இயற்கையின் அழகுகளில் ஒன்றான மான் இனங்கள் பாதுகாக்கப்படுமா?

IMG 20210809 WA0019 இயற்கையின் அழகுகளில் ஒன்றான மான் இனங்கள் பாதுகாக்கப்படுமா?

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதன்மூலம்  பெருமளவான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரக் கூடிய ஒரு துறையாக சுற்றுலாத் துறை காணப்படுகின்றது.  கடந்த வருடத்திலிருந்து, கொடிய நோயான கோவிட்- 19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக,  இலங்கையின் சுற்றுலாத் துறை முடங்கியிருந்ததைத் தொடர்ந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செழித்து வருகின்றது.

WhatsApp Image 2021 04 21 at 9.47.17 PM இயற்கையின் அழகுகளில் ஒன்றான மான் இனங்கள் பாதுகாக்கப்படுமா?

இலங்கையின் எந்த மாகாணத்திலும் இல்லாத அழகும் பிரமிப்புத் தோற்றமும் கவர்ச்சியும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரில் மட்டுமே உள்ளது.

கிழக்கு மாகாணத்துக்குச் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்களில், திருகோண மலைக்குச் சென்று மான்களுடன்  படம் எடுத்துச் செல்லாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

WhatsApp Image 2021 04 21 at 9.47.18 PM இயற்கையின் அழகுகளில் ஒன்றான மான் இனங்கள் பாதுகாக்கப்படுமா?

திருகோணமலை மாவட்டம், மான்களுக்குப் பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகின்றது. அதிலும், வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் மாத்திரமின்றி உள்ளூர் சுற்றுலா செல்லுவோரும் மான்களை தொட்டு, வருடி, புகைப்படம் எடுத்துக் கொள்வதும் அவர்களுக்கு ஓர் அலாதியே!

இவ்வாறு இருக்கையில், திருகோணமலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில், மான்  கூட்டங்கள் உணவுக்காகப் பிரதான வீதிகளில்  அலைந்து திரிகின்றன. இம்மாவட்டத்தின்,  கோணேஸ்வரர் கோவிலை அண்டிய பகுதியில், நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மான் கூட்டங்களுக்கு, தங்குமிட வசதிகள், உணவுகள் இன்றி, வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் படுத்துறங்கி வருகின்றன.

அத்தோடு, பராமரிப்பின்றி இருப்பதால், பொது இடங்களான பஸ் நிலையங்கள் மைதானம், வீதிகளில் குட்டி  ஈனும் அவல நிலைமையையும் காணக் கூடியதாக உள்ளது. அதேபோன்று, உணவுக்காக நகரத்தை  அண்டிய பகுதிகளில் காணப்படும்  மான் கூட்டங்கள்,  பொலித்தீன் உறைகள், கழிவுகளை உண்டு வருகின்றன.

WhatsApp Image 2021 04 21 at 9.47.21 PM 1 இயற்கையின் அழகுகளில் ஒன்றான மான் இனங்கள் பாதுகாக்கப்படுமா?

திருகோணமலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியிலே அதிகளவான மான்கள் காணப்படுகின்றன. மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள், உணவுகள் இன்மையால்  பொலித்தீன் பைகளை உண்ணுவதால்,  வருடத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நகர சபையால், மான்களுக்கு உணவு, கவனிப்பதற்கான கூடார வசதிகள் கடந்த காலங்களில்  ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பராமரிப்பு இடம், தற்போது பற்றைக் காடுகளாகக் காணப்படுகின்றது. இதனை விசாலமாக்கி மான்களுக்கான உணவு நிலையமாகவும் பராமரிப்பு செயற்பாடுகளுக்கும் பாதுகாப்பதன் மூலம் மான்களின் இறப்பைக் குறைப்பதோடு வளர்ச்சியை விசாலமாக்கலாம்.

மான்களின் பாதுகாப்பு விடயத்தில், அப்பகுதி இளைஞர்கள், சமூக நலன்புரி ஒன்றியங்கள் இணைந்து, மான்களை பாதுகாப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை,  மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று, கடந்த காலங்களில் தனி நபர்களும் மாதக்கணக்கில் தினமும் மான்களுக்கு உணவு வழங்கி வந்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இருந்த போதிலும் சரியான பராமரிப்பின்றி வீதிகளிலே மான்களைக் காணக்கூடியதாக உள்ளது.

WhatsApp Image 2021 04 21 at 9.47.24 PM இயற்கையின் அழகுகளில் ஒன்றான மான் இனங்கள் பாதுகாக்கப்படுமா?

கோவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக,  திருகோணமலை  மாவட்டம் முழுதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை நகரில் அமைந்துள்ள மத்திய வீதி, என் சி வீதிகளில் மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிகின்றன.

திருகோணமலை நகர சபையால் மான்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏதாவது ஒரு வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை ரொட்டறி கழகம், மாதக்கணக்கில் உணவை வழங்கியிருந்தது. இச்செயற்பாட்டுக்கு நாலா பக்கத்திலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குவதையிட்டு வரவேற்பை பெற்றிருந்தது. மான்களின் பாதுகாப்பு விடயத்தில், வனஜீவராசி திணைக்களத்திடமோ  நகர சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ ஒப்படைப்பதற்கோ, ஏன் காடுகளில் விடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மான்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்காமல்,  திகோணமலை நகர சபையால் மான்களைப் பராமரிப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021