சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறு என்ன? | ஆய்வாளர் ஜோதிலிங்கம்

 

தலைவர்கள் இழைத்த தவறு என்னஆய்வாளர் ஜோதிலிங்கம்

தலைவர்கள் இழைத்த தவறு என்ன?: இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வழமைபோல கரிநாளாகவே அமையும். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் தமிழர்கள் இல்லை. இந்த நிலை ஏன் ஏற்பட்டது? பிரித்தானியர் வெளியேறிய பின்னர் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொண்ட சிங்கள அதிகார வர்க்கம் ஏனைய தேசிய இனங்களை சமமான பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளாதது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான யோதிலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்.

கேள்வி:
இலங்கையின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகின்றது. அன்று முதல் இதனை ஒரு கரிநாளாகவே தமிழ் மக்கள் அனுஸ்டிக்கின்றார்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது அப்போதிருந்த தமிழ் மக்களின் தலைமைகள் தாம் சார்ந்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பிரித்தானியர்களுடன் தீர்க்கதரிசனமான பேரங்களை நடத்துவதற்கு தவறிவிட்டார்களா?

பதில்:
நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றது என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனெனில், அன்றிருந்த தலைவர்களின் தீர்க்கதரிசனம், தூர நோக்கின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். சுதந்திரமடைந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசத்தை வரையறுத்து, அதற்குரிய அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, அதற்குள் சமவாய்ப்புகளைக் கோருகின்ற அரசியலைத்தான் அவர்கள் முன்னெடுத்தார்கள். 1921 ஓகஸ்ட் 15ஆம் திகதி சேர். பொன்னம்பலம் அருணாசலம் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கியதில் இருந்து தொடங்கி, 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாகும்வரை இதுதான் அரசியலாக இருந்தது.

தலைவர்கள் இழைத்த தவறு என்னஅருணாசலம் இறந்ததனால், ஜி.ஜி. பொன்னம்பலம் தான் அதை முன்னகர்த்திச் சென்றார். 1920களில் பண்டாரநாயக்க சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் வந்து அது தொடர்பான கூட்டங்களையும் நடத்தினார். ஆனால் அன்று தமிழ் அரசியல் தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. முழு இலங்கையிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்கள் தான் முக்கியம் என்ற அடிப்படையில் தான் அவர்கள் தங்களின் அரசியலை நகர்த்தியிருந்தார்கள்.

டொனமூர் முதலாவது வரைபில் மாகாண பொறிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மூல பிரதியில் அது வரவில்லை. அந்த மாகாணப் பொறிமுறையைக்கூட அபிவிருத்தி செய்திருக்கலாம். ஆனால் அதிலும் அவர்கள் அக்கறை காட்டவில்லை.

சுதந்திரம் கிடைத்த பின்னர் தமிழரசுக் கட்சிதான் முதன்முதலில் வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகம் என்று வரையறுத்து, அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் போது தான் தாயகம், தேசியம் என்ற சிந்தனைகள் எல்லாம் வளரத் தொடங்கியது. அறிக்கைகள் அனுப்புவது, சட்டத்தரணிகளை பேசுவது என்பதற்கு அப்பால், போராட்டங்களை நடத்துவது என்ற அரசியலை தொடக்கி வைத்தது தமிழரசுக் கட்சிதான். அதற்குப் பின்னர் தான் தமிழர்களின் அரசியல் வீச்சடையத் தொடங்கியது.

தலைவர்கள் இழைத்த தவறு என்னசுதந்திரத்திற்கு முன்னர் 1947இல் வந்த சோல்பரி அரசியல் யாப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் எவற்றையும் பூர்த்தி செய்யவில்லை. எனவே இதை எதிர்க்க வேண்டும் என்று ஜி.ஜி. பொன்னம்பலமும், அவரின் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தீர்மானித்து, இங்கேயுள்ள அரசியல் தலைவர்களிடம் கூறியுள்ளார்கள். நீங்கள் இதை எதிர்த்து நில்லுங்கோ. நான் பிரித்தானியாவிற்குச் சென்று பிரித்தானியப் பிரதமருடன் கதைத்து, அழுத்தங்களைக் கொடுத்து எங்களுடைய அபிலாசைகளைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைச் செய்கிறோம் என்று கூறினார்.

தலைவர்கள் இழைத்த தவறு என்னஆனால் அதற்கிடையில் இங்கிருந்த தலைவர் களுடன் உடன்பாட்டிற்கு வந்து அவர்களின் சம்மதத்துடன், சகல இனங்களும் சம்மதித்தது என்று கூறி சோல்பரி யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இதேபோல் தான் சுதந்திரம் வழங்கும் நேரத்திலும் கூட ஜி.ஜி.பொன்னம்பலம் அதை எதிர்க்க வேண்டும் என்பதில் கடுமையாக இருந்தார். அதற்கிடையில் தமிழர்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து, டி.எஸ்.சேனநாயக்க தன்னுடன் அவர்களைச் சேர்த்ததனால், தமிழ் மக்களின் இந்த அரசியல் கோரிக்கையை அதாவது சமஸ்டிக் கோரிக்கையை அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியாத சூழல் ஒன்று ஏற்பட்டது, எங்களுடைய தமிழ் அரசியல் தலைவர்களுடைய பேரம் பேசும் ஆற்றலும், பலவீனமும் அன்று இருந்தது என்று தான் நாங்கள் கூற வேண்டும்.

