பிரகீத் எக்னெலிகொட வழக்கு: புதிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு முன்னர் நாமல் பலல்லே, மஹேன் வீரமன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், நீதியரசர் நாமல் பலல்லே ஒழுக்காற்று விசாரணை காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாலும், நீதியரசர் மஹேன் வீரமன் ஓய்வு பெற்றதாலும் இவ்வழக்கு விசாரணை பல மாதங்களாக தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவினால் புதிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு பெயரிடப்பட்டது.

அதன்படி, நயனா செனவிரத்ன, நளின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (04) அழைக்கப்பட்டது.

இந்த வழக்கு முன்னர் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசாரிக்கப்பட்ட போதிலும், நேற்று அது கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வசித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்ட போது, அதனை எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி முதல் வாராந்தம் விசாரணைக்கு எடுக்க நீதியரசர்கள் குழு தீர்மானித்ததுடன், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இரு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை விடுக்கவும் உத்தரவிட்டது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக இலங்கை இராணுவத்தின் கிரித்தலை முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கேர்னல் ஷம்மி அர்ஜுன குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.