கல்வி சார் மனித உரிமைகள் | திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்

கல்வி சார் மனித உரிமைகள்

திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்

கல்வி சார் மனித உரிமைகள்: மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையானதும், விட்டுக் கொடுக்க இயலாததும், மறுக்க வியலாததுமான உரிமைகளை ‘மனித உரிமைகள்’ எனக் குறிப்பிட முடியும்.

மனிதனுடன் இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகளாக இவை இருப்பதனால், மனித உரிமைகளை யாராலும் உருவாக்கவோ அல்லது எவராலும் வழங்கப்படவோ முடியாதது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இனம், மொழி, சாதி, மதம், வயது, பால் முதலானவற்றிற்கு அப்பால் ஒவ்வொரு மனிதனுக்கும் உரியனவான அடிப்படை உரிமைகளாக இவை உள்ளன. மனிதர் சுதந்திரமாகவும், சுமுகமாகவும் வாழ்வதற்கு இவை பேணப்பட வேண்டியது அவசியமானது.

மனித உரிமையை மதிக்காமையாலும் அவற்றைச் செயற்படுத்தாமையாலும் பல்வேறு மீறல்களாலும் மனித குலம் அமைதியையும், சுய கௌரவத்தினையும் இழந்து விடுவதனை வரலாறு எடுத்தியம்புகின்றது. மனித உரிமைகளுள் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.

கல்வியின் முக்கியத்துவம்:

‘கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்க மாடல்ல மற்றையவை’ என்பதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். ஒருவனுக்கு அழிவில்லாத செல்வமாக இருப்பது கல்வி என்பதையும் அது ஒழிந்த பொன் முதலானவை செல்வம் அல்ல என்பதையும் இக் குறட்பா குறிப்பிடுகின்றது.

இதனாலேயே

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’

எனப் பாரதியும் குறிப்பிட்டார்.

‘கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்’ என்று பிளேட்டோ கூறினார். இத்தகைய சிறப்பு மிக்க கல்வியினைப் பெற்றுக் கொள்கின்ற அல்லது பயிலுகின்ற உரிமை யாவருக்கும் உள்ளது. மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனத்தின் உறுப்புரை 26 கல்வி உரிமை பற்றிக் குறிப்பிடுகின்றது.

  1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாயிருத்தல் வேண்டும்.
  2. தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்
  3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண்டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே    தெரிந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு.

மேற்குறித்த விடயங்களைக் கவனத்திற் கொள்ளும்போது கல்வி உரிமை தொடர்பான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடியும்.

  1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாயிருத்தல் வேண்டும்:

சகலரும் கல்வி கற்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர் என்பது அனைத்து மக்களும் கல்வியினைக் கற்பதற்குத் தூண்டுகோலாய் உள்ளது. இன, மத, மொழி மற்றும் பிரதேச, பால், வயது பாகுபாடுகளைக் கடந்து எல்லோரும் கற்பதற்கான வாய்ப்பினை இதன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். எக் காரணத்திற்காகவேனும் கல்வி உரிமை மறுக்கப்படுதல் மனித உரிமை மீறலாகும். ஆயினும் பல நாடுகளில் ‘யாவருக்கும் கல்வி’ என்பது சாத்தியமாகாத விடயமாகவே இருந்து வருகின்றது.

கல்வி சார் மனித உரிமைகள்அரசியல், பொருளாதார, சமூக காரணி களால் கல்வி உரிமை மறுக்கப்படும் நிலையை இன்றும் சிலவிடங்களிற் காண முடிகின்றது. குறிப்பாக வறுமையும், குடும்பச் சூழலும் இந் நிலைமையை மேலும் சீர்குலைத் துள்ளன. இலவசக் கல்வியை வழங்குவதிலும் அதனை உறுதிப்படுத்து வதிலும் அரசுகளுக்கு மிகப் பெரும் பொறுப்பு உண்டு. முக்கியமாக தொடக்க அடிப்படைக் கட்டங்களில் அல்லது ஆரம்பக் கட்டங்களில் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் பிரகடனம் வலியுறுத்துகின்றது. ஒவ்வொருவரும் கல்வியைப் பெறுவதற்கு இலவசக் கல்வி நடைமுறை உறுதுணையாக அமைந்துள்ளது. பெருந்தொகையான குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு வழி சமைத்துக் கொடுத்ததில் இலவசக் கல்விக்கு மிக முக்கிய இடம் உண்டு. பொருளாதார வளத்தில் பின் தங்கியிருப்பினும் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிப்பதாக இலவசக் கல்வி அமைந்திருப்பது கண்கூடு.