கேள்வி:
தமிழ் – சிங்கள மக்களுடைய பிரச்சினைக்கு பிரித்தானியர்களுடைய பிரித்தாளும் தந்திரமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. அதனை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:
பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரம் பல இடங்களில் இருந்ததுதான். இந்த முரண்பாட்டின் வளர்ச்சிக்கு அது பெரிய காரணமாக இருந்தது என்று கூறிவிட முடியாது. துணைக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மைக் காரணம் என்னவென்றால், அனகாரிக தர்மபாலவின் வருகைக்குப் பிறகு சிங்கள பௌத்தம் என்ற சிந்தனை வரத் தொடங்கி விட்டது. அதற்கான ஒரு கருத்துருவாக்கச் செயற்பாடும் இடம்பெறத் தொடங்கியது. இதன்படி இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது. ஏனையவர்கள் வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் அவர்கள் ஒரு தனியான இனமாக, உரிமைகளுடன் கூடிய இனமாக அடையாளம் காணக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். இதன் காரணமாக சிங்கள பௌத்தம் என்ற சிந்தனை வரத் தொடங்கியது. இதற்கும் அப்பால் வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டு அரசர்களின் படையெடுப்பையும் அவர்கள் ஆதாரமாகக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தார்கள்.

இவை எல்லாம் சேர்ந்து தான் இந்த இனமுரண்பாடு வளர்வதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி:
சிங்கள – பௌத்த தலைவர்களுடைய ஆதிக்க மனோபாவம் உண்மையில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்தான் மேலோங்கியதா? அல்லது அதற்கு முன்னரே ஆரம்பமாகியிருந்ததா?

பதில்:
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஆரம்பித்தது எனக் கூறலாம். 1921 ஓகஸ்ட் 15ஆம் திகதி சேர். பொன்னம்பலம் அருணாசலம் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கியதில் இருந்து தமிழர்கள் மத்தியில் இன அரசியல் வளரத் தொடங்கியது. அதற்கு முன்னர் 1832இல் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்துடன் இலங்கையின் நவீன அரசியல் அறிமுகமானாலும் கூட 1921ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு இன அரசியலை நகர்த்தவில்லை. அரசியல் தளத்தில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையும், பண்பாட்டுத் தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் குறித்தார்கள். அதனால் தான் அன்றைய அரசியல் தலைவர்களான சேர் முத்துக்குமாரசாமி, சேர்.பொன் இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோர் தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை. முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.

அருணாசலம் வெளியேறி தமிழர் மகாஜன சபையை உருவாக்கியதன் பின்னர் தான் தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனியான அரசியல் வளரத் தொடங்கியது. அருணாசலம் இறந்த பின்னர் ஜி.ஜி.பொன்னம்பலம் முன்கொண்டு செல்லும் ஒரு நிலைமை காணப்பட்டது. 1921 ஓகஸ்ட் 15 இன ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லலாம். இன ஒடுக்குமுறைக்கு வயது என்பது 100 வருடங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்.

சுதந்திரம் என்பது தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் என்று சொல்லலாம். சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த ஒடுக்குமுறை என்பது அனுமதிப் பத்திரம் இல்லாத ஒடுக்குமுறை. அதன் பின்னரே அரச அதிகாரத்திற்கு சிங்கள பௌத்த முகம் கொடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். தமிழ் மக்கள் ஒரு தேசமாக வரக்கூடாது என்பதற்காக தமிழ் மக்களின் தாயகத்தை இணைக்கின்ற மையமான மாவட்டமான திருகோணமலையை பறிக்கின்ற முயற்சியில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டார்கள். குடியேற்ற முயற்சிகளையும் அங்கு மேற்கொண்டார்கள். சட்ட ரீதியான விவசாயக் குடியேற்றம், சட்டவிரோதக் குடியேற்றம். இனவழிப்புக் குடியேற்றம் போன்ற அனைத்துவிதமான குடியேற்றங்களையும் பரீட்சித்துப் பார்த்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருந்தது.  தனியே நிலப் பறிப்பு அல்ல. மொழி அழிப்பு, கலாச்சார அழிப்பு என்று தொடர்ந்து 1958 இனக்கலவரம் வருகின்றது.

சுதந்திரம் என்ற அனுமதிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு, ஒரு பஞ்ச இன அழிப்பில் ஈடுபட்டார்கள். இன அழிப்பிற்கான ஒரு அனுமதிப் பத்திரம் என்று இலங்கையின் சுதந்திரத்தைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வி:
சிறுபான்மையினர் குறித்த சிங்கள மக்களுடைய அச்சம்தான் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமா?

பதில்:
தமிழ் மக்கள் குறித்த அச்சம் என்பதற்கும் அப்பால், சிங்கள மக்களுக்கு என்று இருக்கும் நாடு இலங்கை மட்டும் தான். அது எங்களுக்குரியது. அவர்களின் கருத்துருவாக்க வரலாற்றில், புத்தர் பரிநிர்வாணம் அடைந்த காலமும், விஜயன் இங்கு காலடி எடுத்து வைத்த காலமும் ஒரே காலம் என்றும், ஆகவே இலங்கையை ஒரு பௌத்த நாடாக பாதுகாக்க வேண்டும் என்று புத்தர் கூறினார் என்று சொல்லியும் ஒரு கருத்துருவாக்கம் உள்ளது.

சிங்கள பௌத்த கருத்துருவாக்கச் சிந்தனை தான் இதற்குப் பிரதான காரணம். மற்றும் தமிழ்நாடு இருக்கிறதால் அவர்கள் உள ரீதியாக தங்களை சிறுபான்மை என நினைக்கும் ஒரு தன்மையும் இருக்கும். அதுவும் ஒரு துணைக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பிரதான காரணம் இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என்கின்ற நினைவுதான்.

Tamil News