யாழில் பிமல் ரத்னாயக்க முன்வைத்த கருத்துக்கு கஜேந்திரகுமார் எதிர்ப்பு

தையிட்டி விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளதாக நயினாதீவு விகாராதிபதியும் யாழ். நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிய பின்னரும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரித்து தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு குரல் கொடுப்பதை யாழ். மே தின கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இனவாதம் என்கிறார்”

“மக்களின் காணியை மக்களுக்கே தெரியாமல் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக பிடித்து கட்டுமானம் ஒன்றை கட்டி அதற்கு திஸ்ஸ விகாரை என்ற பெயரை வைத்துள்ளனர்.
இவற்றையெல்லாம் அறிந்து விட்டு அறியாதவர் போல் தையிட்டி விவகாரத்தில் தமிழ் கட்சி இனவாதமாக செயல்படுகிறது என மேடையில் பேசுகிறார்”.

“தையிட்டியில் மக்களின் காணியை திருட்டுத்தனமாக அபகரித்து கட்டப்பட்ட சட்ட விரோத கட்டுமானத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் நாமும் தமிழ் தேசிய பேரவையும் ஆதரவை வழங்கி அவர்களுடன் நில உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் தையிட்டி காணி அளவீட்டை இனவாத தமிழ் தலைமைகள் குழப்புவதாக ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்.

“மக்களின் காணியை அபகரித்ததை மக்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாத அரசாங்கம் அதற்கு எதிராக மக்களுடன் சேர்ந்து போராடும் எம்மை இனவாதிகள் என்கிறார்கள்” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடினார்.