கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேக நபராக பெயரிட உத்தரவு

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.

அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரைக் குற்றஞ்சாட்டப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும் அவரை விடுவிக்கப் பரிந்துரைப்பது தவறான செயல் என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, தடுத்து வைத்து, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னர் இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அதே வழக்கில் அவரை மீண்டும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக விரிவான வாதங்களை முன்வைத்த சட்டவாதியின் கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சான்றுகள் இருந்தபோதிலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் ஒரு சந்தேக நபரை விடுவிப்பது தவறானது என்றும் நீதவான் தமது உத்தரவில் கூறியுள்ளார்.

அதன்படி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு புதிய குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு, ஜூன் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.