தொடக்கக் கல்வி என்பது முதல் ஐந்தாண்டு வகுப்புக்களைக் கொண்டதாக அமையும். ஒரு குழந்தை இக் காலத்தில் பெற்றுக் கொள்ளும் அறிவு மிக முக்கியமானது. குடும்பம், வாழும் சூழல், பிரதேசம், நாடு முதலான அடிப்படை விடயங்களையும் அறிவுக்கு ஆதாரமான எண், எழுத்து முதலானவற்றையும் இப் பருவத்திலேயே குழந்தை கற்றுக் கொள்கின்றது.

அத்துடன் மனித உரிமைகளை மதிக்கத் தக்கதான அடிப்படைப் பண்புகளையும் மற்றும் ஒழுக்க விழுமியங்களையும் கூட இப் பருவத்தில் பெற்றுக் கொள்ளத் தக்கதாக உள்ளது. மனித வாழ்வில் இன்றியமையாததாக அமையும் தொடக்கக்கல்வியை இலவசமாக வழங்குவதன் மூலம் கல்வியின் உயரிய நோக்கமாக அமையும்; சிறந்த பிரஜைகளை உருவாக்கும் இலட்சியத்தினையும் நிறைவேற்ற முடியும். தொடக்கக் கல்வி இலவசமானதாக அமையினும் எல்லாச் சூழல்களிலும் எதிர்பார்த்த பயனைப் பெற முடியாதுள்ளது.

கல்வி சார் மனித உரிமைகள்மேலும் தனியார் கல்வி நிறுவனங்களினதும் சர்வதேசப் பாடசாலைகளினதும் தோற்றமும் அவற்றின் மிகையான வளர்ச்சியும்  இலவசக் கல்வியை பாதிப்பதனை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது. பொருளாதார வசதி படைத்தோரால் மட்டும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ள இத்தகைய கல்வி தொடக்கக் கல்வியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.

மேலும் இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை உணராது கல்வியில் அசிரத்தையுடன் இருக்கும் பிள்ளைகளையும், பிள்ளைகளின் கல்வியில் அக்கறையின்றியிருக்கும் பெற்றோரையும் சில இடங்களில் காணலாம்.

  1. ‘கட்டாயக் கல்வி’யின் முக்கியத்துவம்.

தொடக்கக் கல்வி கட்டாயமானதாக அமைய வேண்டும் என உறுப்புரை 26 இன் உப பிரிவு குறிப்பிடுகின்றது. பாடசாலைக்குச் செல்லும் வயதில் ‘சிறுவர் தொழிலாளர்’ உருவாவதை இது தடுக்கின்றது. அத்துடன் ஒரு குழந்தையின் கல்வி உரிமையையும் பாதுகாக்கின்றது. ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. பாடசாலையின் அமைவிடம், போக்குவரத்து வசதி முதலான காரணிகள் சில பிரதேசங்களில் பாரிய சவால்களாக அமைந்துள்ளமையையம் இவ்விடத்தில் கவனத்திற் கொள்ள வேண்டும். கல்வியினை யாவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே இவ் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

3. உறுப்புரை 26இன் உப பிரிவுகளுள் ஒன்று ‘தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண்டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்குண்டு’  எனக் குறிப்பிடுகின்றது.

ஆரம்ப நிலையில் குழந்தைகள் தமக்கான கல்வியைத் தெரிவு செய்ய முடியாதிருப்பதன் காரணமாக அந்த உரிமை பெற்றோருக்கு உரியதாகின்றது. பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

இன்று பொருளாதார வசதிக்குத்தக்க பெற்றோர் தம் பிள்ளைகளைத் தாம் விரும்பும் பாடசாலைகளில், அப் பாடசாலை கட்டணம் அறவிடும் பாடசாலையாயினும் அல்லவாயினும் சேர்ப்பிக்கின்றனர்.

சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதில் ஆரம்ப நிலையில் பெற்றோருக்குரிய கடமையையும் இப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

முன்னர் குறிப்பிட்டுள்ளமையைப் போலவே பொருளாதார நிலை, போக்குவரத்து வசதி, குடும்பச் சூழல், பாடசாலையின் அமைவிடம், பெற்றோரின் விருப்பம் முதலான பல காரணிகள் இவ் விடயத்திலும் செல்வாக்குச் செலுத்துவதனைத் தவிர்க்க முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் மனித உரிமைகளுள் முக்கிய உரிமைகளுள் ஒன்றாக அமையும் கல்வி உரிமையைப் பாதுகாப்பதிலும் உயர் இலக்கினை நோக்கி வழிநடத்துவதிலும் ஆரம்பக் கல்வி நிலையில் பெற்றோரின் பங்கு கணிசமாயுள்ளமையைக் குறிப்பட வேண்டும்.

