தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.
நேற்று (04) கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமன்றி, முழு எதிர்க்கட்சியினதும் தலைவராகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.



