ஜனாதிபதிக்கு கம்பன் விருது வழங்கப்பட்டது – சிவில் சமூக அமைப்புகள் சாடல்

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வு நேற்று (03) வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார். சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.

இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் சேவை ஆற்றிவருவதாக தெரிவித்து ஜனாதிபதி தனது பாராட்டுகளையும் வெளிப்படுத்தினார்.

அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை இதன்போது ஜனாதிபதிக்கு கம்பன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதிக்கு கம்பன் விருது வழங்கப்பட்டமைக்கு சிவில் அமைப்புகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.