அத்துடன் நாட்டின் கல்விக் கொள்கைகளும் பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகளும் மாணவர் நலனில் அக்கறை கொண்டவையாக அமைய வேண்டியதும் அவசிய மானதாகும்.

மனித உரிமையும் – உயர் கல்வியும்

இச் சந்தர்ப்பத்தில் வளர்ந்தோர் மட்டிலான கல்வி உரிமை பற்றிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகின்றது. குழந்தைகள் அல்லது சிறுவர்கள் என்பதால் தமது பிள்ளைகளின் கல்வித் தெரிவு பற்றிய விடயத்தில் பெற்றோர் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள் என்பதை நியாயப்படுத்த முடியும். ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக்கு இது பொருந்தும். எனினும் ஒரு பிள்ளையின் உயர்கல்வித் தெரிவில் தொடர்ந்தும் பெற்றோரின் ஆதிக்கம் உள்ளமையைப் பரவலாகக் காண முடியும்.

விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை முதலிய துறைகளில் தாம் விரும்பும் துறையில் தமது பிள்ளைகள் பயில வேண்டும் என்று பெற்றோர் நிர்ப்பந்திப் பதனையும், பிள்ளைகளின் அபிலாஷைகளைக் கவனத்திற் கொள்ளாது செயற்படு வதனையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களிற் காண முடிகின்றது. கல்வி உரிமை குறித்துச் சிந்திக்கின்றபோது மேற் குறித்த விடயம் தொடர்பாகவும்  கவனத்தைத் திருப்ப வேண்டியது அவசியமானதாகும்.

மேலை நாடுகளை விட இலங்கை போன்ற நாடுகளில் குடும்ப அல்லது சமூகப் போட்டி காரணமாக தொடர்ந்தும் தமது பிள்ளைகளுக்கான கல்விநெறியைத் தீர்மானிப்பதில் பெற்றோர் முனைப்புள்ளவர்களாக விளங்குகின்றனர். ஒரு பிள்ளை சுதந்திரமாகத் தனது இயலுமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் தனக்கான உயர் கல்வியைத் தெரிவு செய்யும் உரிமையை இது மறுப்பதாக அமைகின்றது.

மறுபுறத்தில் தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சுபீட்சமானதாகவும், பொருளாதார வளம் செழித்தும் காணப்படுவதற்கு தமது தலையீடு தொடர்ந்து இருத்தல் அவசியம் எனவும் பெற்றோர் வாதிடக் கூடும். பெரும்பாலான பெற்றோர் இவ்வாறே கருதுகின்றனர். இதனால் ஆரம்பக் கல்வியில் தொடங்கி பாடசாலைக் கல்வி முற்றுப் பெறும் வரை சில அரிய சந்தர்ப்பங்களில் அதற்கு மேலாகவும் கூட இந்நிலை தொடர்கின்றது. பெற்றோரின் செல்வம், செல்வாக்கு, கல்வியறிவு முதலான காரணிகள் இதற்குப் பின்புலமாக அமைவதனையும் மறுப்பதற்கில்லை.

க.பொ.த சாதாரண தரம் வரை பாடசாலையில் ஒரு சீரான கல்வி நெறியில் பயிற்றுவிக்கப்படும் பிள்ளைகள், க.பொ.த உயர்தரத்தில் தாம் பயிலவிருக்கும் துறையைத் தெரிவு செய்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு

பெற்றோர் விருப்பம்

சகபாடிகளின் துறைத் தெரிவு

பயிலவுள்ள பாடசாலைகளின் ஆசிரியர் மற்றும் பாட வள நிலைப்பாடு

பொருளாதார நிலை

எதிர்கால தொழில் வாய்ப்புச் சூழல்

முதலான பல காரணிகள் இதில் செல்வாக்கு செலுத்துகின்றன.

இதனால்  தமக்கான துறைத் தெரிவில் சூழ்நிலைக் கைதிகளைப் போலவே பிள்ளைகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. சாதாரணமாக குறிப்பிட்டளவு வீதத்தினரின் உயர் கல்வியைப் பொறுத்த வரை பெற்றோரின் தலையீடு அல்லது விருப்பத் தெரிவு வெற்றியளிப்பதாக இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் தவறான வழி காட்டலாகவும் அமைந்து விடுவதனையும் கண்கூடாகக் காண முடிகின்றது. பிள்ளைகளின் கற்றல் தெரிவினைப் பெற்றோரும் சில வேளைகளில் உற்றாரும் தீர்மானிப்பதனால் பிள்ளைகள் தம் கல்வி நெறியில் விருப்பமற்று ஈடுபடுவதனையும் அதன் மூலம் எதிர்பார்க்கும் பெறுபேறுகளைப் பெற முடியாமற் போவதனையும் காண முடிகின்றது.

