வடக்கு கிழக்கில் எதற்காக சிங்கள அதிகாரிகள்: மத்திய அரசாங்கத்தில் சிங்களவர்கள் மட்டும் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கருதினால், வடக்கு கிழக்குக்கு எதற்காக சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்பட்டதன் காரணமாக இந்த நாடு 30வருடத்திற்கு மேலாக ஒருபோரினை சந்தித்தது. அதனால் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இந்த நாடு இழந்திருக்கின்றது.
இருந்த போதிலும் 2009ஆம் ஆண்டு அந்த போர் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அந்த போர் எதற்காக தொடங்கப்பட்டது, எப்படி தொடங்கப்பட்டது என்பதற்கு உதாரணமாக இந்த அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள் தமிழ் மக்களை அடக்கியொடுக்கி துன்புறுத்தும் செயற்பாடுகள் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
கடந்த வைகாசி 11ம் திகதி பொதுச் சேவை ஆணைக் குழுவானது திட்டமிடல் பிரிவில் அதிகாரிகளாகக் கடமை புரிந்தவர்களை நேர்முகப் பரீட்சைகள் மற்றும் சேவை மூப்பின் அடிப்படையில் அவர்களுக்குப் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு கொடுத்து பொது நிர்வாக அமைச்சிற்கு பத்து அதிகாரிகளைச் சிபாரிசு செய்திருந்தது. பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் ஐவர் சிங்களவர்கள், நால்வர் தமிழர், ஒருவர் முஸ்லீம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப் பட்டிருந்தார்கள்.
பொது நிர்வாக அமைச்சு இந்தப் பத்துப் பேருக்கும் கடந்த ஓகஸ்ட் 07ம் திகதிக்கிடையில் அவர்களது கடமைகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்த அமைச்சுகளில் பொறுப்பேற்கும் படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதில் சிங்களவர்கள் ஐவரும் எவ்வித தடையும், இடையூறுகளுமின்றி தங்களது கடமைகளை தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அமைச்சுகளில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
ஆனால் ஏனைய தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐவரும் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற இடத்தில் ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இவர்களை பதவியேற்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கு சிங்கள மொழி மூலம் தான் நிருவாகம் செய்ய வேண்டும் அதனால் அந்த அதிகாரிகள் தகுதியற்றவர்கள் என்ற காரணம் அமைச்சுக்களின் செயலாளர்களால் கூறப்பட்டிருக்கின்றது.
இந்த நிகழ்வானது திட்டமிட்ட ஒன்றாகவே இவ்வாறு பதவி உயர்வு பெற்ற தமிழ் அதிகாரிகளுக்கு நடைபெற்றிருப்பதாகவே நான் அறிகின்றேன். இது வெறுமனே அமைச்சுக்களின் செயலாளர்களால் மாத்திரம் இடம்பெற்றிருக்க மாட்டாது. இவர்களுக்கு யாரோ மேல் அதிகாரியோ, அரசியல்வாதிகளோ பதவி உயர்வு பெற்ற பத்துப் பேரில் சிங்களவர்களைத் தவிர்த்து மிகுதி தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் ஐந்து பேரையும் தங்கள் பதவிகளைப் பொறுப்பெடுப்பதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தல் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
இந்த நாட்டிலே கடந்த கால யுத்தங்கள் நடைபெற முன்பு எந்த திணைக்களங்களை எடுத்துக் கொண்டாலும் தமிழ் அதிகாரிகள் தான் தலைமைப் பொறுப்புகளில் இருந்த வரலாறுகளே இருக்கின்றது. இதன் பின்பாடு நிருவாக பொறுப்புகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுகளிலும் பல்வேறு இடையூறுகள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகத்தான் இந்த நாட்டிலே போர் மூண்டது, இத்தனை அழிவுகளையும் இந்த நாடு சந்தித்தது என்ற பட்டறிவை இந்த அரசு கொண்டிருந்தாலும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு தமிழ் பேசும் மக்களைத் தள்ளுவதற்கான ஒரு உத்தேசமாக இருக்கின்றதோ என்று எண்ணத் தோணுகின்றது.
இது சிங்கள தேசம் என்ற சிந்தனையில் சிங்களவர்களைக் கொண்டுதான் அரசியல் ரீதியதாகவும், நிருவாக ரீதியாகவும் இந்த நாட்டை நடத்தப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையாக தமிழ் பேசும் வாழும் பிரதேசம் உங்களுக்குத் தேவையில்லையா? அல்லது எதிர் காலத்திலும் தமிழ் பேசும் மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கப் போகின்றீர்களா?
மத்திய அரசாங்கத்திலே சிங்கள மொழி மூலம் தான் நீங்கள் நிருவாகம் செய்ய வேண்டும். சிங்களவர்களைக் கொண்டு தான் நீங்கள் நிருவாகம் செய்யப் போகின்றீர்கள் என்றால் வடக்கு கிழக்கிற்கு எதற்காக நீங்கள் சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றீர்கள். 98 வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்களவர் ஒருவரைப் பிரதம செயலாளராக நியமித்திருக்கின்றீர்கள். வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலே சிங்கள அரச அதிபர்களை நியமித்திருக்கின்றீர்கள். 75 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் தொடர்ச்சியாக சிங்களவர் ஒருவரையே பிரதம செயலாளராக வைத்திருக்கின்றீர்கள்.
தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது?
எனவே இவ்விடயமானது இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அறிகுறியாகவும், மீண்டும் ஒரு போரை ஏற்படுத்துவதற்குமான எத்தனிப்பாகவுமே தென்படுகின்றது.
இன்று பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் தங்கள் வேலை செய்த இடங்களில் விடுவிப்பினைப் பெற்று மத்திய அரசின் கீழ் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக பொது நிருவாக அமைச்சிலே வெறுமனே கையெழுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றார்கள்.
எனவே அந்த உயர் அதிகாரிகளை தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று அவர்களது கடமைகளைச் செய்ய விட வேண்டும். அல்லது வடக்கு கிழக்கிலே இருக்கும் சிங்கள அதிகாரிகளை அங்கே எடுத்துவிட்டு இவர்களை வடக்கு கிழக்கிலே அவர்களது கடமைகளைச் செய்வதற்கு வழிவகுக்க வேண்டும்” என்றார்.