எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம் – துரைராஜா ரவிகரன்

151 Views

அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்: வடக்கு கடற்பகுதி கடந்த சில தினங்களாக ஒரு கொதி நிலையில் காணப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ஊடுருவல்தான் இந்த நிலைமைக்குக் காரணம். வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதுடன், அவர்களுடைய வளங்களும் பறிபோகும் ஒரு நிலையில், அதற்கு எதிராக அவர்கள் கொதித்தெழுந்திருக்கின்றார்கள்.

இந்த மீனவர்களுடன் இணைந்து அவர்களுடைய போராட்டங்களில் முன்னணி யிலிருந்து வழிகாட்டலைச் செய்துவரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் அவர்கள் இது குறித்த கருத்துக்களை உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வின்  செவ்வியின் போது பகிர்ந்து கொண்டிருந்தார். அவரின் கருத்துக்களில் சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.

கேள்வி:
இந்திய மீனவர்களின் ஊடுருவலால் கடந்த சில தினங்களில் முல்லைத்தீவு மீனவர்கள் எவ்வாறான ஒரு நெருக்கடியை எதிர் கொண்டிருக்கின்றார்கள்? அங்கு என்ன நடைபெறுகின்றது எனக்கூறுவீர்களா?

பதில்:
மீனவர்களுடைய வாழ்வாதாரம் 2009இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் மிக மோசமான நிலையில் உள்ளது. அத்துடன் தற்போது மிகமோசமான பாதிப்பை மீனவர்கள் எதிர்கொள்கின்றார்கள். தென்னிலங்கை மீனவர்களின் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமைட் வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பதால், மீனினம் அழிக்கப்படுவதும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சரோ, கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையினரோ கண்டு கொள்ளாமல் இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்திய மீனவர்களின் வருகை பாண்டிச்சேரி மீனவர்கள் என்று சொல்கின்றனர். மீனவர்கள் தங்கள் இழுவைப் படகுகளைக் கொண்டு வந்து யாழ்ப்பாணம் தீவகத்திலிருந்து முல்லைத்தீவுக் கடற்பகுதி வரை அவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று, நேற்று முன்தினம் முப்பது இழுவைப் படகுகளுக்கு மேல் கூட்டம் கூட்டமாக இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் இழுவைப் படகுகளினால் எங்களது மீனவர்களின் வலைகள் பாதிக்கப்படுகின்றது. மிகவும் கஸ்டமான நிலையில் கடன்பட்டு மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில், இவ்வாறான நடவடிக்கைகளால் மிகவும் கொதித்துப் போயுள்ளார்கள். இதனாலேயே முல்லைத்தீவு மீனவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வந்தால், அடிப்போம். தாக்குவோம் என்று கூறியிருந்தார்கள்.

அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்இவ்வாறு அவர்கள் கரைக்கு வரும் போது இந்தியக் கடற்படை என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றது. இலங்கைக் கடற்படை என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றது. தங்களின் எல்லைகளை பாதுகாக்காது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால், நாங்கள் என்ன செய்வது? வடபகுதி மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து மேற்கொள்ளும் திட்டங்களா என எங்கள் மீனவர்கள் யோசிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எல்லை தாண்டி ஒரு கடலுக்குள் கப்பலோ அல்லது படகுகளோ வராமல் தடுப்பது யாரைச் சார்ந்தது?

இது தவிர 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்திய இழுவைப் படகுகள் எங்கள் எல்லைக்கு வருவதற்கு எதிரான நடவடிக்கை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நிறைவேற்றியிருந்தார். அந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சருக்கு உள்ளது. இந்தச் சட்டத்தை நிறைவேற்றினாலே இந்திய மீனவர்கள் வந்து எங்கள் கடல் எல்லைக்குள் தொழில் செய்ய முடியாது. இதற்கும் அப்பால், எங்கள் கடல் கரையிலிருந்து அரைக் கிலோமீற்றர், ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இந்திய மீனவர்கள் படகுகள் வந்து நிற்கின்றதென்றால், இலங்கை மீனவர்கள் எங்கு போவது? அவர்களுக்கான வாழ்வாதாரத்தை யார் தருவது? எங்கள் பிள்ளைகளின் கல்வியை, உணவுத் தேவைகளை யார் பார்ப்பது? 2009 யுத்தம் நடைபெற்ற போதுகூட இவ்வாறான பிரச்சினைகள் இங்கு ஏற்படவில்லை. கட்டுப்படுத்த வேண்டியவர்கள் கட்டுப்படுத்தாது விட்டால், அவர்களும் சேர்ந்து தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா என்பது தான் எங்கள் மீனவர்களின் கேள்வி.