விருப்புடன் துறைத் தெரிவினை மேற்கொள்ளும்போது நாட்டமும் ஆர்வமும் முயற்சியும் இயல்பாகவே ஏற்படுவதனால் உரிய இலக்கினை அடைவது இலகு வாகின்றது.

இதற்கு விதி விலக்குகளும் உள்ளன.

இந்நிலைமைகள் சிலவிடங்களில் வேறுவகையான தன்மையில் நடைபெறுவதும் உண்டு. அதாவது  கல்வித் தரத்தில் உயர்கல்வித் துறையில் விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளைத் தெரிவு செய்ய முடியுமான நிலைமை இருந்தும் வீட்டின் பொருளாதார நிலை மற்றும் தகுந்த பாடசாலைகள் அச் சூழலில் இல்லாமை போன்ற காரணங்களினால் தமக்கான உரிமைகளை அப் பிள்ளைகள் இழந்துவிடும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

அதேவேளை க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தும் உயர்கல்வியைத் தொடர முடியாது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் இத்தகையோருள் பெரும்பாலானோர் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே தொழிலுக்குச் செல்வதனையும் காணலாம்.

எனவே பல்வேறு மட்டங்களில் உயர்கல்விக் கற்கை தொடர்பான உரிமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடியும்.

பெற்றோர், தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆசைப்படுவது இயல்பானதே. அதில் தவறேதும் இருக்கவும் முடியாது.

ஆனால் அதனைத் தீர்மானிப்பவர்களாவும், அது குறித்த தம் பிள்ளைகளின் விருப்பினைப் பற்றி அக்கறைப்படாதவர்களாகவும் பெற்றோர் மாறும்போது முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாவதைத் தவிர்க்க முடியாது.

பெற்றோரின் திணிப்பினை அல்லது விருப்பினை மௌனமாக ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகளும் உள்ளனர்.

இத்தகைய தெரிவுகளுக்கான காலம் உருவாகும் சூழல் பெற்றோர் – பிள்ளைகள் என்போருக்கிடையிலான மனம் திறந்த உரையாடல் ஏற்பட வேண்டிய சூழலாகவும் அமையும்.

இந்த உரையாடல் சுதந்திரமானதாகவும் வெளிப்படையானதாகவும் அமையும்போது ஆரோக்கியமான முடிவுகளை இரு தரப்பாரும் எட்ட முடியும்.

துரதிஷ்டவசமாக இத்தகைய நிலைமைகள் உருவாக்கப்படுவதில்லை.

சுருக்கமாகவும் எளிமையாகவும் கூறுவதானால் இத்தகைய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்கப் படுவதில்லை என்றே கூற வேண்டும்.

எவ்வாறிருப்பினும் உயர் கல்வித்துறை தொடர்பான தெரிவில் தெளிவற்றதும், முரண்பாடுகளை அதிகம் கொண்டனவுமான நிலைமைகளையே பெரும்பாலும் காண முடிகின்றது.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அதீத அச்சம் காரணமாகவே பெற்றோரும் தவிர்க்கவியலாத வகையில் இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.

தம் பிள்ளைகள் பொறியியலாளராக, வைத்தியராக, நிர்வாக அதிகாரியாக, உயர் பதவி வகிப்பவராக, மதிப்பு மிக்க உத்தியோகத்தராகத் தொழில் ரீதியாக வர வேண்டும் என எதிர்பார்க்கும் அல்லது செயற்படும் பெற்றோர்களிற் பலர், அப் பிள்ளை சிறந்த மனிதத் தன்மையும் நற் பண்புகளும் மிக்க பிரஜையாக உருவாகின்றதா என்பதைக் கவனிக்க மறந்து போகின்றமை துர்ப்பாக்கி யமானதாகும்.

எத்தகைய உயர்நிலை எட்டப்பட்ட போதும் மனித நேயப் பண்புகள் இல்லாது போனால் அவன் பூஜ்யமே. இதனையே வள்ளுவரும்

‘ அரம் போலும் கூர்மையரேனும்

மரம் போல்வர் மக்கட் பண்பிலாதவர்’

எனக் குறிப்பிட்டார்.

எல்லா உரிமைகளையும் ஒருவர் பெற்றிருந்தாலும் இந்த உரிமைகளால் உருவாக்கப் பட்டிருக்கும் கடமைகளை அவர்  மறந்து விடுவாரானால் அல்லது நிறைவேற்றாமல் விடுவாரானால் அவர் சமூகத்திற்குப் பயனற்றவராகவே கருதப்படுவார்.

‘உரிமைகள் வழங்கப்பட வேண்டியவை: கடமைகள் ஆற்றப்பட வேண்டியவை.’

திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்

தலைவர்

மொழித் துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்