சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்புத் தலைவர்? – அகிலன்

564 Views

தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் தான் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சிக்குள்ளும் இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்
சுமந்திரன்

கொழும்பில் தனியார்  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, “கூட்டமைப்பின் தலைமைப்பதவிக்கு தான் தகுதியானவர்” என சுமந்திரன் குறிப்பிட்டார். “சம்பந்தனின் தலைமைப் பதவியை அவருக்குப் பிறகு பெற்றுக்கொள்ள சுமந்திரன் தகுதியானவரா?” என்று பேட்டியாளர் கேட்டபோது, “தகுதியானவரா என்று கேட்டால் ஆம் என்பேன்”என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

கடந்த சுமார் இரண்டு தசாப்த காலமாக கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருக்கும் இரா.சம்பந்தன் தற்போது 88 வயதை எட்டியிருக்கும் அதேவேளையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் உட்பட நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாதளவுக்கு உடல்நலன் குன்றியிருக்கின்றார். மூன்று மாதகாலம் தொடாச்சியாக நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்காதிருந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் வந்த போது, சக்கர நாற்காலியிலேயே அவர் வந்திருந்தார். பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்கான சக்தியுடனும் அவர் இருக்கவில்லை.

மூன்று கட்சிகள் இணைந்துள்ள கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த கேள்விகள் எழுவதற்கு அவரது உடல்நிலையும், வயதும் காரணமாக இருக்கின்றது. தனது அடுத்த வாரிசு யார் என்பதை சம்பந்தன் அடையாளம் காட்டவில்லை. அவ்வாறு ஒருவர் உருவாகவும் இல்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பன சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டளவுக்கு மற்றொருவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் தெரிகின்றது.  சம்பந்தனின் அணுகுமுறைகளில் முரண்பாடுகள் இருந்தாலும், கடந்த காலங்களில் தலைமைத்துவ ஆளுமையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்
மாவை. சேனாதிராஜா

தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் மாவை. சேனாதிராஜாவைப் பொறுத்தவரையில், சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைப் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், ஏனைய கட்சிகள் அதனை ஏற்கும் நிலையில் இல்லை. அதனைவிட, தமிழரசுக் கட்சிக்குள்ளும் அவரை ஏகமனதாக தலைவராக ஏற்கும் நிலை இல்லை. கூட்டமைப்பைத் தலைமை தாங்கி நடத்தக்கூடியளவுக்குத் தலைமைத்துவப் பண்பு – ஆளுமை நிரம்பிய ஒருவராகவும் மாவை தன்னை வெளிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. சுமந்திரன் இந்தளவுக்கு தன்னிச்சையாக வளர்வதற்கும் மாவையின் பலவீனங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில்தான், சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் யார் என்ற கேள்வி பலமானதாக எழுந்திருக்கின்றது. சம்பந்தனைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் தெரிவாகவே இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பின்னணியிலிருந்து செயற்பட்ட விடுதலைப் புலிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் தலைவராக வருவதைத்தான் விரும்பியிருந்தார்கள். அதனைவிட, சம்பந்தனுக்கு சவாலாக இருந்த ஆனந்தசங்கரியும் ஓரங்கட்டப்பட்டது தலைமைப் பதவியைத் தொடர்வதில் சம்பந்தனுக்கு எந்த சவாலும் இருக்கவில்லை.

சம்பந்தனுடன் ஒப்பிடும் போது, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் யாரும் அந்த இடத்தை நிரப்பக்கூடியவர்களாக இல்லை என்பது உண்மை. இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்துவது, மொழி அறிவு, அரசியலமைப்பு சட்டவிவகாரங்களைக் கையாள்வதில் திறமை என்பவற்றைப் பார்க்கும் போது சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் சுமந்திரன் இருக்கின்றார் என்பது மட்டும் தலைமைப் பதவியை ஏற்பதற்கான தகுதியாகிவிடாது. சுமந்திரன் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றது கூட, அவரது அணியினராலேயே சந்தேகத்துடன்தான் நோக்கப்படுகின்றது.

இவற்றைவிட, சுமந்திரனின் தனியோட்டம் தொடர்ச்சியாக சந்தேகத்துடனேயே நோக்கப்படுகின்றது. மூன்று கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தாமல்தான் பெரும்பாலான சந்திப்புக்களை அவர் மேற்கொள்கின்றார். முக்கியமான முடிவுகளை எடுத்த பின்னர்தான் பங்களாளிக் கட்சிகள் அவற்றை அறிந்து கொள்கின்றன. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை. சேனாதிராஜா கூட, இவ்வாறான ஒரு நிலையில்தான் இருக்கின்றார்.

தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்
சித்தார்த்தன்

கடந்த வாரம் மாவை, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சம்பந்தனை தனியாகச் சந்தித்து, சுமந்திரன் குறித்து நீண்ட குற்றப்பத்திரிகையை வாசித்திருக்கின்றார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவை எதனையுமே சம்பந்தன் அறிந்திருக்கவில்லை. அவை குறித்து சுமந்திரனை அழைத்து விசாரிப்பதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறான விசாரணை ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வளவுக்குப் பின்னர் கூட, வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீனவர்கள், விவசாயிகள் போராட்டம் தொடர்பில் பங்களாளிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை. சுமந்திரனால் அது தன்னிச்சையாகவே ஏற்பாடு செய்யப்பட்டது. தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துவதற்காக அதனை அவர் ஏற்பாடு செய்திருந்தார். பங்காளிக் கட்சிகள் சுமந்திரன் மீது கடும் சீற்றத்தில் உள்ள நிலையில்தான் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்கும் தகுதி தனக்குள்ளது என அவர் கூறியிருக்கின்றார்.

தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்
செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதற்கு திட்டவட்டமாகப் பதிலளித்திருக்கின்றார். மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய செல்வம் இவ்வாறு கூறினார்:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத் தலைமையாக இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும். சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை”  என்பதுதான் செல்வத்தின் கருத்து.

எது எப்படியிருந்தாலும், சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைப் பதவி என்பது சிக்கலானதாகத்தான் இருக்கப்போகின்றது.

2 COMMENTS

  1. […] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் தான் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  […]

Leave a Reply