ஒருபுறம் சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமாக சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி, டைனமைட் வைத்து மீன்பிடிக்கும் போது குஞ்சு மீன்கள் அழிந்து போகின்றது. கடற்றொழில் திணைக்களமோ, கடற்றொழில் அமைச்சரோ சரியாக இயங்குவதில்லை. முன்னர் கடற்றொழில் அமைச்சராக விஜிதமுனி சொய்சா இருக்கும் போது, நாங்கள் சுருக்குவலை தொழிலுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டதையடுத்து, அவர் அதை நிறுத்தியிருந்தார். இப்போது தமிழர் அமைச்சராக இருக்கும் போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது மீனவர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். சட்டவிரோத நடவடிக்கைகளை உரியவர்கள் தடுக்க வேண்டும். அல்லது அவர்கள் தங்கள் பதவிகளிலிருந்து வெளியேற வேண்டும்.  ஒரு வாரத்தில் வித்தியாசமான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதாக கலந்துரையாடல் மேற்கொள்ளபட்டுள்ளது.

கடற்றொழிலாளருக்கு மட்டும் பிரச்சினையில்லை. விவசாயிகளுக்கும் பிரச்சினைதான். தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை சிங்களவர்களுக்கு வழங்கி, தமிழ் மக்கள் தங்கள் காணிகளில் வயல் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். முல்லைத்தீவில் ஏன் இப்படி செய்கின்றார்கள் என்று தெரியவில்லை.

இந்த விடயங்களை நேரில்பார்த்து உறுதிப்படுத்துவதற்கு எந்தப் பிரதிநிதிகளும் வந்தாலும் நாங்கள் அவர்களுக்கு உண்மையை விளக்கி உறுதிப்படுத்துவோம் என்று கூற விரும்புகின்றேன்.

கேள்வி:
ஊடுருவும் இந்திய மீனவர்களை இழுத்து வாருங்கள் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த வடபகுதி மீனவர்களைக் கேட்டுள்ளார். அது நடைமுறைச் சாத்தியமானதா?

பதில்:
கடற்றொழில் அமைச்சர் பணித்தால், கடற்படையினர் அவர்களைக் கைது செய்ய வேண்டும். நாங்களே அவர்களைக் கைது செய்வதென்றால், பின்னர் கடற்படை இருக்கத் தேவையில்லை. மீனவர்களே தங்கள் தொழில் பாதுகாப்பிற்காக ஒரு அணியை உருவாக்கலாமே? ஒரு நாட்டில் அத்துமீறிச் செயற்படும் செயற்பாடுகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

கேள்வி:
இந்த ஊடுருவலைத் தடுப்பதற்காக அரச தரப்பால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதனால், பலன் எதுவும் கிடைக்கவில்லையா?

பதில்:
முல்லைத்தீவு மீனவர்களையும், முல்லைத்தீவு விவசாயிகளையும் திட்டமிட்டுத் தாக்குகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலுக்குப் பொறுப்பாக இருக்கின்றவர்கள் அதில் நடக்கும் பிழைகளை தட்டிக் கேட்க வேண்டும். சட்டவிரோத தொழிலை நிறுத்துமாறு நாங்கள் கேட்கின்றோம். இந்திய மீன்பிடிக்கு என்று ஒரு எல்லை உண்டு. 12 தடவைகள் நீதிமன்றத்திலும், காவல்நிலையத்திலும் அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் தற்போது கைது செய்யும் நடவடிக்கைகளை காணவில்லை. முன்னரே நீதிமன்ற அனுமதியை கொண்டு வந்து எங்களிடம் தரும் நிலை உள்ளது.

எங்களுடைய மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குவதற்கோ அல்லது எங்கள் காணிகள் இழப்போ, தொழில் நடவடிக்கைகள் இழப்போ அல்லது எங்கள் மக்களுக்கு அநியாயம் நடக்கும் போது தட்டிக் கேட்பவர்களில் ஒருவராக நானும் நிற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்.

கேள்வி:
இந்திய மீனவர்களின் இந்த ஊடுருவலைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்:
2018இல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் இழுவைப் படகுகளுக்கு எதிரான தொடர்பான ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார். கடற்றொழில் அமைச்சர் அதை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றினாலே இந்தப் பிரச்சினை தீரும். இதை விடுத்து, அமைச்சர் இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து இந்திய மீனவ மக்களையும், எங்களையும் மோதவிடும் செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய மீனவர்கள் தொடர்பாக ஒருவர் என்னிடம் பேசினார். முல்லைத்தீவு கடற்கரையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் காரைக்கால் மீனவர்களே என்றும், முல்லைத்தீவு மீனவர்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவது பிழை என்றும் இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். இது ஒரு உத்தியோகப் பற்றற்ற விடயம். இருந்தாலும் இவ்வாறான அத்துமீறல் நடவடிக்கைகளை அவர்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள். எனக்கு தகவல் அனுப்பிய பிரதியை கடலோரக் காவல்படைக்கும் அனுப்பியுள்ளார்கள்.

1 COMMENT

  1. […] எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்: வடக்கு கடற்பகுதி கடந்த சில தினங்களாக ஒரு கொதி நிலையில் காணப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ஊடுருவல்தான்  […]

Leave a Reply