது. விளைவு செய்த பொருட்களை அறுவடை செய்வது. அல்லது விளைவு செய்வதில் தோல்வி. இரசாயன உரங்களை பயன்படுத்தக்கூடாது என்று திடீரெனத் தடை விதிக்கப்பட்டதனால்,  விவசாய உற்பத்தி கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வடபகுதியில் நெல் அறுவடையில் 40வீதமான விளைச்சல் தான் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்கள். இது மிகவும் ஆபத்தான விடயம். வடகிழக்கில் எமது உணவுத் தேவையில் பாதிப்பு வரப்போகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயரப் போகின்றது.

இலங்கை அரசாங்கம் உள்ளுர் நெருக்கடியை சமாளிப்பதற்காக காசை அச்சடிக்கின்றது. 1.6 பில்லியன் காசு அண்மையில் அடித்துள்ளது. காசை அடித்து மக்களிடம் சம்பளமாக கொடுக்கும் போது, இதில் கொஞ்சப் பொருளை வாங்குவதற்காக சந்தைக்குப் போகும். இதனால் விலை உயரும். ஒரு பக்கத்தால் விலை உயர்ந்து கொண்டு போகிறது. மற்றப் பக்கத்தால் உணவுப் பொருளின் உற்பத்தி குறைந்து கொண்டு போகின்றது. இதனால் வடபகுதி மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படப் போகின்றோம்.

ஒரு பகுதியில் சமூகவிரோதச் செயல்கள், போதைப் பொருள் போன்ற காரணிகள் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. சமூக அமைதியை கட்டியமைக்க முடியாமல் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலைமையில் இந்தப் பொருளாதார நெருக்கடி வரும் என்று சொன்னால், எங்கள் சமூகத்தை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும். பட்டினியால் சாகப் போகிறோம் என்பதைவிட சமூகவிரோத செயல்கள் அதிகரிக்கலாம். பசி என்பதால் களவெடுக்கலாம், கொள்ளை அடிக்கலாம். இது போன்ற செயல்கள் அதிகரிக்கும். இதுவே இன்று வடகிழக்கில் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினையாக இருக்கப் போகின்றது.

1 COMMENT

  1. […] பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன: இலங்கை என்றும் இல்லாதளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது சந்திக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம்  […]

Leave a Reply